நீங்க குடியிருப்பது தனி வீடா இல்ல அடுக்குமாடி வீடா . அடுக்குமாடி என்றால் உங்கள் அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் அத்தனை பேரையும் உங்களுக்குத் தெரியுமா ? அவர்களின் முகம் பார்த்த நியாபகம் இருக்கா ? பத்துபேர் நடுவுல உங்களால் அவர்களை சரியாய் அடையாளம் காட்ட முடியுமா ? என்னால முடியாதுங்க . ஒரு பத்து மாதம் பிரெண்ட்ஸ் கூட அப்பார்ட்மென்ட்லதான் தங்கிருந்தேன் . நாங்க ஒரு 5 பொண்ணுங்க . ஒரு ப்ளோர் ல இரண்டு வீடுங்க இருக்கும் . எங்க ப்ளோர் ல இரண்டாவது வீட்ல ஒரு தெலுங்கு குடும்பம் 3 வயசு பையன் அம்மா , அப்பா அவ்ளோதான் . அந்த பையனை நான் 2 முறை மட்டுமே பார்த்திருக்கேன் . மொத்தம் 5 குடும்பம் . அதுல ஒரு குடும்பம் (திருமணமாகி மூன்று வருடம் ஆனவங்க )மட்டுமே எங்ககிட்ட பேசுவாங்க . மத்தவங்க முகம்கூட நியாபகம் இல்லை . எங்களை தப்பித்தவறி படில வச்சு பார்த்துட்டாலே ஏதோ ஜந்து மாதிரி பார்ப்பாங்க . இதுலயும் இந்த அடுத்த வீடு இருக்கே அவங்க 10 மணிவரை தூங்கிட்டு அவங்க வீட்டு பால் , பேப்பர் காணாம போச்சுன்னா உடனே எங்க வீட்டு காலிங் பெல் அடிப்பாங்க . எங்களை பார்த்தா அவருக்கு பால் திருடுற மூஞ்சி மாதிரி இருக்கும் போல , தெலுங்கு பேப்பர் எடுத்து நாங்க என்ன பண்ணப்போறோம் . இப்படி ஒருமுறை அவர் என்னிடம் கேட்க நானும் சரி சின்னக் குழந்த இருக்கேன்னு "do u want milk for ur child " (அவரும் இங்கிலிஷ்லதான் பேசுவாரு ) என்று கேட்டா கதவ சப்புன்னு சாத்திட்டு போயிட்டாரு . (இது 2009 )
சென்னையில் முதல்முதலில் தங்கி வேலை பார்த்தது கொஞ்சம் அவுட்டர் . சைட் பக்கமே அஞ்சு நிமிட நடையில் ஆபீஸ் அவங்க செலவுல எங்களுக்கு வீடு பார்த்து குடுத்தது . அது கொஞ்சம் குடிசைப்புற மக்கள் வாழுமிடம் . நாங்க இருந்த வீடுமட்டுமே பெரிய வீடு பால் காய்ச்சின கையோடு புது மாலையோடு அந்த வீடு எங்ககிட்ட வந்தது . ஓனர் ரொம்ப நல்ல மனிதர் . எதிர்த்த வீடு பக்கத்துவீடு என்று எல்லாருமே நல்லா பழகுறவங்க . கடையில் இருந்து மார்க்கெட் வரையும் ஒருஒரு இடத்துக்கும் கூடவே வந்து வீட்டு சாமான் எல்லாம் வாங்க துணையா இருந்தாங்க . ஓனர் அப்பப்போ வருவார் அவ்ளோதான் . நாங்க நாலுபேர் தங்கிருந்தாலும் ஓனர் என்கிட்டே நல்லா பேசுவார். ஒருமுறை ரொம்ப முடியாம சைட்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன் , ஓனரும் அப்போ வீட்டு பக்கம் உள்ளவங்களோடு தாயபாஸ் விளையாடிக்கொண்டு "என்னமா வந்துட்ட " நானும் உடம்பு சரி இல்லை என்று சொல்லி மேல ரூம் போயிட்டேன் . எவ்வளவோ முயன்றும் வலி தாங்க முடியல கீழ வந்து பக்கத்துக்கு வீட்டு அக்காகிட்ட சொல்றேன் . அரைமயக்கமா போயிட்டேன் உடனே ஓனர் அப்பவே கேட்டேனே சொல்ல வேண்டிதானேனு திட்டிகிட்டே பைக் எடுக்க அவர்தான் அப்புறம் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனார் அங்கே போனா அவ்ளோ கூட்டம் இவர் போய் சொல்லி உடனே ஊசி போட்டு கையோட என்னை மாத்திரையும் சாப்பிட வச்சு மீதம் மருந்துகளும் வாங்கி வீட்ல கொண்டு வந்து விட்டார் .மறுநாள் நான் நேத்து எவ்ளோ செலவானதுன்னு கைல பணத்தோட கேட்க போம்மா நீ பொண்ணு மாதிரி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லி பணம் வாங்கவே மாட்டேன்னு மறுத்துட்டார் . ஒருநாள் ராத்திரி பெல் அடிக்க நானும் பால்கனியில் இருந்து எட்டி பார்க்க நாந்தான் பாப்பா கொஞ்சம் குடிக்க தண்ணீ குடும்மா என்று சொல்லவும் நானும் தண்ணீர் கொண்டு கீழே போனேன் . அங்கே ரோட்ல ஒரு 20 பேர் இருக்காங்க .இவர் மட்டும் நடுவில் . காலையில் என்ன விஷயம் என்று கேட்டா சைக்கிள ல போன ஏதோ ஒரு பொண்ணுக்கு பஸ் ல மோதி அடியாம் அது விஷயமா கொஞ்சம் தகறாரு போல அதை தீர்க்க இவர் வந்துருக்கார் .அப்போதான் சொன்னாங்க இவர் அந்த ஏரியா தாதா என்று . அவ்வளவு பெரிய மனிதர் என்கிட்டே அவ்ளோ சாதாரணமா பழகினார் . எங்க பொண்ணுங்கள கொஞ்ச பசங்க கிண்டல் பண்ணிய செய்தி தெரிஞ்சி (போன் செஞ்சி போட்டு விட்டது நான்தான் )அவனுங்கள அவர் விட்ட ரைடுல எங்க பக்கமே திரும்ப மாட்டாங்க . அவருடைய நல்ல மனசுக்கே அந்த வீடு காலி பண்ணி வரும்போது அவ்வளவு சுத்தம் செஞ்சி வந்தோம் . அதன் பிறகும் நான் இருந்த இரண்டு இடங்களிலும் ஓனர்கள் வழக்கம்போல கறார் பேர்வழிங்க .அவரை மாதிரி இன்னொரு ஓனர் கிடைக்குறது ரொம்ப கஷ்டம் .
