சென்னை மக்களுக்கோர் அரிய வாய்ப்பு , அரிய ஒன்றும் அல்ல வருசா வருஷம் வரதுதான். VGP ,MGM போன்ற தீம் பார்க் போய் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் . நீச்சல் கற்று கொள்ள விரும்பும் மக்களும் இலவசமாக இயற்கை அன்னை தந்ததைக் கொண்டு கற்றுக் கொள்ளலாம் .விருப்பமுள்ளவர்கள் வர வேண்டிய இடம் தரமணி , த்ரில்லர் டிரைவிங் வேண்டுமா வண்டியோடு வாங்க .காலையில் குளிக்க நேரமில்லையா டோன்ட் வொர்ரி ஒரு டவல் சோப்பு லஞ்ச் எடுத்துட்டு வந்தீங்கன்னா அப்படியே சாவகாசமா நீந்தி குளிச்சுட்டு பொறுமையா ஆபீஸ் போகலாம் . ஐயே சாக்கடைத் தண்ணில எப்படி குளிக்கிறது என்று மூளையை கசக்குவோருக்கு பக்கத்திலேயே அரசு சார்ந்த கட்டிடங்கள் உண்டு அதன் முன்னர் இருக்கும் நீச்சல் குளங்கள் தெளிந்த நல்ல நீர் பயமில்லாமல் குளிக்கலாம் .
கடவுளே மழை கொஞ்சம் கொஞ்சமா வந்து வெள்ளோட்டம் காமிக்கும்போதே அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை . அந்த ரோடு வொர்க் காண்ட்ராக்ட் எடுத்த கம்பனியும் கண்டெய்னர் வண்டிக்குள் என்ன செய்கிறார்கள் என்றே விளங்கல . தினம் தினம் அந்த ரோட்டில் பயணம் செய்வோர் நிலைமை ரொம்ப பாவம் . சும்மா போகவே இடம் இல்லை அதில் அங்கிருக்கும் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்று அதன் மாணவர்கள் வாகனங்களும் அணிவகுத்து உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா என்பது மாதிரி அந்த ரோடு , ரோடு என்று கூட சொல்ல முடியாது ஒத்தையடிப் பாதை மாதிரி ஆகிப்போச்சு . வெயில் நேரங்களிலேயே அந்த ரோட்ல போகணும்னா செம தாண்டவ ஆட்டம் ஆடனும் இப்போ மழை நேரம் கேட்கவே வேண்டாம் .
SRP Tools நிறுத்தத்தின் மூலையில் இருக்கும் அரசு அலுவலகம் நானும் சென்னை வந்ததிலிருந்து பார்க்கிறேன் அந்த இடம் நல்ல ஒரு டிரைனேஜ் . எப்படித்தான் அவ்வளவு பள்ளத்தில் கட்டிடம் கட்டினார்களோ தெரியல . இப்போ அதை சுற்றி நிற்கும் தண்ணீருக்கு அலுவலகம் இயங்குகிறதா என்றும் புரியல . அங்கே வேலை செய்வோர் எல்லாம் குடுத்து வச்சவங்க . எப்படியும் அங்கிருக்கும் தண்ணீருக்கு அலுவலகம் பாதி நாட்கள் இயங்காது .
மூன்று வருடங்கள் முன்பு OMR ரோட்டில் அண்ணா வீடு போக வேண்டும் என்றாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் . வாய் , கண்ணு , மூக்கு என்று எல்லாவற்றிலும் மண்ணுதான் ரோடுன்னா ரோடு அப்படி ஒரு ரோடு . திரும்பி வரும் வழியில் அண்ணா பைக்கில் அழைத்து வரும்போது என்னை திட்டிக் கொண்டே வருவான் ஆட்டாமல் இருல வண்டி ஆடுது என்று , நான் எங்கே ஆட்டுவேன் படகு மாதிரி பைக் ரோட்டில் சும்மா குதித்து குதித்து ஏறி இறங்கி வரும்போது நான் பைக்கில் இருந்து வழுக்கிக்கொண்டு வருவேன் . இப்படியே அவன் திட்டி திட்டி ஆணியே புடுங்க வேணாம் என்னை பஸ் ஏத்தி விட்டுடு என்பேன் அப்போது 570 பஸ் சர்வீஸ் கிடையாது என்பதால் CMBT வர ஒரே வழி கல்பாக்கம் பஸ் மட்டுமே . இன்று அந்த ரோட்டில் பயணம் எவ்வளவு எளிமையா இருக்கு .எல்லாமே IT துறையின் வளர்ச்சி .
தரமணியிலும் அருகில் இருக்கும் அசன்டாஸ் ரோடு பளபளக்கும் தரமணி ரோடு பரிதவிக்கும் .அந்த ரோட்டில் போவோர் மட்டும்தான் மக்களா ? தரமணியில் போவோர் என்னவாம் ? எனக்குத் தெரிந்து தரமணி ரோடு இது போல் இன்னும் சென்னையில் எத்தனையோ சாலைகள் சாலையும் தெரியாமல் குழியும் தெரியாமல் எத்தனை உயிர்களை மழை நேரங்களில் காவு வாங்குகின்றன .வணிக ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் பாரபட்சம் பார்த்து ரோடு மற்றும் இதர உள்கட்டமைப்புகளை ( infra structure ) செய்வதை விடுத்து சாமானியனையும் கணக்கில் கொண்டு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அரசு நிச்சயம் வருமா ?
