என் முதல் மூன்று பதிவுகள் இங்கே
பள்ளிக்காலமும் நானும் -1
பள்ளிக்காலமும் நானும் -2
பள்ளிக்காலமும் நானும் -3
பத்தாம் வகுப்பு கொஞ்சம் ஆசிரியைகளையும் கவனிக்க ஆரம்பித்த நாட்கள் . ஒரு ஆசிரியை புடவை கட்டும் அழகே தனி . அவ்வளவு நேர்த்தியாய் கட்டுவார். ஒருமுறை அனைவரும் வெளியில் இருந்து படிக்க நானும் என் தோழியும் அவர் புடவையை பற்றி எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க மாட்டிக் கொண்டோம் . பயத்தில் பொய் சொல்லத் தெரியாததால்(இப்போ சரளமா பொய் வரும் வளர்ந்துட்டோம்ல ) உண்மையை நான் உளறிக் கொட்ட சிரித்து விட்டார் , பிறகே உயிர் வந்தது . (அப்போலாம் ரொம்ப மான ரோசம் பார்ப்போம்ல ) பத்தாம் வகுப்பில் பள்ளியில் பொதுத்தேர்வில் 2 வது இடம் .அதற்க்கு பரிசு வாங்கிய வாட்ச் இப்போ வரைக்கும் என் கையில் (ரொம்ப செண்டி அது மேல ) .
+1 கணிதம் , விலங்கியல் பாடப் பிரிவு . எங்க ஹிட்லர் தான் வேதியியல் ஆசிரியர் .வகுப்ப கூட எப்படியோ சமாளிச்சு ஓட்டிடலாம் , நாற்பது நிமிட வகுப்பில் இருபது நிமிடம் நல்லா கதை பேசி கொஞ்ச நேரம் வகுப்பெடுப்பார் . அவருடைய இன்னொரு முகம் வேதியியல் ஆய்வகத்திலே தெரியும் . உடைந்த பியூரெட் , பிப்பெட் நிறைய . இடது கை பியூரெட் வலது கை குடுவை கட்டைவிரல் பிப்பெட் என்று இவர் எவ்வளவு சொன்னாலும் நாங்க சரியா தப்பா பிடிப்போம் . அத மனுஷன் பார்த்தாரு அந்த பியூரெட், பிப்பெட் கொண்டே அடிவிழும் . அப்புறம் என்ன அது உடைஞ்சு போய்டும் பைன் போட்டு புதுசு வாங்கிடுவாரு. லேப்ல இருக்குற பெரிய ஸ்கேல் எல்லாம் இவரு எங்கள அடிச்சே உடைப்பாரு இந்த விஷயம் Physics ,Chemistry வாத்தியாருங்களுக்குள்ள சண்டையே வரும் (இரண்டும் ஒரே லேப்தான் ). அப்படியும் ஆளு அடிச்சு உடைக்குரத மட்டும் விட மாட்டாரு .
ஒருமுறை ஆங்கில பாட வகுப்பில் ஆசிரியர் வகுப்பு இடைவேளையில் தண்ணீரில் விழுந்தவரை தலைமுடியை மட்டுமே பிடித்து தூக்கவேண்டும் என்று கூற நான் அப்போ விழுந்தவர் மொட்டைதலையாய் இருந்தால் என்ன பண்ண சார் என்று கேட்க வகுப்பில் எழுந்த சிரிப்பொலியில் அவர் என்னை முறைக்க குனிந்தவள் பத்து நிமிடம் கழித்தே நிமிர்ந்தேன் . என்னை முறைக்க காரணம் அவருக்கு என்னை பிடிக்காது , ஏன்னா அவர் அடிக்கும் இரட்டை அர்த்த காமடிகளுக்கு நானும் என் ப்ரெண்டும் மட்டும் சிரிக்க மாட்டோம் . ஆனாலும் அந்த ஆசிரியரை மறக்க முடியாது . என்னாலும் கவிதை எழுத முடியும் என்று என்னை நான் உணர்ந்தது அவர் வகுப்பில்தான் . இன்டெர்னல் மதிப்பெண் 20 அதற்காக எல்லோரும் இருபது வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி கொண்டு வாங்க என்று சொல்ல என்னுடைய முதல் கவிதை முயற்சியே 25 வரிகள் , அதுவுமில்லாமல் வகுப்பில் சொந்தமா கவிதை எழுதி கொண்டுவந்ததும் நான் மட்டுமே ,வகுப்பு போன பின்பே அது தெரிந்தது .
+2 வாழ்வின் முக்கிய இடம் , மருத்துவமா ? பொறியியலா என்று கணிதம் , விலங்கியல் பாடம் படிக்க நமக்குள்ள பட்டிமன்றம் நடக்குற காலம். அந்த வருடம் முழுவதும் பட்டிமன்றம் முடியாம நடந்துகிட்டே இருக்கும் . ஆனா இரண்டையுமே ஒழுங்கா படிக்க முடியாம கோட்ட விட்டு கடைசிலதான் தெளிவாவோம் அப்போ தேர்வே முடிந்து போயிருக்கும் . +2 தேர்வு முடிஞ்சதுமே அடுத்து நுழைவுத் தேர்வு ஸ்பெஷல் வகுப்பு . முதல் முறையாய் வீட்டை விட்டு நான் விடுதியில் தங்கி படித்தேன் . இந்த இடைவெளியில் இரண்டாவது அண்ணா கல்யாணம் . கல்யாணத்திற்கு முந்தின நாள் மாலை வந்து மறுநாள் கல்யாணம் முடிந்தே அன்று மாலையே மறுபடியும் விடுதி . அடுத்து நான்கு நாள்ள நுழைவுத்தேர்வு . எல்லாம் முடிஞ்சு என் அழகிய பள்ளி வாழ்வும் முடிஞ்சு கல்லூரியில் காலடி பதித்தாயிற்று . அதுவரைக்கும் பள்ளியில் படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று இருந்த நான் சுதந்திரப் பறவையாய் என்னை உணர்ந்த அழகிய கல்லூரி நாட்கள், என்றென்றும் மறக்க முடியா விடுதி வாழ்க்கை . பள்ளியில் இருக்குற இடம் தெரியாமல் இருந்த நான் கல்லூரியில் பண்ணிய அட்டகாசங்கள் என் துறை நண்பர்களால் என் ஆட்டோகராப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன .வேறொன்றுமில்லை நீலாம்பரி, பெண் ரவுடி என்று பெயர் எடுத்தேன் . என்னவொரு முன்னேற்றம் .இருந்தாலும் என்வகுப்பில் அனைவரிடமும் சகஜமாய் பழகும்பெண் என்ற வரியை அனைவரும் எழுதியது கல்லூரி வாழ்வில் மறக்க முடியாதது.
