காட்சி 1
எதேச்சையாய் பார்த்தபோதுதான் அந்தக் காட்சி கண்களில் பட்டது .
"எலேய் கீழே விழுந்துருவ எறங்கு " என்ற என் கத்தலுக்கு அவன் துளியும் காதசைக்கவில்லை . "என்ன அத்தை நான் விழலாம் மாட்டேன் " என்று இன்னமும் அந்தக் கிளையிலேயே இருந்து ஆடிக் கொண்டிருக்கிறான் . எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் புளியமரம் . ஒரு காலத்தில் மாலையில் என் விளையாட்டு பொம்மை .மரம் பூ பூத்தாலும் சரி காய் காய்க்கும் காலமானாலும் சரி மரத்தில் ஏறி அதை பறித்து சாப்பிடுவதே வேலை . மரத்தின் அத்தனை கிளைகளும் அதன் வளைவுகளும் அத்துப்படி . கிளை நுனி வரை போய் அங்கே உக்கார்ந்து கொண்டு உதைக்காய் பறிச்சு சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம் . நான் ஏறிய அதே மரத்தில் இன்று அண்ணன் மகன் அதே வயதில் என்ன நான் கீழேயும் அவனை மரத்தின் மேலேயும் பார்க்கும்போது எங்கே விழுந்துருவானோ என்ற பயம் எனக்கு அவனுக்கு அந்த பயத்தில் ஒரு பங்கு கூட சர்வ நிச்சயமாய் இருக்காது. இன்றும் மரத்தின் அருகில் சென்றால் ஏறு ஏறு என்று மனசு காதுக்குள்ளே ரகசியமாய் சொல்லுது . அன்று ஏறிய அதே லாவகமும் பயமின்மையும் இன்று இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே ஒவ்வொரு முறையும் மரத்திடமிருந்து விடை பெறுகிறேன் .
காட்சி 2
வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்தாலே குளம் தெரியும் . ஓடி பிடிச்சு விளையாண்ட காலங்களில் எங்களின் பெரும்பான்மையான பள்ளி விடுமுறை தினங்கள் குளத்திலேதான் கழியும். மணிக்கணக்கான ஆட்டம் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஒவ்வொருவரின் கண்களும் சிவாஜியை போன்று சிவந்திருக்கும் . குளத்துக்கு நடுவில் செல்லும் வாய்க்கால்தான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் .அதுதான் ஆழம் அதிகம் என்பதால் எல்லோருக்கும் விருப்பமான இடம் . அதன் அருகில் இருக்கும் மேடு கரண்டைக்கால் அளவு தண்ணீர் கால்களில் குத்தும் அருகம்புல் என்று நடக்கவே ரம்மியமான இடம் .ஆட்டத்தின் குஷியில் நேரத்தை மறக்க கையில் வேலிகாத்தான் கம்போடு கரையில் நிற்கும் அண்ணாதான் அன்றைய ஆட்ட நாயகனாக இருப்பார் . இன்று அந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடும் குட்டி பசங்க .அண்ணா எங்க வீட்டு குட்டியை தேடிக் கொண்டு வண்டியில் போகிறான் . வண்டி மதகில் நிற்க அண்ணா ஒருபுறம் குளத்தில் இறங்க தூரத்திலேயே அண்ணாவை பார்த்துவிட்டு இன்னொரு கரையில் ஏறிவரும் குட்டி .அண்ணன் கையில் கம்பு இருந்தாலும் அண்ணா நிற்கும் இடத்துக்குதான் அக்காவும் நானும் போவோம் .கம்பில்லாமலே இவன் இன்னொரு கரை ஏறுவதை வீட்டில் இருந்தே பார்த்த எனக்கு இவனுக்கும் ஆட்ட நாயகன் அண்ணன்தான் என்று சிரித்துக் கொண்டே அண்ணனிடம் அடிவாங்காமல் நடந்து வரும் குட்டி பையனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன் .
காட்சி 3
எங்கேயோ போய்விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் அந்த விளையாட்டு காணக் கிடைத்தது . வைக்கப்படப்பை (வைக்கோல் போர் ) சுற்றிக் கொண்டு அப்பாவும் குட்டி பையனும் காளை மாட்டோடு மல்லு கட்டிக் கொண்டு இருக்காங்க .ஒருவழியா குட்டிப் பையன் பிடிச்சுட்டான் மாட்டின் மூக்கணாங்கயிறு ஒரு கையில் இன்னொரு கையில் அதற்கு மேல் விழ வழியில்லாத சாரம் .(சர் வளர்ந்துட்டாரமா ) . நான் ஒருபுறமும் அப்பா இன்னொரு புறமும் வைக்கப்படப்பை சுற்றி மாட்டை வளைக்க வேறு வழியின்றி அது என் கைகளில் தஞ்சம் அடையும் . காளைக்கு பாதி உயரம் கூட இல்லாத நான் அதன் மூக்கனாங்கயிரை எட்டி பிடிக்கும்போது அப்படியே குழந்தை மாதிரி நிற்கும் நிற்காதா பின்னே குழந்தையிலே இருந்தே மடியில் போட்டு வளர்த்தது நானாக்கும் .பிடிச்சு அப்பா கையில் கொடுக்கும்போது இதுக்குதான் என்னை பிடிச்சியா என்பதுபோல ஒரு பார்வை பார்க்கும் .
காட்சி 4
"எலேய் உன் சைக்கிள் அத்தை கொஞ்சம் ஓட்டிட்டு தரவா " இப்படிக் கேட்டதும்தான் அத்தை என்ன விளையாடுறா என்பது மாதிரி அவன் பார்க்கிறான் . சரின்னு சைக்கிள் எடுத்துட்டு ரோட்டுக்கு வந்து டக் அடிச்சு ஏறி ஓட்டினா பின்னாடியே ஓடி வரான் .அத்தே நீ விழுந்துருவ என்று பின்னாடியே கத்தல் வேற . அவனுக்கு எங்கே தெரியும் அதே தெருவில்தான் கல்லில் கால் வைச்சு நான் சைக்கிள் ஓட்டி பழகியது .அத்தை மெயின் ரோட்டிலேயே கை விட்டு சைக்கிள் ஓட்டுவேன் என்பதும் பல சைக்கிள் போட்டிகளில் பரிசுகளை வாங்கியவள் என்ற வரலாறு அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான் . சைக்கிள் பழகிய ஆரம்ப நாட்களில் பள்ளி செல்லும்போது எத்தனை மாடு ,ஆடு மேல் மோதி எத்தனை எத்தனை விபத்துகளை பார்த்திருப்பேன் எவ்வளவு விழுப்புண்களை ஆற்றி இருப்பேன் . இன்னும் ஒரு மாதத்தில் அதே ரோட்டில் அவன் போவான் .ஆடுகளும் ,மாடுகளும் ஜாக்கிரதை சைக்கிள் ஓட்டி வருபவன் என் மருமகன் .
காட்சி 5
அப்பா கூடவே கட்டிலில் சில நேரங்களில் குட்டிமா தூங்கிருவா . அம்மா ,அண்ணா சமயங்களில் நான் என அவளை தூக்கிக்கொண்டு படுக்கையில் போடுவது நடக்கும் . சாப்பிட்டுட்டு முத்தத்துலதானே தூங்கினேன்/ அப்பாகூடதானேகட்டில்ல தூங்கினேன்.அப்புறம் எப்படி காலைல வீட்டுக்குள்ளே இருந்து வரேன் என்ற அன்றைய பல நாள் கேள்விக்கு விடை இன்று கிடைக்கிறது . அன்றும் அண்ணா ,அப்பா ,அம்மா யாராவது ஒருவர் என்னையும் தூக்கிக்கொண்டு போய் கிடத்தி இருப்பர் .
காட்சிகள் அப்படியே உள்ளன கால மாற்றத்தில் அன்று பங்கேற்பாளராய் இன்று பார்வையாளராய் .
