இந்நேரம் கோயில் திருவிழா இனிதே நடந்து முடிந்திருக்கும் . கார்த்திகை அதைத் தொடர்ந்த கோயில் திருவிழா என இரண்டு மாதங்களாய் ஊரே கடைபிடித்த விரதமும் இன்றைய மதியப் பொழுதுடன் இனிதே முடிவுக்கு வந்திருக்கும் . இன்று மதிய உணவு மட்டுமே அசைவம் இருக்கும் இன்னும் ஒரு வாரம் அதாவது வரும்வாரம் செய்வாய் வரை அசைவம் இருக்காது . கார்த்திகை வந்தாலே குளத்தின் கரையிலும் வாய்க்கால்களிலும் எந்த வித பயமுமின்றி துள்ளி விளையாடும் மீன்கள் . ஆம் அவை தெளிந்த நீரில் நம் காலில் வந்து விளையாடிச் செல்லும் அழகே தனி தான் . குட்டி குட்டி மீன்குஞ்சுகள் வாய்க்கால் கரையோரத்தில் செழித்து நிறுக்கும் புற்களினூடே துரத்திச் சென்று இருக்கை கூட்டி கைகளில் அதைப் பிடிக்கையில் மனம் பறக்கும் ஆகாயத்தில் . அப்படியே பிடிக்கும் நிறைய மீன் குஞ்சுகள் மொத்தமும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சேர்த்தெடுத்து தெருக் கிணற்றில் விட்டு அதற்கு கொடுக்கும் விடுதலை . பிடிக்கும்போது அது கெண்டையா , கெளுத்தியா என்று தெரியாது . ஒவ்வொருமுறை கிணறைத் தாண்டும்போதும் நாம் விட்ட மீன்குஞ்சுகள் கூட்டமாய் ஒருஒரத்தில் நிற்பதை மனம் வேடிக்கை பார்க்கும் . நாட்கள் போகப் போக விட்ட குஞ்சுகள் எல்லாம் பெரிதாகி பெரிய மீன்களாய் கிணற்றுக்குள்ளேயே சுற்றி வரும்போது எதையோ சாதித்துவிட்ட உணர்வு வரும். நான் விட்ட கெண்டை மீன் அந்த கல்லுக்கு கீழே இதோ நான் விட்ட கெளுத்தி என்று அப்பொழுது மனதுக்குள்ளேயே வரும் சந்தோசம் வடிக்க வார்த்தைகளில்லை .
வீட்டுக் கொப்பரையினுள் அண்ணன் பிடித்து வந்து விட்டிருக்கும் விலாங்கு மீனும் விரால் மீனும் பார்க்கவே பாம்பு மாதிரி தோற்றத்தில் பயமுறுத்தும் . அதுவரை குளத்தில் ஒய்யாரமாய் எந்தக் கட்டுப்பாடுமின்றி சுற்றிவந்த விலாங்கும் விராலும் பாதிக் கொப்பரைத் தண்ணீரில் மூஞ்சு முட்ட முட்ட சுற்றி வரும் . அதைத் தொட்டு தொட்டு விளையாடும் என் கைகள் , அதை மட்டுமா தொடும் சுவற்றில் நிற்கும் பள்ளியின் வாலைக் கூட விட்டு வைக்காமல் ஓசையின்றி தொடும் .
கார்த்திகை மாதம் முழுவதும் சுதந்திரமாய் சுற்றி வந்த மீன்கள் இன்னொரு செய்வாய்க்கு பிறகு ஆழ் நீரில் மட்டுமே இனி விளையாடும் . தரையோடு தரையாய் ஊர்ந்து செல்லும் உழுவை மீனும் கன்னங்கரேல் என்றிருக்கும் தேழி மீனுமே பயமெனக்கு . இறந்துவிட்டதாய் நினைத்து ஒருமுறை மீன்களுடன் விளையாடுகையில் என் ஆட்காட்டி விரலை வாய்க்குள் வைத்துக் கொண்டு தரவே மாட்டேன் என்று அடம்பிடித்தது ஒரு உழுவை மீன் .சின்ன வயதில் விரலில் அந்த மீனோடு நடு முற்றத்தில் நான் துள்ளிய ஆட்டம் இன்னும் மறக்கவில்லை
குளம் வற்றிய நிலையில் கடைசித் தண்ணீர் இருக்கும் காலங்களில் மட்டுமே காணக்கூடிய தேளிமீன். சரியாய் பள்ளி இறுதி விடுமுறையில் ஏப்ரல் மே மாதங்களில் சில ஆண்டுகளில் மட்டும் பருவமழை பொய்க்கும் காலங்களில் குளம் வற்றிப் போகும் . அப்பொழுது குளத்தினுள் காணும் சின்ன சின்ன ஓடைகளில் நெலுநெலுவென்று தண்ணீருக்கும் மீனுக்கும் வித்தியாசம் தெரியாமல் திரியும் தேளிமீன்கள் எங்கள் விளையாட்டுப் பொம்மைகள் . அதன் முள் பட்டால் ரத்தம் வரும் உயிர் போகும் அளவுக்கு வழி எடுக்கும் என்று தெரிந்தும் ஓடையின் கரையோரத்தில் இருந்துகொண்டே கைகளால் மீனை கரைக்கு தள்ளும் விளையாட்டு . யார் யார் எவ்வளவு மீன் பிடித்தோம் என்று அங்கு ஒரு போட்டியே நடக்கும் எப்படியும் அன்றைய பொழுதில் கண்டிப்பாய் நான் இரண்டு சொட்டுகலேனும் ரத்தம் காவு கொடுத்திருப்பேன் . காயம் பட்ட இடத்தில் மண்ணெடுத்து பூசும் காட்சிகள் சினிமாவில் பார்க்கும்போதெல்லாம் நான் தேளிமீன் முள் கொட்டி வழியில் துடிக்கும்போது சின்ன கெண்டை மீன் எடுத்து அந்த இடத்தில் யாரோ ஒருவர் தேய்த்து விட்ட பொழுதுகள் வந்து போகும் . தேய்த்துவிட்டவரின் முகம் மட்டும் சத்தியமாய் மறந்து போயிருக்கும் .ஒருஒரு காலகட்டத்திலும் ஒருஒரு மீன்வரத்து அதிகமாய் இருக்கும் .
நடுவிரல் அளவில் வெள்ளையாய் இருக்கும் வாலை மீன் அதன் தலையை கைகளாலேயே படக் படக் என ஒடித்துவிடலாம் . எதையுமே வேகமாய் செய்தே பழகிவிட்ட என் கைவிரல்கள் குறைந்த நேரத்தில் அத்தனை மீன்களின் தலையை துண்டித்திருக்கும் . கையில் பிடிக்கவே நான் நிற்கவே மாட்டேன் என்று த்ரிகிடனத்தோம் ஆடும் கெளுத்தி மீன் தான் அதிக நேரம் உயிரோடு இருக்கும் . அதன் முதுகில் இருக்கும் முள் எடுக்க ரொம்பவே கஷ்டப்பட வேண்டும் , ஆனாலும் அதன் சுவை அதிகம் .மண்ணோடு மண்ணாக கரையோரத்தில் மேயும் அயிரை மீன் ஒரு காலத்தில் மட்டும் கிடைக்கும் நான்கைந்து மீன்கள் சேர்ந்தாலும் சுண்டு விரல் அளவே இருக்கும் மீன் . அதே அயிரை மீனை விடவும் சின்னதாய் கிடைக்கும் கூனி மீன் . நேராய் இருக்கும் மீன் குழம்பில் போட்டவுடன் சுருண்டு வளைந்து சிவப்பு நிறத்தில் வந்து நிற்கும் . கூனி மீன் சாப்பிட எங்களுக்குள் சகோதர யுத்தமே நடக்கும் . அக்கா அல்லது நான் யார் முதலில் சாப்பிட்டாலும் அடுத்து ஒரு கூனி மீன் கூட குழம்பில் இருக்காது மொத்தமும் வடி கட்டிவிடுவோம் .மீன் பிடித்து ஓடி விளையாண்ட இடத்திலும் மூழ்கி நீச்சலடித்த இடத்திலும் நடந்த ஒரு பட சூட்டிங் கேட்டு வாய் விட்டுச் சிரித்தேன் . உச்சி வெயில் வேளையிலும் சில்லென்று இருக்கும் கழுத்து வரை மூழ்கடிக்கும் நீரில் டேக் மேல் டேக் வாங்கி வெடவெடத்துப் போன ஹீரோ பாவம் அதிலும் ஹீரோயின் கூட ரொமான்ஸ் விடும் காட்சியாம் பாவம் அந்த ஹீரோ அன்று நிச்சயமாய் அவருக்கு சளி பிடித்திருக்கும் . பாடலில் வந்த அந்தக் காட்சியில் அவர் பெண்ணிடம் விட்ட ரொமான்ஸ் மட்டுமே மற்றவருக்குத் தெரிந்திருக்கும் அவரது வெலவெலத்து நடுங்கிய முகம் பார்த்து ஐயோ பாவம் என்றிருந்தது . ம் ம் மீண்டும் நானும் சிறுமியாய் மாற வேண்டும் புற்களினூடே கைகோர்த்து மீன்குஞ்சுகள் பிடிக்க வேண்டும் . என் குழந்தைக்கேனும் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் .
