'ஏய் மஞ்சு இந்த சாரி பாரு உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் ' என்றாள் அஜிதா
அஜிதாவும் , மஞ்சுவும் ஒரே இடத்தில் பணிபுரியும் இணைபிரியா கல்லூரித் தோழிகள்
மஞ்சுவின் சகோதரி திருமணம் அடுத்த வாரம் , ஒரு நல்ல நாளில் இருவரும் போத்தீஸில் .
'நிஜமா நல்லா இருக்குடி இதையே எடுத்துக்கிறேன் ' என்று நாவல் பழ வண்ணத்தில் உள்ள புடவை எடுத்தாயிற்று .
2 வருடங்களாய் எதிர்பார்த்திருந்த தன் சகோதரியின் திருமணம் இதோ அடுத்த வாரம் , அவ்வளவு சந்தோசத்துடன் சிறு குழந்தை போல் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து வாங்கி கொண்டிருந்தாள் மஞ்சு .
ஜூன் 6 திருமணம் , ஜூன் 1 அண்ணா குடும்பத்துடன் நெல்லை எக்ஸ்பிரஸ் பயணம்.
ட்ரெயின் நெல்லையை நெருங்கி கொண்டிருக்க ,
'அண்ணி எனக்கு தலை ரொம்ப வலிக்குது '
'ஒன்னும் இருக்காதுல சரியா தூங்கிருக்க மாட்ட அதான் வலிக்குது ' என்றார் மஞ்சுவின் அண்ணா .ஆயிற்று வீட்டிற்கும் வந்தாயிற்று .அனைவரும் குளித்து சாப்பிட்டு ஒன்றாய் உக்காந்து பேசிக்கொண்டிருக்க
'அண்ணா என் காது பின்னாடி பாரு ஏதோ வலிக்குது '
மஞ்சுவின் காதின் பின்புறம் வெள்ளையாய் ஒரு சிறு கட்டி
'என்னல அம்மை வந்த மாதிரி இருக்கு? '
அப்பொழுதுதான் மஞ்சு தன் உடன் தங்கிருந்த தோழிக்கு அம்மை வந்ததயும் அதை தொடர்ந்து அஜிதாவும் அம்மை தாக்குண்டதை.
'ஏன்ல இத முதல்லையே என்கிட்டே சொல்லல , சொல்லிருந்தா ஊசி போற்றுக்கலாமே இப்ப என்ன பண்றது , எல்லாம் திமிர் ............'திட்டிக்கொண்டே இருக்க மஞ்சுவின் அம்மா அழ தொடங்கி விட்டார் . என்ன பண்ண ? 4 நாளில் கல்யாணம் ............மஞ்சுக்கு ஒன்றும் ஓடவில்லை , தானும் அழுது அம்மா கூட கொஞ்சம் கஷ்ட பட விரும்பவில்லை .
'சரி விடும்மா இப்போ என்ன பண்ண ? வந்துருச்சு ஒன்னும் பண்ண முடியாது ஏதோ அவளுக்கு வந்த திருஷ்டி என்னோட போகுதுன்னு நினைச்சுக்கோ ' இதைத் தவிர அம்மாவை தேற்றுவதற்கு ஒன்றும் இல்லை .
'இங்க அம்மை பார்வை பார்க்க ஒரு ஆள் இருக்கு ஏல தம்பி ஒரு எட்டு தங்கச்சிய கூட்டிட்டு போய் காட்டிட்டு வாயேன்' என்றது எதிர்த்த வீட்டு 80 வயது அக்கா .
அதற்குள் மஞ்சுவின் உடலில் முத்துக்கள் பல வந்துவிட்டன .
'தம்பி பெரிய அம்மை வந்திருக்கு நாம ஏதும் செய்ய முடியாது 5 நாள் இருந்துட்டுதான் இறங்கும் '
'அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் வச்சுருக்கு , என்னக்கா பண்ண ' மூத்த அண்ணாவின் உள்ளக்குமுறல் .
'தம்பி ஏதும் செய்ய முடியாதுப்பா , பிள்ளைக்கு புது துணி வாசம் , பூ வாசம் படக்கூடாது, 5 நாள் போனதும் திரும்ப வாங்கப்பா ' என்றது அம்மை நோய்க்கு பார்வை பார்க்கும் பெண் .
3 நாள் ஆனது விடிந்தால் கல்யாணம் , நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் வீட்டு முற்றத்தில் கல்யாண பந்தலின் கீழ் உக்காந்து கதை பேசிக்கொண்டே காய்கறி வெட்டிக் கொண்டிருக்க , உள்ளே மஞ்சுவால் இருக்க முடியவில்லை . நெடு நாள் கழித்து ஒன்றுசேர்ந்த சொந்தங்களைப் பார்க்க ரூமை விட்டு வெளியே வந்து நின்றாள், வந்த 2 வது நிமிடம் அப்படியே மயங்கி சரிய பெரியண்ணா ஓடிவந்து தாங்கிக்கொள்ள
'என்னல ஆச்சு ? ஏன் வந்த ? இல்லனா சும்மா வந்தேன் என்னால நிக்க முடியல ' சரி வா , கைத்தாங்கலாய் உள்ளே கூட்டிச் சென்று படுக்க வைத்தார் . இரவு 8 மணி மஞ்சுவால் முடியவில்லை , அதுவரை தன் கஷ்டத்தை பெற்றவளுக்காய் தாங்கிக் கொண்டவள் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட' என்னால முடியலம்மா உடம்பெல்லாம் எரியுதும்மா '
உச்சி முதல் பாதம் வரை பெரிய பெரிய முத்துக்கள் , கூடவே காய்ச்சலும் . 4 நாள் வெறும் பழச்சாறும் , இளநீறும் மட்டுமே . மஞ்சு வலியில் துடிக்க பெத்தவள் கண்ணீர் விட கல்யாண வீடு ஒருநிமிடம் ஸ்தம்பித்தது. 'யோவ் முதல்ல பாட்ட நிறுத்துங்கப்பா ' என்றது ஒரு பெரிசு .
சந்தனமும் , பிச்சிப் பூவும் அரைத்து தலையில் பத்து போட்டு வேப்பிலை படுக்கை மேல் படுக்க வைத்தனர் . இரவு மணி 10 , முற்றத்தில் சித்தப்பாவின்குரல் மஞ்சுவை எழுப்பியது .
' எலேய் 3 வேன் பிடி , வீட்ல வச்சு கல்யாணம் பண்ண வேண்டாம் , திருச்செந்தூர் கோவில் போயிறலாம் ' அவர் பங்கிற்கு செலவு இழுத்துக்கொண்டிருக்க ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்க மஞ்சு
'அம்மா இங்க வாயேன் ''என்னமா வலிக்குதமா ? இல்லமா திருச்செந்தூர் எல்லாம் போக வேணாம் , சித்தப்பா செலவ இழுத்து விடுறார்மா , ஏன் நம்ம ஊர் சாமி எல்லாம் உங்க கண்ணுக்கு சாமியா தெரியலையா ? நம்ம கோவில்ல வச்சு அக்காக்கு தாலி கட்டுங்க '
மஞ்சுவின் முடிவே அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டு திருமணம் இனிதே நடந்தேறி பந்தியும் நடந்து கொண்டிருந்தது .
'அம்மா பசிக்கும்மா சோறு குடும்மா ' உனக்கு கஞ்சி வைக்கலையே . ஏம்மா அவ கல்யாணந்தான் பாக்க முடியல , கல்யாண சாப்பாடு கூட தரமாட்டியாமா ?
அடுத்த நிமிடம் மஞ்சுவின் முன் அவியல் பொரியலுடன் கல்யாண சாப்பாடு .
'அம்ம வந்த பிள்ளைக்கு கத்தரிக்கா, வாழைக்கா போட்டு கொடுத்தா நெறைய வரும்மா ' எங்கிருந்தோ ஒரு பெரிசுவின் குரல் ,இதற்க்கு மேல் வர என்ன இருக்கு , கல்யாணமே முடிஞ்சு போச்சு . புது மஞ்சள் கயிருடன் மஞ்சுவின் முன் அவள் அக்கா நிற்க வெளி வரும் கண்ணீரை விழுந்து விடாமல் தடுத்து கொண்டே பார்த்து சிரித்தால் மஞ்சு .
' மஞ்சுவின் பையுனிள்ளும் நாவல் பழ புடவை மடிப்பு கலையாமல் மஞ்சுவைப் பார்த்து சிரித்தது'
பி.கு.இங்கே மஞ்சுவாய் வந்த அந்த துரதிர்ஷ்டசாலி .............
