Saturday, April 10, 2010
அங்காடித் தெரு - தெரு கோணல்
அங்காடித் தெரு பதிவர்கள் எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடிய படம். நான் கூட என் பிரெண்ட் கிட்ட சொன்னேன் பெரும்பாலும் பதிவர்கள் ஒரு விசயத்தில் ஒத்துப்போவது கஷ்டம் ஆனா எல்லாரும் இந்தப் படத்தில் ஒத்துப்போறாங்க அதுக்காகவே படம் சீக்கிரம் பார்க்கணும் . படமும் பார்த்துட்டேன்.இப்படம் பத்தி நிறையவே எல்லாரும் நல்லவிதமா சொல்லியாச்சு . இப்படத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியா சில எதிர்கருத்துகள் மட்டுமே இப்பதிவில் . படத்தின் சில காட்சிகள் எனக்கும் பிடிச்சது அது எல்லாருமே சொன்னவையே . இனிவாங்க , இதுல எல்லாரும் தலையில் வைத்து கொண்டாடும் அளவுக்கோ ஆகா ஓகோ என்று புகழும் அளவுக்கோ ஏதும் இருப்பதாய் தெரியவில்லை .கதைப்படி திருச்செந்தூர் நாயகி , இட்டமொழி நாயகன் . எனக்குத்தெரிந்து இட்டமொழி அந்த வட்டாரத்திலேயே பெரிய ஊர் . திருச்செந்தூர் இந்த கொடுமையை என்ன சொல்ல .
சென்னையில் ரங்கநாதன் தெருவில் இருக்கும் பெரிய கடைகளில் வேலை பார்க்கும் மக்களில் பெரும்பாலும் தென்மாவட்ட மக்களே . அதற்காக அவர்களுக்கு அங்கே வாழ வழியே இல்லை சோற்றுக்கே பிச்சை எடுக்கும் நிலை, சென்னை ரங்கநாதன் தெரு கடைகளை விட்டால் அவர்கள் பிழைக்கவே முடியாது என்பதுபோல் காட்டிருப்பது அறியாமையின் உச்சகட்டம் .அங்கே வாழ வழி இருக்கு . கொஞ்சம் படித்ததும் அன்றாட வேலைக்கோ , அல்லது வெயிலில் போய் விவசாயம் பண்ணவோ இன்றைய படித்தவர்கள் விரும்புவதில்லை . சென்னையின் நாகரிக வாழ்விற்கு ஆசைப்பட்டு இங்கு வருவோரே அதிகம்.அஞ்சலியிடம் தவறாக நடக்கும் கருங்காலி . இப்படியொரு கொடுமை நடந்த பின் எந்த தென்மாவட்ட பெண்ணும் வேலை செய்யமாட்டா , அவனை அந்த நிமிடமே நாலு கேள்வி நாக்க பிடுங்குற மாதிரி கேட்டு அடுத்த நிமிடமே பொட்டிய கட்டுவா.BE படிச்ச , நாகரிகமா இருக்குற பொண்ணு நானே(நானும் தூத்துக்குடி தான் ) என்னை ஒருத்தன் பஸ்ல இடிச்சா எத்தனை பேர் இருந்தாலும் அவனை நான் திட்ட தயங்க மாட்டேன் , அப்படி இருக்க இந்த மாதிரி கடைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் இப்படத்தில் காட்டப்படுவது போல் ஒன்று நடந்தால் உன் கிட்ட வேலை பாக்குறதுக்கு எங்க ஊர்ல மண்ணு சுமந்து கூட பொலைச்சுப்பேன் என்று சொல்லி நடையை கட்டுவாங்க .ஒரேயடியா கையாலாகத் தனம் மாதிரி காட்டிருப்பது அப்பெண்கலையே அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு .
இந்த காட்சி பத்தி சொல்லியே ஆகணும் . பெண் சார்ந்து அதுவும் பல பெண்கள் நிகழ்காலத்தில் சம்பந்தப்பட்ட ஒன்றை வைக்கும்போது கொஞ்சம் யோசிச்சா நல்லா இருக்கும் . இனி நம்மை கடந்து போகும் பெரிய கடைகளில் வேலைபார்க்கும் பெண்களின் ID CARD மேல் நம் கண் தானாய் போகும் இப்பெண் எக்கடையில் வேலை பார்ப்பாள் இவளுக்கும் அந்த மாதிரி நடந்துருக்குமா என்று நாம் மனம் ஒரு நொடியில் பல கேள்விகளை கேட்க்கும் அப்பெண்ணும் அக்காட்சியப் பற்றி தெரிந்த பெண்ணாக இருந்து நம் முகத்திலிருந்தே அக்கேள்வியை அவள் உணரும் பட்சத்தில் அவளுக்குள் எவ்வளவு கூனிகுருகிப்போவாள். நிஜத்தை காட்டுறேன்னு சொல்லி உயிரோடு இருக்குறவங்கள ரணப்படுத்துற மாதிரி இருக்கு .இப்படத்தில் வரும் அண்ணாச்சி பேசாமல் அவருக்குப் பதில் சாலமன் பாப்பையாவை நடிக்க வைத்திருக்கலாம் . அவர் பேசும் காட்சியில் எல்லாம் எனக்கு பாப்பையாதான் நியாபகம் வந்தார் . அவர் பேசுறது தென்மாவட்ட வட்டார மொழியா ? எங்க போய் சொல்ல .அண்ணாச்சி , பாப்பையா குரல் வித்தியாசம் ஒன்னுமேத் தெரியல . அடுத்து இப்படத்தின் வசன கர்த்தாவிர்க்காகவே படம் பார்த்தோர் ஏராளமாம் நல்ல காமெடி .
மதுரைனா அவிங்க இவிங்க , தூத்துக்குடி , திருநெல்வேலினா ஏல இது சேர்த்து வசனம் எழுதினா உடனே அது மதுரை படம் தூத்துகுடிப்படம் என்று ஆகுமா? இந்த இரண்டு வார்த்தைகள் தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் சில வார்த்தைகள் பேசும் முறைகள் இருக்கின்றன . இப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஏல போட்டே கொன்னுட்டாங்க , சலிப்புதான் வந்தது . ஏல மக்கா , என்னடே , மச்சான், மாப்ள இன்னும் உண்டு இதெல்லாம் மிஸ்ஸிங் . இது தூத்துக்குடி மக்கள் பேசுற கதைன்னு சொல்லிட்டாங்க போல வார்த்தைக்கு வார்த்தை ஏல (முடியல ). உணவுக்கூடம் மிகைப்படுத்துதலின் உச்சகட்டம் , முதல் காட்சியில் அடிபிடி சண்டை அடுத்தடுத்த காட்சிகளில் அமைதியாய் சாப்பிடும் உணவுக்கூடம் ??????????? தற்கொலை செய்யும் பெண்ணின் காதலன் பரதேசிப்போல் இங்க எந்த கடையிலையும் வேலை செய்ய விடாம பண்ணிட்டாங்க என்று சொல்லும்போது ஒன்னும் புரியல . ரங்கநாதன் தெருக் கடைகளை விட்டால் சென்னையில் வாழ வழியே இல்லையா ? இதே போன்று நாயகன் விரட்டப்படும்போது உன் கடை இல்லேனா வேற ஒன்னு இதே தெருவில் வாழ்ந்து காட்டுறேன் .(தன்னம்பிக்கை வசனங்கள் காட்சிகள் நாயகனுக்கு மட்டுமேவா) நாயகன் போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது "அவன் ரொம்ப விவரமா பேசுறான் பேசாம விட்டுரலாம் "உண்மையில் இப்படி நடக்குமா ? விவரம் தெரிஞ்சவன வெளில விட்டு வேடிக்கை பார்ப்பாங்களா பெரிய இடத்து ஆளுங்க ?
சரி ஒருவழியா இரண்டு பேரும் வெளியில வந்தாச்சு சுய வியாபாரமும் பெரியவர் புண்ணியத்தில் பண்றாங்க இதை அப்படியே முடிச்சுருக்கலாம் பணம் குடுத்து படம் பார்க்க வருபவர்களை இதற்குமேல் கனப்படுத்திருக்க வேண்டாம் . இரண்டு பேரும் ஒன்னாதான் தூங்குறாங்க அஞ்சலிக்கு மட்டும் கால் இரண்டும் எடுக்கும் நிலை பையனுக்கு அந்தளவு ஒன்னும் ஆகல , ஏங்க இப்படி ? ஒன்னு பொண்ணு சாகனும் இல்லேனா ஏதாவது அவளுக்கு பெருசா நடக்கணும் அப்பதான் படம் பாக்குறவங்க மனசுல படம் நிக்கும் அப்படியா ?இந்த லாஜிக் எப்போ போகும்னு தெரியல . இனி வட்டார மொழியும் அந்தப் பகுதி மக்களின் உண்மையான வாழ்க்கை முறையும் நல்லா தெரிந்த பின் வட்டார மொழி படங்கள் எடுங்க முடியலையா எல்லாருக்கும் தெரிஞ்ச சென்னையிலேயே கதை ஓட்டலாம்.

