இன்றைய காலகட்டங்களில் பல நோய்கள் புதிது புதிதாய் மனிதர்களுக்கு வந்து கொண்டுள்ளன . அதிலும் பலவற்றை இதுதான் என்று மருத்துவர்களால் கூட கண்டறியப்பட முடியா நிலையில் உள்ளன . நோயின் அறிகுறிகள் கூட மருத்துவருக்கு தெரிந்த வேறு நோயின் அறிகுறிகளுடன் ஒத்துப்போவதால் சில நேரங்களில் நமக்கு வந்த நோயிற்கு தேவையில்லாத மருந்துகளுக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறோம் . நானும் இதில் பாதிக்கப்பட்டவள் என்பதே இப்பதிவு எழுதக் காரணம் .
எனக்கு சில மாதங்களாய் அடிவயிற்றில் வலி இருந்து வந்தது . எப்பொழுதும் இருக்காது ஆனால் காலையில் கண்விழித்ததும் வலியின் உணர்வுகளே முதலில் நான் உணர்வேன்.சரி ஆகி விடும் என்று சில மாதங்கள் கண்டு கொள்ளவில்லை . ஆனால் வலி மட்டும் போவதுபோல் தெரியவில்லை . வலியின் அளவு மட்டும் கூடிக்கொண்டே போனது . இதற்குமேல் தாமதிக்கக்கூடாது என்று புகழ்பெற்ற ஒரு மருத்துவமனைக்கு சென்றேன் . என்னை பரிசோதித்துவிட்டு அல்சர் இருக்கலாம் என்று சில மாத்திரைகள் எழுதிக் கொடுத்தனர் . எனக்கு அல்சர் வர வாய்ப்புக்கள் குறைவு , என்னால் பசி தாங்க முடியாது என்பதால் வேளைக்கு ஏதாவது சாப்பிட்டு விடுவேன் . வேறென்ன பண்ண நமக்கும் அல்சர் வந்திடுச்சு போல என்று மாத்திரைகளும் உட்கொண்டேன் . எந்த முன்னேற்றமும் இல்லை மீண்டும் சென்றால் வேறு ஒரு மருத்துவர் பணியில் இருக்க அவர் வேறு மாத்திரை எழுதிக்கொடுக்க மறுபடியும் எந்த முன்னேற்றமும் இல்லை . மூன்றாம் முறை போனபிறகு ஸ்கேன் மற்றும் என்டோஸ்கோபி எடுக்க வேண்டும் என்றனர் . ஸ்கேன் பத்தி தெரியும் என்டோஸ்கோபி பெயர் முதல்முறை கேட்கிறேன் . டாக்டரிடமே அதுபற்றி நான் கேட்க ஸ்கேன் என்றால் ரூம் வெளிப்புறம் மட்டும் பார்ப்பது போல் . என்டோஸ்கோபி என்றால் ரூம் உள்புறம் பார்ப்பது இதில் எல்லாமே தெளிவாய் விளங்கிவிடும் என்றனர் . நானும் என்டோஸ்கோபி பண்றேன் என்று சொல்லி வந்தேன் .
அடுத்த வாரம் திங்கள் காலையில் மீன் குழம்பு 2 தோசை , பால் என்று வயிறு முட்ட சாப்பிட்டு சென்றால் என்டோஸ்கோபி பண்ண வெறும் வயிறில் வரவேண்டும் . முன்னிரவு 10 மணிக்கு பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது . காலையில் பல்துலக்கியதும் அப்படியே வர வேண்டும் பச்ச தண்ணீர் கூட குடிக்ககூடாது என்றனர் . என்னால முடியல இத முதல்லயே சொல்லக்கூடாதா என்று மனதினுள்ளே திட்டிக்கொண்டு வந்தேன் . அவர்கள் சொன்னபடியே வெறும் வயிறில் மறுநாள் போய் சேர்ந்தேன் . காலையில் நான்கு பேருக்கு என்டோஸ்கோபி . ரூம் உள்ளே எனக்கு முன்பு சென்றவர்கள் வெளிவர அரைமணி நேரத்துக்குமேல் ஆனது . எதுவும் புரியாமல் தனியாய் காத்திருக்க 11 மணிக்கு என்முறை வந்தது . நர்ஸ் தொண்டை மரத்துப்போக வாயில் ஏதோ ஸ்ப்ரே மாதிரி அடித்துவிட்டார் பின்பு அங்கிருக்கும் ஒரு கருப்பு ரப்பர் ட்யூப் கழுவிக்கொண்டே செய்முறை விளக்கம் குடுக்க எனக்கு வாந்தியே வந்திடும் போல இருந்தது . நல்ல வேலை வயிற்றில் ஒன்றுமில்லா காரணத்தினால் வரவில்லை . அந்த ஒரு ரப்பர் ட்யூப்தான் எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள் .
கண்ணாடி , சில்வர் க்ளாஸ் நடைமுறையில் இருந்தவரையில் நான் வெளி இடங்களில் டீ காபி கூட குடிக்க மாட்டேன் , ஒருவர் குடித்த டம்ளரில் நானும் குடிக்கனுமா என்று எவ்வளவு தேவையாய் இருந்தாலும் குடிக்க மாட்டேன் .சிறிது நேரத்தில் உள்ளே வந்த டாக்டர் என்னை பார்த்ததும் அதிர்ச்சியாய் "This girl is looking so young ". யாரு இந்த பொண்ணுக்கு என்டோஸ்கோபி பண்ண சொன்னது என்று கேட்க்க உள்ளுக்குள் அண்டசராசரமும் கலங்கியது . அதற்க்கு முன்பே அங்கிருக்கும் வயர் இதர உபகரணங்கள் பார்த்து பயந்து போயிருந்தேன் . டாக்டர் என்னிடம் என்னமா பண்ணுற என்று கேட்க்க வாயில் அடித்த மருந்தில் பேச முடியாமல் சிவில் இஞ்சினீயர் என்று சொல்ல சுவரை காட்ட சிரித்து விட்டார் . பின்பு என்டோஸ்கோபி பற்றியும் என்னுடைய ஒத்துழைப்பு வேண்டும் என்றும் விளக்க நாம உயிரோட வெளில போவோமா என்று சந்தேகம் வர ஆரம்பித்தது . உள்ளிருக்கும் காற்றை வெளிவிடக் கூடாது நீயும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சீக்கிரம் முடியும் இல்லைஎன்றால் நீதான் கஷ்டப்பட வேண்டிருக்கும் என்று சொல்ல பயத்தில் ஆயத்தமானேன் .
வாய் மூடாமலிருக்க வாயில் பெரிய வளையம் மாதிரி ஒன்றை வைத்துவிட்டனர் .அதன் நடுவில் இருக்கும் துளை வழியாய் நடுவிரல் சைஸ் இருக்கும் ஒரு ரப்பர் குழாயை வாயில் வைத்து உள்ளே இழுக்க சொல்ல நானும் ஏதோ இழுத்துவிட்டேன் . அதன் பிறகு அந்த ரப்பர் ட்யூப் குடலின் உள்ளே போக போக உள்ளிருக்கும் காற்று வாய் வழியாய் என்னையும் மீறி வெளிவர டாக்டர் காற்றை வெளிவிடாதே என்கிறார் . என்னால் வாய் திறந்த நிலையில் எப்படி வெளிவரும் காற்றை தடுக்க முடியும் ? அந்த ரப்பர் ட்யூப் நுனியில் இருக்கும் கேமரா அருகில் இருக்கும் திரையில் படம் காட்டுகிறது . டாக்டர் அதை பார்த்துக்கொண்டே 30 , 40 என்று சொல்ல எனக்கு மயக்கமே வருது .அத்தனை cm உள்ளே போய்க்கொண்டிருக்கிறது . ஒருவழியாய் முடித்து பாதி வெளிவரும்நிலையில் அவருக்கு சந்தேகம் அந்த பகுதி பார்த்தோமா என்று நர்ஸ் இடம் கேட்க்க அவரும் பார்த்தோம் என்று சொல்லியும் சந்தேகம் தீராமல் மறுபடியும் உள்ளே விடுகிறார் . அட பாவி என் வயிறு என்ன விளையாட்டு திடலா என்று மனதினுள்ளே வலியுடன் திட்டுகிறேன் . அந்த ரப்பர் ட்யூப் போகும் பாதை நன்று உணர முடியும் . வயிறுக்குள் ஏதோ சுத்திசுத்தி போற மாதிரி இருக்கும் . ஒருவழியாய் முடித்துவிட்டு என் ரிப்போர்ட் கையில் குடுத்து இன்னும் அரைமணி நேரம் கழித்தே தண்ணீர் கூட குடிக்க வேண்டும் என்றனர் . தொண்டையில் அவ்வளவு வலி . ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது எனக்கு குறைவான நேரத்திலேயே முடிந்திருந்தது .என்டோஸ்கோபி பண்ண என்னை மாதிரி யாரும் தனியாய் செல்ல வேண்டாம் . துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள் .
ரிப்போர்ட் பார்த்த டாக்டர் உனக்கு நார்மல் என்று வந்திருக்கிறது எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்லி சில வலி நிவாரண மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார் . அதன் பின்பு கொஞ்சம் வலி குறைந்தது . ஆனால் என்னால் அந்த நிமிடங்களின் வலியை மட்டும் மறக்க முடியவில்லை இன்று வரைக்கும் அதை நினைத்தால் முகத்தில் ஒரு பயம் வந்துபோகிறது . அது முடிந்து ஒரு 6 மாத காலமே ஆகிறது , அந்த வேதனையான நிமிடங்களில் கண்களில் கண்ணீர் வர என் அம்மாவைத் தவிர வேறு யார் முகமும் தெரியவில்லை . பதிவுலம் வந்த பிறகு ஒரு நாள் ஒரு பதிவு படித்த பிறகே அந்த வலியின் பெயர் "குடல் உளைச்சல் "என்று தெரிந்தது ,படிக்க இங்கு கிளிக் செய்க . என்டோஸ்கோபி பற்றி மேலும் தெரிய இங்கு .அதன் பின்பு நண்பன் ஒருவன் காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் ஒரு 1 லிட்டர் குடி ரொம்ப நல்லது என்று சொல்ல அன்றிலிருந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன் . என்னால் 1 லிட்டர் எல்லாம் குடிக்க முடியல 1 /2 லிட்டர் குடிக்குறேன் . நம்புறீங்களோ இல்லியோ என் வயிற்று வலி போன இடம் தெரியவில்லை . பெரிய மருந்துகளால் தீர்க்க முடியா வியாதி ஒரு அருகம்புல்லில் தீர்ந்து போகும் என்று சொல்வரே அது மாதிரியே வெறும் தண்ணீரில் வலி போயிற்று .
இன்று AC இல்லாத அலுவலங்கள் மிகக் குறைவு . ஒரு குளிர்ந்த சூழல் நமக்கு இயல்பாய் வரும் தாக உணர்வை குறைத்து விடுகிறது . பல பேர் சாப்பிடும் நேரம் தவிர பல நேரங்களில் தண்ணீர் குடிப்பது இல்லை .தண்ணீர் நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்றும் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது என்றும் எங்கோ படித்த நியாபகம் . ஆனால் தண்ணீர் நிறைய குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம் . வந்த பின் முழிப்பதை விட வருமுன் காப்பது நம்மால் முடியும் தானே ?. இப்பதிவின் மூலம் சொல்ல வருவது ஒரு டாக்டர் என்று இல்லாமல் 2 டாக்டர்களிடம் பரிசோதிக்கலாம் . நோயின் தன்மையை உணர்ந்து மாத்திரைகளும் பரிசோதனைகளும் எடுப்பது நல்லது , இல்லை என்றால் என்னைப்போல் தேவையில்லா வலிகளைத் தாங்க வேண்டி வரும் . எதுவுமே முதலில் பார்ப்பது நல்லது . நான் இதில் அலட்சியமாய் மற்றும் தனியே ஹாஸ்பிட்டல் போன காரணங்கள் வேறு .


