சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு மட்டுமே நான் இன்னமும் நின்று கொண்டிருக்கிறேன் அதுவே ரொம்ப நல்லது . இலக்கியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம் நான் .புத்தகக் கண்காட்சிக்கு சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமே போயிருந்தேன் .அங்கு வந்த மத்த பதிவர்கள் எல்லாம் தேடித் தேடி வாங்கிய புத்தகங்கள் பார்த்து எனக்கு மயக்கம் வராத குறைதான் .சரி நாமளும் ஏதாவது வாங்கலாமே என்று சுற்றி வருகையில் கண்ணில் தென்பட்டது ஆதிச்சநல்லூர் நாகரீகம் .என் அம்மா பிறந்த மண் அப்பாவின் மூதாதையர் வாழ்ந்த இடம் .பேருந்தில் நெல்லை நோக்கி செல்லும் போதெல்லாம் ஆதிச்சநல்லூர் கிராமம் அடுத்து நிற்கும் பெரிய மேடு அதில் அரசின் அழிந்து போன எழுத்துகள் தாங்கிய பாதுகாக்கப் பட்ட சின்னம் என்ற பலகை அமைதியாய் ஓடும் தாமிரபரணி என இதற்குள் எத்தனையோ மர்மங்கள் என்னுள் புதைந்துள்ளன தெரிந்துகொள் என்று சொல்லும் . சின்ன வயதில் இருந்தே வரலாறு பாடம் படிக்க பிடிக்கும் அப்படி படித்த வரலாறுகளில் ஆதிச்சநல்லூர் பெயரும் வரும் .அந்த ஆதிச்சநல்லூர் தான் இதுவா என்றும் குழப்பம் வரும் தமிழ்நாட்டில் ஒரே பெயரில் இரண்டு இடங்கள் வேறுவேறு மாவட்டத்தில் உள்ளன .அந்த பாதுகாக்கப் பட்ட சின்னம் பலகை பார்த்த நாள் முதல் இந்த இடம்தான் நாம் வரலாறு பாடத்தில் படித்த இடம் என திட்டவட்டமானது .
புத்தகம் அட்டையைப் பார்த்தவுடனே வாங்கிவிட்டேன் .வாங்கிய பிறகு கூட இருந்த பதிவர்களில் ஏதோ ஒரு குரல் இது தஞ்சை என்று சொல்ல ஏதோ ஒன்று வரலாறு படிக்கிறேன் என்றேன் .காலையில் புத்தகத்தின் பின் அட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரை என்று பார்த்ததும் தான் பசி போன போடம் தெரியவில்லை .மொத்தமே 63 பக்கங்களில் எவ்வளவு விறுவிறுப்பாய் தொலைந்த ஒன்றைத் தேடும் தேடலுடன் காலை உணவையும் மறந்து படித்தேன் . அதில் நான் தேடியது என் முன்னோர்களைத்தான் என்பது பாதியிலேயே தெரிந்துவிட்டது . ஒருவயது வரை திருநெல்வேலி வரத்து கிடையாது எல்லாம் கிழக்கே திருசெந்தூர் வரையே இருக்கும் .கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஒவ்வொரு முறையும் அந்த ரோட்டில் பயணிக்கையில் இதைப் பற்றி என்றாவது ஒருநாள் நாம் தெரிந்து கொள்ளமாட்டோமா என்று இருக்கும் . திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் கருங்குளம் அடுத்து புளியங்குளம் என்று ஒரு இடம் வரும் அதுதான் ஆதிச்சநல்லூர் நாகரீகம் .அதன் அருகிலேயே ஆதிச்சநல்லூர் என்ற கிராமமும் இருக்கும் .அதனை அடுத்த இடங்களில் என் முன்னோர் வாழ்ந்த இடங்கள் .
இன்று அகழ்வாராய்ச்சி துறையினரால் பலகை வைக்கப் பட்டு இருக்கும் இடம் இரண்டு மேடுகள் இருக்கும் நடுவில் திருச்செந்தூர் சாலை போகும் இடப்புறம் தாமிரபரணி ஓடும் .அந்த இடத்தின் அமைப்பை பார்த்து மற்ற இடங்கள் எல்லாம் சமமாய் இருக்க அந்த இடம் மட்டும் மேடாய் இருக்க அருகிலேயே தாமிரபரணி ஓட அடுத்து விவசாய நிலங்கள் இருக்க கண்டிப்பாய் அந்த மேடான பகுதியில் ஒரு அரண்மனைதான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . அது எந்த அளவு நிஜம் என்று தெரியவில்லை . திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரும் வழியில் பாதசாரிகள் தங்கிச் செல்ல என அந்தக் காலத்தில் கற்களாலேயே கட்டப் பட்ட சத்திரங்கள் சில குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கும் .கிருஷ்ணாபுரம் ,அடுத்து இந்திய வானிலை நிலையம் இருக்கும் இடம் ,புளியங்குளம்,ஆழ்வார்திருநகரி ,புறையூர் என்று இன்றளவும் கொஞ்சமும் சிதிலடையாமல் நிமிர்ந்து நிற்கின்றன .அதிலும் புறையூரில் இருக்கும் சத்திரம் ரொம்ப பெருசு உள்ளே தாகம் தீர்க்க கிணறு வரை உண்டு ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கில் படுத்துறங்கும் அளவிலான சத்திரம் அது .
சத்திரங்கள் , நெல்லையப்பர் கோவில் ,கிருஷ்ணாபுரம் ,திருச்செந்தூர் என பெரிய கோயில்கள் நிறைந்த இடம் .எப்போதும் வற்றாமல் ஓடும் தாமிரபரணி செழித்து விளையும் விளை நிலங்கள் சின்ன சின்னதாய் அங்கங்கே தென்படும் சிவன் கோயில்கள் என்று எல்லாம் எனக்கு தெரிய வருகையில் கண்டிப்பாய் அங்கே ஒரு நாகரீகம் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் பல ராஜாக்கள் அந்நிலைப்பரப்பை கட்டி ஆண்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது .அது பொய்யில்லை என்பது ஆதிச்சநல்லூர் நாகரீகம் படிக்கையில் தெரிந்தது .மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அங்கே தமிழர்களின் நாகரீகம் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது . அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆளுயர தாழிகள் ,சின்ன தாழிகள் இன்னமும் எங்கள் வீட்டின் ஓரத்தில் நிற்கின்றன .அந்தக் காலத்தில் என் முன்னோர்களுக்கு சீதனமாய் மாட்டு வண்டிகளில் பெரிய பெரிய குதில்கல்தான்(தாழி இன்றைய வழக்கு மொழி குதில் ) போகுமாம் . என் வீட்டு முற்றத்தின் ஒரு ஓரத்தில் ஒரு இடம் மட்டும் வட்டமாய் இருக்க என்ன அது என்று தோண்டி எடுக்கையில் அதிலும் ஒரு தாழியின் அடிப்பகுதி கிடைத்தது . நான்கடி உயர குதில் அதன் மேல் சின்ன மண்பானை அதன் மேல் சின்ன கலசம் என்று அடுக்கடுக்காய் வீட்டில் அடுக்கி வைத்திருப்பார் அம்மா .ஒவ்வொன்றிலும் ஒருஒரு தானியம் இருக்கும் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது என்று எல்லாம் இன்று ஓரங்கட்டப்பட்டு சணல் மூடைகளும் பிளாஸ்டிக் வாளிகளும் அங்கு இருக்கின்றன . தாழி அடுக்கு முறையும் அதில் அம்மா தானியம் போட்டு வைத்ததும் தற்செயலான ஒன்றாய் இருக்க வாய்ப்பில்லை அது காலங்காலமாய் என் அம்மாவின் அம்மா அவரின் அம்மா என்று அந்தப் பழக்கம் தொடர்ந்திருக்க வேண்டும் .
நான் அரண்மனை என்று நினைத்திருந்த இடம் இறந்தவர்கள் புதைக்க பயன்பட்ட இடம் என்று புத்தகத்தில் இருக்கின்றது . இன்னமும் எனக்கு அதன் மேல் நம்பிக்கை வரவில்லை . அந்த இடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் தோண்டி எடுக்கப்பட்ட பல பொருட்கள் பெர்லின் ,பாரீஸ் பழம்பொருட் காட்சியகத்தில் அலங்கரிக்கின்றனவாம் திருட்டு ஆங்கிலேயர்கள் . பின்னாளில் எடுக்கப் பட்ட பொருட்கள் எழும்பூர் பழம்பொருட்காட்சியில் இருக்கின்றனவாம் நேரில் போய் பார்க்க வேண்டும் .மேட்டை பார்க்கும்போதெல்லாம் இதை எப்பொழுது தோண்டுவர் ஆராய்ச்சி செய்வர் இதனுள் உறங்கிக்கிடக்கும் மர்மங்கள் என்னென்ன என்று இருக்கும் . ஆராய்சிகள் நடந்திருக்கின்றன ஆனால் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பது மட்டும் தெரிகிறது . புத்தகத்தில் இருக்கும் ஒன்று தங்க பட்டைகள் திருமணத்தின்போது நெற்றியில் அணியும் பட்டைகள் அங்கே கிடைத்திருக்கின்றன .அந்தப் பழக்கம் எனக்குத் தெரிந்து அந்தப் பகுதியில் எந்த சமூகத்திடமும் இல்லை . நூற்றுக் கணக்கான தாழிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே அவை கிடைத்திருக்கின்றன .ஒருவேளை அந்தப் பழக்கம் உள்ள மக்கள் வேற்று இடங்களுக்கு அதன் பின்னர் இடம்பெயர்ந்து விட்டனரா அல்லது அந்தப் பழக்கம் அடியோடு அம்மக்களிடமிருந்து மறைந்து போய்விட்டதா தெரியவில்லை .
இன்னமும் வெளிஉலகில் அறியப்படாத பல ரகசியங்கள் அடங்கியப் பகுதி கால நிலையில் பருவ மாற்றங்களில் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன . அகஸ்திய முனிவர் வழிபட்ட ஒன்பதாவது சிவன்கோயில் ராஜபதி சிவன்கோயில் ,அடுத்து கோயில் என்ற ஒன்றே இல்லாத நிலையில் புளிய மரத்தடியில் அழியாமல் இருக்கும் பெரிய லிங்கம் ,அடுத்து மேற்கே பார்த்த சிவன்(தெய்வங்கள் கிழக்கு பார்த்தே இருக்கும் ) என்று சிவனடியார்களின் திருத்தலமாய் அப்பகுதி இருந்திருக்கிறது . இப்பொழுது ஓடும் தாமிரபரணியின் பாதையே வேறு என்பதும் இந்த மூன்று சிவன் கோயில்களும் பழைய தாமிரபரணி நதிக்கரையில் இருந்திருக்க வேண்டும் என்பதும் எத்தனை பேரால் ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் அதுதான் நிஜம் என்று சொல்லும் பழைய வரலாறு நானும் தேடிக் கொண்டிருக்கிறேன் .
ஆசிரியர் கடைசியில் மண்டையை பிய்க்கும் அளவில் ஒன்றை வைத்துவிட்டார் . கல்கியின் ஒரு நாவலில் அநேகமாய் அது பொன்னியின் செல்வனாய் இருக்க வேண்டும் பழையாறை என்ற ஒரு இடம் வரும் அது இப்பொழுது எந்தப் பெயரில் இருக்கின்றது ?.கல்கியின் நாவல்களில் வந்த இடங்கள் நிறைய இன்று பெயர் மாற்றம் பெற்று வேறு பெயரில் இருக்கின்றன அதில் வரும் ஆற்றின் பெயரை வைத்து அது இந்த நகரமாய் இருக்க வேண்டும் என்று ஊகித்து படித்தேன் .குடந்தை ஜோதிடர் என்று வரும் குடந்தை என்ற இடம் இப்போதும் இருக்கிறதா அல்லது அது இன்று இருக்கும் கும்பகோணமா . பழையாறை என்ற இடம் எங்கே உள்ளது தெரிந்தவர் யாரேனும் சொல்க .
