என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை சபிக்கிறேன் .ஏதாவது ஒரு வழியில் என் பயணம் நிறைவடைந்திருக்கக் கூடாதா என்று இறைவனையும் சேர்த்தே திட்டி இருக்கிறேன் .ஹாஸ்டல் லீவ் சமயங்களில் வீடு போனாலே ஊராரின் திட்டுகள் விழும் கொஞ்சம் கூட குண்டாகவே மாட்டியா உனக்கு மெஸ் பீஸ் உங்க அம்மா குடுக்கிறதே தண்டம் . இந்த மாதிரியான ஒரு சந்தற்பத்திலேதான் தெரிய வந்தது என் தாய் மூலம். எனக்கும் முன்னே இரண்டு ஆண்கள் ,ஒரு பெண் மூன்றே போதும் என்று என்னை கருவாய் இருக்கும்போதே வேண்டாம் என்று முடிவு செய்து மாத்திரை போட்ட அம்மா .நான் பிறந்து இந்த லோகத்தின் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம்போலும் மாத்திரைகள் என்னை அழிக்கவில்லை.கரு குழந்தையாய் வளர்ந்தபின்னும் பிறக்கும்போது நான்தான் என் தாயை அதிகம் கஷ்டபடுத்தினேனாம். "எத்தனை மாத்திரைமா போட்டே நான் வேண்டாம் என்று" , அம்மா "மூணு போட்டேன் " ஒரே அடியா ஆறு போட்டு என்னை நீ அழித்திருக்கலாம் என்றேன் சாதாரணமாய் . இந்தக் கேள்வி என் தாயை ஏதும் வேதனை படுத்தி இருக்குமோ என்று இப்போது கேள்வி கேட்ட என் மேல்தான் கோவம் வருது .
ஆச்சு மூன்று வயது ,குளத்தில் பெண்களோடு பெண்களாய் அம்மா கதை பேசிக் கொண்டே துணி அலசுகையில் அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டிருந்த நான் மெதுவாய் நீரில் மூழ்கினேன் .திடிரென்று ஒரு கை என்னை தூக்கி விட்டது அந்தக் கைகளுக்கு சொந்தமான அக்காவை பார்க்கும்போதெல்லாம் இவங்க அன்று அங்கு இல்லாமல் இருந்திருக்கலாம் என்று இருக்கும் .சின்ன வயதிலேயே நீச்சலில் நான் ஒரு சூரப் புலி ஆனால் தாமரைப்பூ இருக்கும் இடம் மட்டும் செல்லக் கூடாது என்று பெரியோர் அறிவுரை கூறுவர்.அது உன்னை அருகில் இருப்பது போல் ஏமாற்றும் பறிக்கப் போய் மாட்டி விடக் கூடாது என்று பயமுறுத்துவர். நிஜம் என்னவென்றால் தாமரைக் கொடி நீளம் அதிகம் பல தாமரைகள் இருக்கும் இடம் போய் கால் மாட்டிக் கொண்டால் வெளியே வருவது கஷ்டம் .வெண்ணிற தாமரை பல இருந்தாலும் செந்தாமரைக்கு மவுசு அதிகம் .அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டுமே செந்தாமரை தெரியும் . குளம் வற்றிப்போன காலங்களில் குளத்தின் மேடு பள்ளங்கள் நன்கு தெரியும் அதுவே நீர் நிறைந்திருக்கும் காலங்களில் ஆழம் அதிகமாய் இருக்கும் .அக்கா செந்தாமரை வேண்டும் என்று கேட்ட சின்னப் பெண்ணை (இப்போ இரண்டு குழந்தைகளுக்கு தாய் ) முதுகில் வைத்துக் கொண்டு தாமரை அருகில் போனபின்பே தெரிந்தது அந்த இடத்தின் ஆழம் கூடவே என் கால்கள் மெதுவாய் தாமரைக் கொடியினுள் மாட்டியதும் .முதுகிலோ சின்னப் பெண் எவ்வளவுதான் நீச்சல் தெரிந்த ஆளாய் இருந்தாலும் ஆழம் அதிகம் என மனது ஒரு கணம் உணர்ந்தபின் கைகள் நீந்த மறுக்கும்.இன்று சிவலோக பதவிதான் என்று நினைத்துக் கொண்டு நீந்தத் தொடங்கினேன் என்னை நம்பி இன்னொரு உயிர் இருக்கிறதே தனி ஆளாய் நீந்துவதே பெரிய விஷயம் .அன்று எங்களுக்கு நாள் குறிக்கப் படவில்லை என்பது கரைக்கு வந்தபின் புரிந்தது .அந்தப் பெண்ணையும் ,நான் மாட்டிய இடத்தையும் பார்க்கும்போதெல்லாம் தாமரைக் கொடி என் கால்களில் சுற்றுவதை உணர முடிகிறது .
பொங்கல் திருவிழா தெரு குழந்தைகள் எல்லாம் மொத்தமாய் சாஸ்தா கோவில் போய் விளையாடுவது வழக்கம் .அந்த வருடம் சின்ன மாறுதல் இன்னொரு இடம் விளையாட முடிவானது .அது ஒரு பெரிய கணவாய் எட்டு மடைகள் கொண்டது ஒருஒரு ஷட்டர் 8 அடி நீளம் கொண்டது .இரண்டு மூன்று ஷட்டர்கள் மட்டுமே எப்போதும் திறந்திருக்கும் அதுவும் ஒரு 3 அடி உயரதுக்கே அந்த அளவிற்கே தண்ணீர் சிறிது தொலைவில் ஆள் உயரத்துக்கும் அதிகமாய் போகும் .ஷட்டர் முன்னால் போய் தண்ணீரின் வேகத்தில் ரோட்டைக் கடந்து அடுத்த பக்கம் வருவதே விளையாட்டு .நான் சின்னப் பெண் என்பதால் எனக்கு அனுமதி இல்லை ,மற்றவர் வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒரு ஷட்டர் அருகில் நின்று கொண்டிருந்த என்னை தண்ணீரின் வேகம் இழுத்துச் சென்றது .அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்த எழுந்திருக்க முடியாமல் என் கைகள் பாசி படர்ந்த தரையை தேய்த்துக் கொண்டே போகின்றன .ஷட்டேரில் இருந்து சில மீட்டர் வரைக்குமே கான்கிரீட் போட்டு தரை சமதலமாய் இருக்கும் அதற்கு மேல் கொஞ்சம் கரடு முரடான தரையும் ஆழமும் அதிகம் .நீண்ட கருகரு தலைமுடி தண்ணீருக்கு மேலே தெரிய என் தலைமுடி பிடித்து தூக்கினான் சித்தப்பா பையன் .அன்று மட்டும் அவன் என்னை கவனிக்காமல் விட்டிருந்தால் சில நேரத்திலேயே நான் மிதந்திருப்பேன் .வழியிலேயே பல மீன்களுக்கு இறையாகிருப்பேன் அதற்கும் தப்பிப் பிழைத்திருந்தால் அனாதைப் பிணமாய் அடக்கம் செய்யப்பட்டிருப்பேன் . அந்த இடத்தை எப்போதாவது தாண்டிப் போகையில் தண்ணீரின் வேகம் என் கால்கள் உணரும் விரல்கள் நக இடுக்குகளில் பாசி இருக்கிறதா என்று தடவிப் பார்க்கும் .
காலேஜ் வந்தாச்சு ஹாஸ்டலில் இருந்து மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்து என்பெயரும் இந்த வீட்டு ரேஷன் கார்டில் இருக்கிறது என்று நினைவூட்டி விட்டு மீண்டும் ஹாஸ்டல் போக நெல்லை பேருந்து .பேருந்தோ நிரம்பி வழிய அதை விட்டால் நான் மாலை 6 மணிக்கு முன்பு ஹாஸ்டல் போவது கஷ்டம் .வேறு வழியில்லை ஏறியாச்சு படியில் பயணம் .நெல்லை -திருச்செந்தூர் சாலையில் பல திருப்பங்களும் ஒடுகலான வளைவுகளும் சாலையும் உண்டு . ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் வந்த பஸ் ஒன்று அதிகாலையில் விபத்துக்குள்ளாகி சேற்றுவயலில் விழுந்ததில் மூன்று பேர் பழி .அந்த வளைவில் ஒரு பஸ் மட்டுமே செல்ல முடியும் பஸ் போகும்போது சரியாய் பிடித்துக் கொள்ள வேண்டும் அன்று படியில் நின்ற நான் அந்த வளைவில் பிடியை விட இன்றோடு நம் கதை முடியப் போகிறது என்று கண்ணை மூடினேன் .பக்தர்களின் பேச்சோடு நாளை என் பெயரும் இந்த மக்கள் பேசும் வரலாறாய் மாறப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன் .நொடி நேரத்தில்தான் மனம் எவ்வளவு தூரம் பயணிக்கிறது .எனக்கும் கீழ் படியில் நின்றவர் குறுக்காய் கைகளை நீட்டி கம்பியை பிடிக்க அவர் கையில் என்னைத் தாங்கி காப்பாற்றினார் .பயணம் செய்தது முன்படி கீழே விழுந்திருந்தால் நடுவீல்,பின்வீல் என்று கோரமான ஒரு சாவு நடந்திருக்கும் .அடுத்த நாள் பேப்பரில் முகம்கூட தெரியாத அளவில் ஒரு புகைப்படமும் வந்திருக்கும் .அன்றில் இருந்து படிக்கட்டு பயணம் என்றாலே வேண்டாம் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று நின்றுவிடுகிறேன் .இன்றும் வீடு போக வர என்று என் பஸ் அந்த வளைவில் கடந்து செல்லும்போதெல்லாம் அப்படியே கண்கள் முன்படிக்கு செல்கின்றன .சென்னையிலும் இரண்டுமுறை ரோடு கிராஸ் பண்ணும்போது இரண்டுபுறமும் உரசிக் கொண்ட வாகனங்கள் அதன் பின் பார்த்து பார்த்தே ரோடு கடக்கிறேன் .இன்னும் எத்தனை அபாயங்கள் இருக்கின்றனவோ வாழ்க்கை எனும் சாலைப் பயணத்தில் .
