skip to main | skip to sidebar

சொல்லத் துடிக்குது மனசு

Wednesday, September 5, 2012

சிற்பிகள்

இன்றைக்கு ஆசிரியர் தினம்

அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் .

முதன்முதலில் கை பிடித்து சிலேட்டில் எழுதப் பழகித் தந்த பொன்மணி டீச்சர் .சிலேட் முழுக்க முட்டை முட்டையாய் போட்டுக் கொண்டு கொடுக்க அதற்கு பத்துக்கு பத்து போட்டுக் கொடுக்கும் அழகே தனி . எல்லோரும் எழுதப் பழகியபின் தேர்வில் முட்டை வாங்குவர் .என் எழுத்து ஆரம்பித்ததே முட்டையில்தான். என் முதல் ஆசிரியர் அவரே .என் குழப்பமான பெயர் அவருக்குப் பின்னால் வந்த எந்த ஆசிரியருக்கும் அவ்வளவு எளிதில் வாயில் நுழையாது .என் பொன்மணி டீச்சர் மட்டும் நான் காலேஜ் போகும் வரையிலும் எங்கள் பள்ளியிலேயே இருந்ததால் அவ்வப்போது சந்திக்க நேர்கையிலும் என்ன மதார் எப்படி இருக்கே என்று அட்சர சுத்தமாக என் பெயரையும் அத்தனை வருடங்கள் மறக்காமல் உச்சரித்தவர் .

ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலமும் பத்தாம் வகுப்பில் அறிவியலும் எடுத்த லீலாவதி டீச்சர் . அதுவரை தனித்தனி தீவுகளாக இருந்த என் ஆங்கிலம் அப்போதுதான் காலனியாக உருமாறியது . ஒன்பதாம் வகுப்பா லீலாவதி டீச்சர் கூட்டெழுத்து எழுத வச்சே கொன்னுருவாங்க என்று மாணவர்களை தலை தெறிக்க ஒடவச்சவர் . அவரின் கைவண்ணம் இன்று வரை என் ஆங்கிலப் புலமையில் (எழுதுரதைச் சொன்னேங்க ) ஒளிர்கிறது . பத்தாம் வகுப்பில் அறிவியல் ,அவர் பாடம் எடுக்கும் முறையே வேறு .அவரின் புத்தகம் தவிர்த்து அனைவரின் புத்தகமும் மூடப் படும் . எல்லோர் கண்களும் அவரையே பார்க்க அந்த வகுப்பு முடியும்போது அவர் எடுத்தப் பாடமும் அப்படியே மனதில் பதிந்திருக்கும் .சூட்டோடு சூடாக அன்றைய இரவே படித்துவிட்டால் படிக்க என்ன இரண்டு முறை வாசித்தாலே போதும் மனப்பாடம் ஆகிவிடும் .அவ்வளவு எளிமையாக புரியும்படி பின்னாளில் எவரும் பாடம் எடுக்கவில்லை . நானும் பெண்ணாக இருந்த காரணத்தாலோ என்னவோ அவரின் மாணவி என்பதையும் தாண்டி அவரின் ரசிகையாகவே இருந்திருக்கிறேன் . நானெல்லாம் நடந்து வந்தாலே தரை அதிரும் . பொம்பளப் பிள்ளையா அடக்கமா மெதுவா நடந்து வர மாட்டியா என்று எத்தனையோ அறிவுரைகளை அடுத்த நொடியே காற்றில் பறக்க விடுபவள் . இவ்வளவு மென்மையாக எப்படி இவரால் மட்டும் நடக்க முடிகிறது என்று கண் கொட்டாமல் பல நாள் பார்த்திருக்கிறேன் . அவரின் ரசிகையாக இன்னொரு காரணம் அவரின் புடவை .எந்தப் புடவையுமே அவர் கட்டும் நேர்த்தியில் அழகாக மாறிவிடும் . அதையே ரசித்து தோழியிடம் சொல்லி அதை அவரும் பார்த்து பொய் சொல்லத் தெரியாமல் நானும் அவரிடம் உளறி மென்மையாக சிரித்துக் கொண்டே கடந்து சென்றார் .அவரின் சிரித்த முகம்தான் பலருக்கும் பல நேரங்களில் பதிலாக முடிந்திருக்கும் .

அதே பத்தாம் வகுப்பில் வரலாறையும் ,மண்ணையும் அதிகம் ரசிக்க வைத்தவர் செல்வம் சார் . அவர் உடலுக்கும் குரலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்காது .அவர் கீச்சு கீச்சு குரலை வைத்தே மாணவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாவார் .ஆனாலும் எதையும் பொருட் படுத்தாமல் வகுப்பெடுப்பதில் சிறந்தவர் . மாணவர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் .ஒரு பாடம் பிடிக்க அந்தப் பாடம் எடுக்கும் ஆசிரியர் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் என்பதை முதன்முதலில் நான் உணர்ந்தது அவரிடம்தான் . நீ நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் அதுதான் எனக்குப் பெருமை என்று என் மீது அதீத நம்பிக்கை வைத்தவர் . எனக்காக படித்தேனோ இல்லையோ அவரின் நம்பிக்கைக்காகப் படித்தேன் . எத்தனை உலக வரைபடங்களும் ,இந்திய வரைபடங்களும் வைத்திருந்திருக்கிறேன் என்று பத்தாம் வகுப்பு முடியும் போதுதான் தெரிந்தது . எந்த வருடத்தில் என்ன நடந்தது ? எந்தப் பொருள் எங்கே கிடைக்கும் என்று விரல் நுனியில் வைத்திருக்கப் பழகியவர் .இன்றைக்கும் வரலாற்றுப் பாடத்தின் சிலப் பத்திகள் புத்தகத்தின் இடப் பக்கமா வலப்பக்கமா என்று சொல்லும் அளவுக்கு பாடம் எடுத்தவர் . ஸ்டாலினும் , ஹிட்லரும் ,அட்லியும் போலவே என் வரலாற்றில் மறக்க முடியாதவர் செல்வம் சார் .

ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் +1,+2 வகுப்புகள் . டீன் ஏஜ் குழப்பங்களுக்கும் நடுவில் வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுக்கும் முக்கிய காலங்கள் இந்த இரண்டு வருடங்கள் . ஒவ்வொரு பாடத்துக்கும் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் நகரத்து மாணவர்களுடன் போட்டி போட வேண்டிய தருணம் . சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளியில் தடை விதித்திருந்த காலத்தில் +1 விடுமுறையில் எங்களுக்கு (நண்பர்கள் ஐந்து பேர் ) பாடம் எடுக்க முடியுமா என்று வீடு தேடிப் போய் கேட்டவர்களை வெறுங்கையுடன் அனுப்பாமல் அவர் வீட்டில் வைத்து பாடம் எடுத்தவர் இயற்பியல் ஆசிரியர் திருநீலகண்டன் .பின்னாளில் இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்து எங்களால் அவர் குற்றவாளிக் கூண்டில் ஏறியவர். பதின்மத்தின் சில விருப்பங்களில் தடுமாறிய நாட்களில் (தப்பு தப்பா யோசிக்காதீங்க வளையலும் ,ஸ்டிக்கர் பொட்டும்தான்) கவனம் இப்போ உனக்கு படிப்பில் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனையையும் விட வைத்து சந்நியாசி வாழ்கைக்கு மாற வைத்தவர் . கலர் கலரா பொட்டும் ,வளையலும் போடும் பழக்கம் போய் அரக்கு பொட்டுக்கும் வெறுங்கைக்கும் அன்று மாறியவள்தான் இன்று வரை கண்ணாடி வளையல் என் கைகளைத் தொடவே இல்லை .வெறுங்கையுடன் ஒரு வைராக்கியத்தில் இருந்தவள் மூன்று வருடங்களுக்கு முன்புதான் என் சம்பளத்தில் வாங்கிய தங்கச் சங்கிலி அந்த வெற்றிடத்தை நிரப்பி இருக்கிறது .

நீ என்னவாகப் போகிறாய் என்றவரிடம் பொறியாளராய் வரணும் சார் என்று எந்த வாய் முகூர்த்தத்தில் சொன்னேனோ அடுத்த வருடமே பழித்தது . மேற்படிப்புக்கான திட்டமிடல் ,அதைப் பற்றிய தகவல்கள் என்று இயற்பியல் ஆசிரியர் என்பதையும் தாண்டி உற்ற நண்பனாய் தக்க நேரத்தில் வழி காட்டியவர் . சமீபத்தில் பள்ளி விடுமுறை மாதமான ஏப்ரலில் பள்ளியில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . சிறப்பு வகுப்பு போய்க் கொண்டிருந்தது .எங்களுக்கு மறுக்கப் பட்ட ஒன்று இவர்களுக்காவது கிடைத்ததே என்றுதான் அக்கணம் மனதுக்குள் ஓடியது . உங்களை மாதிரி இல்லப்பா இப்போலாம் பசங்க ரொம்ப மாறிட்டாங்க யாரும் சொல் பேச்சு கேட்கிறது இல்லை என்று வருத்தத்துடனே பகிர்ந்து கொண்டார் .கேட்கவே ஒருமாதிரி இருந்தது .வேறு எங்கேயும் பார்க்கக் கூடாது , என்னை பாருங்க என்று பார்வையை அவரை விட்டு அவர் கண்களை விட்டு நகராமல் இருக்க வைத்தவர் . அந்தப் பயிற்சிதானோ என்னவோ இன்றளவும் எதிராளியின் கண்களை பார்த்துப் பேசும் பழக்கம் தொடர்கிறது .சமயங்களில் அது பலரின் இன்னொரு முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது .கூடப் படித்த ஆண் ,பெண் நண்பர்களை ப்பா போட்டு அழைக்கும் பழக்கம் தொற்றியதும் இவரிடமிருந்துதான் . நான் உனக்கு என்ன அப்பாவா என்னப்பா சொல்லுப்பா இப்படியே சொல்ற என்று கடிந்து கொண்ட கல்லூரி நண்பன் (அவனுக்கே இது மறந்து போயிருக்கும் ) உனக்கான பதில் "சாரிப்பா எல்லாத்துக்கும் இவர்தான்ப்பா காரணம் ".

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் (பள்ளி நாட்களில் தவறாமல் ஒவ்வொரு ஆசிரியராலும் உச்சரிக்கப் படும் வாசகம் ) என்னைச் செதுக்கியவர்களில் இந்த நால்வரும் சிற்பிகள் என்று என்றைக்கும் மறக்காமல் சொல்வேன் .


Posted by மதார் at 10:54 PM
Labels: ஆசிரியர், பள்ளி

Monday, August 27, 2012

மனிதர்கள் பல விதம்

ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இன்னபிற சேதிகள் பற்றிய கதைகள்தான் அவை .வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே ஊருக்கு தலையை காட்டும் நான் இப்படித்தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றிய என் விக்கி பக்கத்தை மெருகேற்றிக் கொண்டிருந்தேன் .

"தெரியுமாமா நம்ம மண்டையப் பெரியப்பா இறந்துட்டாரு" - அம்மா

"என்னமா சொல்ற எப்போ இறந்தாரு" - நான்

"நம்ம கோயிலுக்கு மார்கழி மாசம் நோம்பு போட்ருந்தோம்ல அப்போதான் இறந்துட்டாரு .காலைல நாலுமணிக்கு யாருக்கும் சொல்லாம கட்ளோட தூக்கிட்டுப் போய் மதவு பக்கத்துல புதைச்சுட்டானுவ."

"ஏம்மா அப்படி பண்ணாங்க நம்ம சுடுகாட்டுலேயே புதைச்சிருக்கலாம்ல ."

எனக்கு இந்த சாவும் அடக்கமும் புதியதாக இருந்தது .இதுவரைக்கும் இப்படி ஒன்று கேள்விபட்டதே இல்லை .ஊர் சுடுகாடு தாண்டி வேறு எங்கேயும் யாரையும் அடக்கம் பண்ணியதாக நியாபகம் இல்லை .

"எலா கோயிலுக்கு நோம்பு போட்டதுக்கு அப்புறம் ஊருக்குள்ள மேளசத்தம் கேக்கக் கூடாதில்ல . ஒப்பாரியும் வைக்க கூடாது .துஷ்டி விழுந்தா யாருக்கும் சொல்லாம கொள்ளாம இப்படித்தான் அடக்கம் பண்ணனும் .அவரு என்னா ஆட்டம் போட்டாரு கொஞ்சமா நஞ்சமா . அதான் இப்படி செத்து கொட்டு கூட இல்லாம போயிட்டாரு ."

எனக்கென்னவோ துளியும் சமாதானம் ஆகவில்லை .ஊருக்குள் இருக்கும் கோயில்களில் நித்த பூசை உண்டு .ஒரு சாவு விழுந்தாலும் மாலைக்குள் எடுத்துவிட வேண்டும் .எக்காரணம் கொண்டும் கோயில்களில் பூசை நிற்கக் கூடாது .அடக்கம் பண்ணுவதற்கு நேரம் ஆனாலும் பரவா இல்லை ஏழு மணிக்குள் அடக்கமும் கோயிலில் பூசையும் நடந்து விடும் .வெளியூர் ,வெளிநாடு என்று எவரும் போயிருக்காத காரணத்தால் மாலை தாண்டி எந்த வீட்டிலும் பிணம் இருந்து பார்த்ததில்லை .அப்படியே யாராவது வெளியூரில் இருந்தாலும் இழுத்துக் கொண்டிருக்கும்போதே தகவல் போய்விடும் .

ஐந்தாம் வகுப்புவரை உள்ளூர் பள்ளியில் படிப்பு .பள்ளி உணவு இடைவேளையில் இரண்டு கால பொழுதுபோக்கு வயல்களில் நாத்து நாடும் காலங்களில் வாத்து பிடிப்பது .உளுந்து ,பயறு போடும் காலங்களில் பயத்தங்காய் பறிப்பது . இங்கே காராமணி என்ற பெயர் பெற்ற தட்டைப்பயறு எங்கள் வயல் அருகில் ஒரே ஒரு வயலில்தான் போடுவர் .நீளமாக அப்படியே வாயில் வைத்து இழுத்தால் வந்து கொண்டே இருக்கும் .உளுந்தங்காய் அவித்து சாப்பிட மட்டுமே பிடிக்கும் .பச்சையாக ஆசைக்கு இரண்டு வேணா சாப்பிடலாம் .ஆனால் திகட்டாமல் சாப்பிடும் ஒரே காய் பயத்தங்காய் .(பாசி பருப்பு காய் ) . கை நிறைய செய்யது பீடி போல உருவி வைத்துக் கொண்டு அதுவும் ரக ராகமாய் அடுக்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவதென்றால் கொள்ள இஷ்டம் . குளத்தில் எண்ணற்ற வெண்தாமரைகளுக்கு நடுவில் ராணி போல நிற்கும் செந்தாமரை போலவே பயறு போட்ட வயல்கள் உளுந்து வயல்களுக்கு நடுவில் இருக்கும் .அதையெல்லாம் தேடி பிடித்து கண்ணம் வைப்பதும் ஒரு கலை . பள்ளி அருகிலேயே பயறு செழித்து வளர்ந்து இருப்பது நம்ம மண்டைய பெரியப்பா வயல்தான் . ஆசை அத்து மீற கையையும் தாண்டி பாவாடை எல்லாம் பயத்தங்காய் இருக்கும் . இன்னைக்கு செழிப்புதான்னு நினைச்சுகிட்டே வந்தோம்னா சரியா கவட்டை பக்கத்தில் பெரியப்பா காவலுக்கு நிற்பார் .(கவட்டை -ஆடு ,மாடு எதுவும் வயல் இருக்கும் பகுதிக்குள் உள்ளே போகாத படி மனிதர்கள் மட்டும் தாண்டி போகுமாறு குருவி அடிக்க பயன்படுத்தப்படும் வீ வடிவம் பெரிய மரக்கட்டை கொண்டு இங்கே இருக்கும் ). பெரியப்பாவை பார்த்த உடனே கால் வரை நடுங்கும் . பார்க்கத்தான் பெரிய மனுஷன் அவர் வயல் அன்றி ஊடுபயிராய் அங்கங்கே இருக்கும் சிலவற்றையும் சேர்த்து பறித்திருப்போம். அத்தனையையும் எங்களிடம் இருந்து பறித்துக் கொள்வார் . பையன்களின் சட்டை ,டிராயர் பெண்களின் பாவடைகளில் இருந்த எங்களின் மொத்த உழைப்பும் கண நேரத்தில் அவரின் சாரத்துக்கு இடம்பெயர்ந்திருக்கும் .

இப்படி எங்களையே குறி வைத்துக் கொண்டிருக்கும் அவரை எப்படி பழி வாங்குவது ?. அவர் எந்தக் கூடத்தில் இருந்தாலும் சரி எத்தனை பேருடன் பேசிக் கொண்டிருந்தாலும் சரி மொட்டை மண்டையா , அரைக் கை ,முழுக்கை ,வழுக்கை என்று கத்திவிட்டு ஒரே ஓட்டம் எடுப்போம் .அவர் திக்கித் திணறி எங்களை ஏசும்போது அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டோம் . அவர் இடுப்பளவு உயரம் கூட இல்லாத நாங்கள் அவரின் மானப் பிரச்சனைக்கு எதிரிகளானோம் .

கூட்டமாய் இருக்கும்போது அவரை வழுக்கை என்று திட்டியதால் கோயிலுக்கு போகும்போது அம்மா முந்தானைக்குள் தொலைந்து அவர் வாசல் கடப்பேன் .நாளடைவில் அவரின் நடமாட்டமும் குறைந்தது .அவரின் பையன்களும் எங்கே போனர் என்றே தெரியவில்லை . அவர் இறந்த செய்தி கேட்டு அதிலும் அவரின் அடக்க நிலை கேட்டு மனதே ஆறவில்லை . ஊரின் கட்டுப்பாடுகள் மேல் முதல் முறையாக கோவம் வந்தது .ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு பிறகு கிடைக்கும் இறுதி மரியாதை கூட அவருக்கு மறுக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் .சில மாதங்கள் கழித்து ஊருக்கு போகும்போது அவரின் இடிந்த வீடு பார்கையில் என்னவோ மாதிரி இருந்தது .

அரைக்கை
முழுக்கை
வழுக்கை

சத்தமின்றி எனக்கு மட்டும் கேட்டது .


Posted by மதார் at 9:39 PM
Labels: அனுபவம், கிராமம்

Saturday, August 11, 2012

மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்



எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என்றும் சொல்லலாம் .உரிந்து நிற்கும் மெல்லிய பட்டைகள் மற்றபடி வழுவழுன்னு இருக்கும் . அந்த மரத்தின் வயது எப்படியும் நூறுக்கு மேல் இருக்கும் . குளம் வெட்டப்பட்ட ஆண்டு 1886. அதன் கரையில் எங்கள் ஊர் பகுதியில் நான்கு மரங்கள் இன்னமும் நிற்கின்றன .அவற்றில் மூன்று அத்தி மரம் .இந்த ஒரு மரம் மட்டும்தான் அவ்வளவு உயரமானது .

மரத்தின் அடியில் இருக்கும் ஒரு சின்ன பிளவையும் கோயிலாக்கி அருஞ்சுனை காத்த அய்யனாருக்கு வீடாக்கி விட்டனர் .மரத்தின் நல்ல காலம் வீடு இன்னமும் அரண்மனையாக்கப்படவில்லை .ஒரு சிலை மட்டுமே மரத்தின் அடியில் இருப்பதால் மரம் தப்பித்தது .மனிதர்கள் பாதம் தொடர்ந்து பட்டால் அந்த இடத்தில் புல் பூண்டுகூட முளைக்காதே .எந்த நல்ல மனிதரோ அந்த இடத்தில் இரண்டு தலை நாகம் இருப்பதாக வேறு பரப்பிவிட்ட செய்தி மரத்துக்கு கூடுதல் பலம். உண்மையாகவும் இருக்கலாம் மரத்தை சுற்றிலும் சின்ன காடுபோலத்தான் இருக்கும் .

சில சீசன் காலங்களில் எங்கிருந்தெல்லாமோ பறவைக் கூட்டங்கள் குளத்தை நோக்கி அணிவகுத்து வரும் .பெரிய பெரிய கூழக்கடா ,விதவிதமான கொக்குகள் ,நாரைகள் என்று வித்தியாசமான பறவைகள் என பார்க்கலாம் . அப்படி ஒரு சீசனில் அநேகமாய் இந்த மரத்தின் காய்கள் கனியாக மாறும் சமயம் என்று நினைக்கிறேன் ,எண்ணற்ற வௌவால்கள் மரம் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் . மரத்தை அண்ணாந்து பார்க்கும் மனிதர்கள் மரத்தை விட்டு தள்ளி நின்று பார்ப்பது அவர்கள் வாய்க்கு நல்லது .தலைகீழாய் தொங்கியபடி ஆயிரக்கணக்கான வௌவால்கள் கீச் கீச்சென்ற சத்தத்துடன் அந்த இடத்தையே கலவர பூமியாய் மாற்றிக் கொண்டிருக்கும் .

பக்கத்துக்கு ஊர் சில வேட்டையர்கள் துப்பாக்கியுடன் வருவர் (முன்னாடி ). திரும்பிப் போகும்போது கையில் நிச்சயமாய் வௌவால் இருக்கும் .அவை பழங்கள் மட்டுமே உண்டு வாழும் ஜீவன்கள் .. வௌவால் கறி அத்தனை சுவையாய் இருக்கும் .விவரமறியா வயதில் நான் உண்ட இறைச்சிகளில் இதுவும் ஒன்று . எந்த வயதில் கோழி மட்டும்தான் என்று தனிக் குடித்தனம் ஆரம்பித்தேன் என்று எனக்கும் நினைவில்லை . இவையெல்லாம் சாப்பிட்ட காலங்களில் விலாங்கு மீன் ,வௌவால் பிடித்த அசைவ உணவுகள் .இவை இரண்டும் நாம் நினைக்கும் காலங்களில் நமக்கு கிடைக்காது .

சொல்ல வந்த விஷயம் வேறு . இப்படி வௌவால்களுக்கு மட்டுமே சொர்க்க புரியாக விளங்கும் அந்த மரத்தின் காய் எனக்கொரு விளையாட்டு பொம்மை .அதன் காய் வெளியே விரல்களை குவித்து வைத்தால் அப்படியே விரல்களுக்கு உள்ளே அடங்கி விடும் .அதன் பழங்கள் எவரும் சாப்பிட்டு பார்த்ததில்லை . அந்த மரத்துக்கு எங்கள் ஊரில் விளங்கும் பெயர் "மருத மரம் ". எந்த முன்னோர்கள் இந்தப் பெயர் வைத்தனர் என்று தெரியாது .

காலம்காலமாய் விவசாயம் மட்டுமே பிரதானத் தொழிலாய் விளங்கும் வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருதம் பூமியது .

மருத நிலத்தின் கருப்பொருட்கள்

  • தெய்வம்: இந்திரன்
  • மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
  • பறவைகள்: நாரை, குருகு, தாரா, அன்றில்
  • விலங்குகள்: எருமை, நீர்நாய்
  • மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
  • மரங்கள்: காஞ்சி, மருதம்
  • உணவு: செந்நெல், வெண்நெல்
  • பண்: மருத யாழ்
  • பறை : நெல்லரி
  • தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
  • நீர் நிலை : பொய்கை, ஆறு
  • மருத மரம் ஆற்றோரங்களிலும் [2] வயலோரங்களிலும் [3] செழித்து வளரும்.
  • உழவர்க்கு நிழல்
    நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம். [11]
    நாகதெய்வக் கோயில்
    மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது
நன்றி விக்கி

என்ன ஆச்சரியம் எங்கள் பகுதியிலும் மருத மரத்தை சுற்றிலும் விவசாயம் ஒரு பக்கம் குளம் மரத்தின் அடியில் இருக்கும் நாக தலை கொண்ட தெய்வம் கூடவே நாகக் கதையும் .


எதேச்சையாய் விக்கி பக்கம் பார்கையில் தமிழில் இந்த மரத்தின் பெயர் "தம்பரத்தம் " என்று இருந்தது . தமிழ் நாடு முழுவதும் ஒரு பெயர் புழக்கத்தில் இருப்பதே இல்லை போலும் . தென் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பணி நிமித்தம் வட தமிழகத்தில் இருக்கும் இந்த ஐந்து வருடங்களில் மக்களின் புழக்கத்தில் இருக்கும் சில பழக்கங்கள் ,வார்த்தைகள் இவற்றை தென் தமிழகத்தோடு ஒப்பிடுகையில் ஏதோ அன்னியத் தீவு போல ஒரு பிம்பம் வருகிறது . அவரவர் வட்டத்துக்குள் இருக்கும் வரை குழப்பங்கள் இல்லை .வெகு ஜன மக்களோடு பன்முகங்களில் ஒரு முகமாய் கலக்கும்போது தெரிய வருகிறது நம் முகம் மட்டும் தனித்து நிற்பது .இன்று இந்த மாதிரியான மர வளர்ப்புகள் எந்த அளவு இருக்கின்றன என்று நாமறிவோம் . நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கருங்குளம் முதல் திருவைகுண்டம் வரை சாலையின் இரு பக்கமும் இருக்கும் வானுயர்ந்த மரங்களில் மருத மரங்களும் உண்டு .பருத்த அதன் அடிப்பாகமும் அளவிடமுடியாத அதன் உயரமும் அதன் வயதை சொல்லும் . பண்டைத் தமிழரின் நாகரிகத் தொட்டிலாம் ஆதிச்சநல்லூரில் ஒரு மருத மரம் சாய்ந்து விழுந்து அதன் பிறப்பை முடித்துக் கொண்டது .இதுபோல் மிச்ச சொச்ச இருக்கும் மரங்களும் ஒரு நாள் மனிதனின் அதிவேக வளர்ச்சியில் காணாமல் போகலாம் .மருத மரத்துக்கு இன்னும் வேறென்ன பெயர்கள் இருக்கின்றன என்று நானறியேன் . பின்னாளில் எவரேனும் இதைப் பற்றிய தேடல் கொண்டால் விவசாயத்துக்கு பெயர் போன திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதி ஒரு காலத்தில் பல மருத மரங்களைக் கொண்டிருந்தன என்று அறிய ஒரு சின்ன தடயம் மட்டுமே இப்பதிவு .


Posted by மதார் at 12:16 PM
Labels: Carambola, மருத மரம், மருதம்
« Older Posts
Subscribe to: Posts (Atom)
Tamilmanam Tamil blogs Traffic Rank

About Me

My photo
மதார்
நிறைய பேசுவேன் பேசிகிட்டே இருப்பேன் எதிராளி என்னை திட்டும்வரை . (கொஞ்சம் பொது அறிவு ஜாஸ்தி (யாருக்கு )அதான் பிரச்சனையே )தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் இப்படி , அதிகம் தெரியாதவர்களுக்கு நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுங்க நிஜமா நம்புங்க .
View my complete profile

Blog Archive

  • ▼  2012 (7)
    • ▼  September (1)
      • சிற்பிகள்
    • ►  August (2)
    • ►  May (3)
    • ►  February (1)
  • ►  2011 (9)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (87)
    • ►  December (11)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (8)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (5)
    • ►  May (6)
    • ►  April (16)
    • ►  March (20)
    • ►  February (1)

Followers

Labels

  • Carambola (1)
  • Foot over bridge (1)
  • Tidel park (1)
  • அத்தை (2)
  • அமைதி (1)
  • அரசு (2)
  • அழகு (3)
  • அனுபவம் (34)
  • ஆசிரியர் (1)
  • ஆசைகள் (2)
  • ஆண்கள் (1)
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம் (1)
  • ஆயிஷா (1)
  • இந்தியா (1)
  • இமயமலை (1)
  • இயற்கை (2)
  • இரா .நடராஜன் (1)
  • இறப்பு (1)
  • உறவுகள் (1)
  • எனக்கு பிடித்தவை (1)
  • என் பெயர் (1)
  • என்டோஸ்கோபி (1)
  • என்பள்ளி (4)
  • கண்ணீர் (1)
  • கதை (2)
  • கம்யூனிசம் (1)
  • கவிதை (10)
  • காலேஜ் (1)
  • கிராமத்து மருத்துவம் (1)
  • கிராமம் (9)
  • கும்பகோணம் (1)
  • குருக்கள் (1)
  • குலசை (1)
  • குழந்தை (1)
  • குழுமம் (1)
  • குளம் (2)
  • கோயில் (2)
  • கோவம் (1)
  • கோவில் கொடை (1)
  • சடங்குகள் (1)
  • சமூகம் (1)
  • சமையல் (3)
  • சிக்னல் (1)
  • சிறுகதை (1)
  • சினிமா (4)
  • சென்னை (8)
  • சென்னை டிரைனேஜ் (1)
  • சோதனை (1)
  • டிவி ஷோ (1)
  • டெல்லி கட்டிடம் விபத்து (1)
  • ட்ரெயின் (1)
  • தசரா (1)
  • தண்ணீர் (3)
  • தமிழில் பொறியியல் கல்வி (1)
  • தரமணி (1)
  • தாமிரபரணி (1)
  • திருக்கார்த்திகை (1)
  • திருமணம் (1)
  • திருவான்மியூர் ஸ்டேஷன் (1)
  • தூத்துக்குடி (1)
  • தொடர்கதை (3)
  • நகரம் (1)
  • நட்பு (4)
  • நண்பன் (1)
  • நந்தலாலா (1)
  • நான் (1)
  • நித்யானந்தம் (1)
  • நினைவுகள் (2)
  • நீயா நானா (1)
  • பகல்கொள்ளை (3)
  • பக்தி (2)
  • பணம் (1)
  • பதிவுலகம் (6)
  • பயணம் (2)
  • பள்ளி (2)
  • பஸ் (1)
  • பாடல் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புத்தக விமர்சனம் (2)
  • புனைவு (1)
  • பெண் (4)
  • பேச்சிலர் (1)
  • பேருந்து பயணம் (2)
  • பைத்தியம் (1)
  • பொங்கல் (1)
  • பொது (1)
  • பொய் (1)
  • போரம் (1)
  • மணி தணிகை குமார் (1)
  • மரணபயம் (1)
  • மரணம் (1)
  • மருத மரம் (1)
  • மருதம் (1)
  • மலை (1)
  • மழை (2)
  • மாடு (1)
  • மாநகரப் பேரூந்து (1)
  • மாலை (1)
  • மிஸ்கின் (1)
  • மீன் (1)
  • மீன் குழம்பு (1)
  • முத்தாரம்மன் . (1)
  • முன்னோர்கள் (1)
  • யாளி (1)
  • ராங் கால்ஸ் (1)
  • ரோடு (1)
  • லஞ்சம் (1)
  • வட்டார மொழி (3)
  • வலி (3)
  • வாழைப்பூ (1)
  • விடுகதை (1)
  • விபத்து (1)
  • வில்லன்கள் (1)
  • விவசாயம் (2)
  • வினவு (2)
  • வீடு (2)
  • வீண்செலவு (1)
  • வெள்ளம் (1)
  • ஜாதி (4)
  • ஸ்ரீவைகுண்டம் அணை (1)
  • ஹாஸ்டல் (1)

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

FeedBurner FeedCount

Mathar. Powered by Blogger.

Popular Posts

  • சிற்பிகள்
    இன்றைக்கு ஆசிரியர் தினம் அப்படியே கொஞ்சம் ஊதுவத்தியை பின்னோக்கி சுத்தினால் எத்தனை பேர் தேறுவாங்க என்று தெரிந்துவிடும் . முதன்முதலில் கை பிடி...
  • மறக்க முடியா மரண தருணங்கள்
    என் தாயின் கருவிலிருந்தே ஒவ்வொருமுறையும் நான் தப்பிப் பிழைத்தே வந்திருக்கிறேன் .வெறுத்துப் போன பல நேரங்களில் நான் தப்பி பிழைத்த தருணங்களை ச...
  • மருத மரம் - வயலும் வயல் சார்ந்தவையும்
    எங்க ஊர் குளக்கரையில் ஒரு உயர்ந்த மரம் இருக்கும் .மரத்தின் மேல் அவ்வளவு சாமானியமாக எவரும் ஏறி விட முடியாது .கிட்டத்தட்ட அதை வழுக்கு மரம் என...
  • ஆதிச்சநல்லூர் நாகரீகம்
    சென்னையின் புத்தகக் கண்காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது .என்னுடைய வாசிப்புத் திறன் ரொம்பவே கம்மி நாவல் ,காமிக்ஸ் ,வரலாறு இந்த அளவு ...
  • மனிதர்கள் பல விதம்
    ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது வழக்கமான கதைகள் போய்க் கொண்டு இருந்தன . ஊரின் பிறப்பு இறப்புகள் ,திருமணத் தகவல்கள் இ...
  • உணர்தலும் புரிதலும்
    உன்னிடத்தில் நான் கதைக்க என்னிடத்தில் வார்த்தைகளில்லை ! கண் மூடாமல் நீ பேச உன் கண் பார்க்க முடியாமல் நானும் ஊமை...
  • சின்ன பொய் போதும்
    வீட்டம்மாவோடு பிரச்சனையா ? வீட்டுக்கு போனா கவனிப்பு சரியில்லையா ? உங்கள கண்டுக்கவே மாட்டேங்குராங்களா? பிரச்சனையை விடுங்க ஒரு சின்ன பொய் போது...
  • தாமிரபரணி
                 பிறந்தது முதல் தாமிரபரணி தண்ணீர் குடித்து , குளித்து வளர்ந்தவள் .பிறந்த மண்ணில் இருக்கும் வரை அதன் அருமை தெரியவில்லை . பள்ளிப...
  • தரைமேம்பாலம் - டைடல் பார்க் சிக்னல்
    சென்னையின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்று அதுவும் IT துறையினரின் ஆதிக்கக்கூடம் டைடல் பார்க் . பழைய மகாபலிபுரம் ரோடு வழுக்கிக்கொண்டு செல்வதாலு...
  • IRCTC -பொங்கலோ பொங்கல்
    என் பயண வாழ்க்கையில் முதல் முறையாக பொங்கலுக்கு return டிக்கெட் அதுவும் பெர்த் கன்பார்ம் ஆன டிக்கெட் கிடைச்சுடுச்சே. பொங்கலுக்கு ஊருக்கு போக...
 
Copyright © சொல்லத் துடிக்குது மனசு. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio