நல்லா படிச்சு ஒரு டிகிரி வாங்கியாச்சு படிப்புகேத்த வேலைக்கும் போயாச்சு , கைநிறைய சம்பாதிக்குறோம் நினைச்சத வாங்குறோம் இல்ல லோன் போட்டாவது கார் வீடுன்னு வாங்குறோம் .புதுப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்துல பார்த்துடுறோம் . இதிலெல்லாம் மனசு திருப்தி அடையுதா ? முழுமையான சந்தோசம் கிடைக்குதா? சின்ன வயசுல ஆசைப்பட்ட குச்சி மிட்டாய் வாங்கித் தின்னும்போது இருந்த அந்த சந்தோசம் இப்போ கிடைக்குதா ? இல்ல . போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து . நமக்குள்ள அந்த போதும் என்ற இடம் வருவதேயில்லை . ஓடுறோம் யாரையோப் பார்த்து எதையோத் தேடி ஓடுறோம் , நம்ம ஓட்டம்தான் நிக்குறது இல்ல . நம்மல்ல பலபேர் நமக்குன்னு வாழுறத விட மத்தவங்களுக்காக வாழுறதுதான் அதிகம் . அடுத்தவன் 500 க்கு செருப்பு வாங்கினா நாம உடனே 1000 க்கு வாங்கிடனும் . எப்படியாவது உன்னைவிட நான் உயர்ந்தவன் என்று சொல்லிக்குரதுல ஒரு பெருமை . எவ்ளோ பணத்துக்கு வாங்கினாலும் அது வீட்டுக்கு வெளிலதான் ,அதனுடைய ஆயுளும் 3 மாதமே. ஏன் இந்த வறட்டு கௌரவம் ?.
ஊரில் இருக்கும் வரை படிப்பு முடியும் வரை வீட்டு கஷ்டம் தெரிந்துதான் வளர்றாங்க. நல்ல வேலை கிடைத்து சென்னை வந்து கை நிறைய பணம் பார்த்ததும் பர்ஸ் நிறைய கிரடிட் கார்டுகள் நிரம்பி வழிகின்றன . சென்னை வருமுன் ஒரு வங்கிகணக்கு இருப்பதே பெரிய விஷயம் . சென்னையில் கால் பதித்ததும் இருக்குற அத்தனை வங்கி கிரடிட் கார்டுகளும் கையில் . நிறைய தேவையில்லாம செலவு பண்ணுறோமோ என்று தனிமையில் இருக்கும்போது மட்டும் வேலை செய்யும் புத்தி , கூட்டம் சேர்ந்ததும் கை தானாய் பணம் அல்லது கிரடிட் கார்டைத் தேடும் . குறிப்பா இந்த ஐடி டீம் ட்ரீட் , பிறந்தநாள் பார்டி , இன்பச் சுற்றுலா என்று யாரோ ஆரம்பித்து வைத்ததை பின்னாடி போய் ஜாயின் பண்ணுறவங்களும் அப்படியே பாலோ பண்ணுறாங்க . நான் ஐடி ல போகாம இருக்குறதுக்கு ரொம்பவே சந்தோசப்படுறேன் . (என் நண்பர்களைப் பார்த்து ). தனக்கு போகவே தானமும் தருமமும் , இங்க நம்ம நிலைமையே டான்ஸ் ஆடும்போது பிறர் முன்பு ஏன் இந்த பொய்யான வாழ்க்கை ? நல்லா டிரஸ் பண்ணலாம் தப்பில்ல , வேலை இடத்துல நாலு பேர் முன்னாடி நாம கோமாளி ஆகக்கூடாது , அதற்காக நான் 1000 ருபாய் சுடிதான் போடுவேனு சொன்னா எப்படி ?
வாங்குற சம்பளம் 15000 (except IT ). தங்குற செலவு , சாப்பாடு , போக்குவரத்து, டிரஸ் etc எப்படியும் ஒரு 8000 காலி . அப்புறம் இந்த கிரடிட் கார்டு சமாச்சாரம் ஒரு 5000 அப்புறம் என்ன தேறும் ? இதுக்கு கண்டிப்பா வேலை செய்யனுமா? வடிவேல் சொல்ற மாதிரி நானும் வேலைக்கு போறேன் நானும் வேளைக்கு போறேன்னு மட்டும் சொல்லிக்கிடலாம் . ஊர்ல என் பிள்ளையும் மெட்ராசுல வேலை பாக்குதுன்னு வெள்ளந்தியா மத்தவங்ககிட்ட சொல்ற பெத்தவங்களுக்கு நம்ம பதில் என்ன ? நிறைய பேர் பிள்ளைங்ககிட்ட பணம் கேட்கவே தயங்குவாங்க , நீ நல்லா கஷ்டப்படாம இருந்தா அதுவே போதும்னு அவங்க மோர் மிளகாய் வச்சு சாப்பிடும்போது இங்க நம்ம பிள்ளைங்க நலாஸ்ல நாலுபேரோட உக்காந்து ஒன்னுமில்லா விசயத்துக்கு எல்லாம் ட்ரீட் குடுப்பாங்க .முதல்ல இந்த பிறந்த நாள் ட்ரீட் தான் என் முதல் எதிரியே .பொறந்தாச்சு அதுக்காக யார்யாருக்கோ ஆயிரக்கணக்குல பணம் செலவு பண்ணி ஒவ்வொரு வருடமும் ட்ரீட் குடுக்கணுமா? இது தேவையான ஒன்றா? என் பிரெண்ட்ஸ் கிட்ட நான் சொன்னேன் " நான் யாருக்கும் ட்ரீட் தரப் போறதுமில்ல யாருடைய ட்ரீட்க்கும் நான் வரப்போரதுமில்லை என்னை கட்டாயப் படுத்தக் கூடாது என்று " அதுபோலவே நானும் போகல , குடுக்கவும் இல்ல . என் பிறந்த நாளுக்கு ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு பணம் அனுப்பினேன்.என் பிரெண்ட்ஸ் கிட்ட நான் ,நாம நல்லாத்தான் சாப்பிடுறோம் சாப்பாடுக்காக எவ்ளோ பேர் கஷ்டப்படுறாங்க நீங்க இந்த ட்ரீட் க்கு செலவு பண்ணுற பணத்தை அதுக்கு செலவு பன்னுங்கலேன்னு சொன்னதுக்கு கிழவி மாதிரி பேசாத இது ஒரு ஜாலி என்று சொல்லிட்டாங்க .
எனக்கு சின்ன வயசுல ஒரு பழக்கம் உண்டு சாப்பிடும்போது கடைசியில ஒரு வாய் சாப்பாடு மிச்சம் வச்சுடுவேன் இது பல நாள் தொடர ஒருநாள் என் அம்மா என்கிட்டே "காயல்பட்டிணத்துல பொம்பிளைங்க வீட்டு வேலை செஞ்சு பிள்ளைங்களுக்கு சோறு போடுறாங்க நீ கஷ்டபடாம சாப்புடுற திமிர்ல மிச்சம் வச்சு கொட்டுற " இப்படி சொல்லும்போது என் கன்னத்துல அறைஞ்ச மாதிரி இருந்தது . அதுல இருந்து அந்த மிச்சம் வைக்குற பழக்கம் போய்டுச்சு .சோறும் ,பாலும் கிழே கொட்டுறத பார்க்க பிடிக்காது . இது கிடைக்காம எவ்ளோ பேர் ?
சங்கடகரா சதுர்த்தி அன்று கோவில் போனேன் என்கூட வேலை பாக்குற இன்னும் இரண்டு பொண்ணுங்களும் .பிள்ளையாருக்கு பால் அபிசேகம் லிட்டர் லிட்டரா விட்டு நடக்குது . பால் கிழே போயிட்டே இருக்கு நான் அபிசேகம் பார்க்கல மனசுக்குள்ளே பிள்ளையார்கிட்ட பேசிட்டு இருந்தேன் (இஷ்ட தெய்வம் பிள்ளையார்தான் ) "பிள்ளையாரப்பா நீ ஒன்னும் பால் பழம் கேட்கலையே இவங்க ஏன் இத இப்படி விட்டு வீணாக்குறாங்க " இடையில் என்னுடன் வந்த பெண் மதார் அபிசேகம் பாரு , எங்க பாக்குறது மனசு அமைதி வேண்டித்தான் கோவில் போறோம் அங்கயும் இல்லேன்னா என்ன பண்றது . பூஜை முடிந்தவுடன் நான் அந்த பெண்ணிடம் "ஏங்க என்ன டிஸ்டர்ப் பண்ணீங்க நான் பிள்ளையார்கிட்ட பேசிட்டு இருந்தேன் " நான் அவர்கிட்ட என்ன பேசினேன் என்பதை சொன்னதும் அவர் பதில் இங்க நாம பால் ஊத்தினாலும் நீங்க சொல்றவங்களுக்கு (பால் தேவைப்படும் குழந்தைகள் , ஆதரவற்றோர் ) கிடைச்சுட்டுதான் இருக்கும் என்றார் . சாமிக்கு பால் தர தயாரா இருக்குறவங்க தேவைப்படுரவங்களுக்கு குடுக்க தயாரா இல்லைங்க என்று சொன்னதும் என்னை முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க கூடவே அபிசேகம் பார்க்க வந்த சில மாமிகளும் . (நான் கேட்டது ஏதும் தப்பாங்க ). பிள்ளையாரப்பா நீயே நியாயம் சொல்லு .
