என்னவோ தெரியல இரண்டு நாளா என் இறந்து போன பாட்டிகளின் நினைவு . பாட்டிங்க ரொம்ப ஸ்டார்ங் தாத்தாக்களைதான் நான் பார்க்கவே இல்லை . அம்மா வழி பாட்டி என்றால் அவ்ளோ பிரியம் எங்கள் மேல் . அப்பா வழி பாட்டி பற்றி சொல்ல ஒன்றும் இல்லை , ஒரே ஊரில் இருந்தும் என் பத்து வயது வரை இவர்தான் அப்பாவைப் பெற்றவர் என்று தெரியாது .பிறந்ததில் இருந்தே என்னை தொட்டு தூக்கி இருப்பாரா தெரியாது . அதனாலோ என்னவோ அவர் இறந்த அன்றும் என் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை . பேத்தி என்ற உறவுக்கு அவர் இறந்த அன்று சில மணி நேரங்கள் மட்டும் அவர் அருகில் இருந்திருப்பேன் தூக்கும் வரைக் கூட இல்லை . என் முகம் பார்த்தோ என்னவோ அம்மா என்னை எங்கள் வீட்டுக்கு போக சொல்லிவிட்டார் . நல்லா குளிச்சு முடிச்சு எல்லோருக்கும் சமைச்சு நானும் நல்லா சாப்பிட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் பாட்டியின் கடைசி ஊர்வலத்தை . வீட்டில் இருந்து பார்த்தாலே சுடுகாடு தெரியும் . இரண்டு பாட்டிகலுமே சொல்லி வைத்ததைப் போல் நான் பத்து படிக்கும்போது இவ்வுலகை விட்டு பிரிந்தனர் . அம்மா வழி பாட்டிதான் வந்தவுடனே என்னை பிடிச்சு வச்சு கன்னத்தில் ஒரு இச் . இச் குடுத்த அடுத்த நொடியே என் கை அதைத் துடைக்க கன்னம் போகும் . நான் குழந்தையாய் இருக்கும்போது பிடிக்காத முத்தம் இன்று குழந்தைகள் குடுக்கும் முத்தத்தை மனம் அதிகம் விரும்புகிறது . என் இரண்டு கன்னத்திலும் என் குட்டிமா குடுக்கும் முத்தம் நான் அவளுக்கு ஒன்று குடுத்தால் அவள் மாறி மாறி என் இரண்டு கன்னங்களிலும் குடுக்கும் முத்தம் நான் துடைப்பதே இல்லை வளர்ந்துட்டேனோ .பாட்டியிடம் பிடித்த விஷயம் கதை கேட்பது பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும் கதையின் நீளம் .கைகளில் பெரிய நகம் வைத்து வரும் ஈனா பேச்சிக் கதை என்றால் பயந்துகொண்டே கேட்பேன் . என்னுடைய கதை சொல்லிகள் பாட்டியும் பெரியம்மாவும்தான் ஆனாலும் பாட்டியின் கதைகள் கொஞ்சம் வித்தியாசமானவை பெரிய காடு மலை என்று நம் கற்பனைகள் நீளும் கதை கேட்கும்போதே .
பாட்டியிடம் பிடிக்காத விஷயம் எந்நேரமும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பது முக்கியமாய் அப்பா அண்ணா என்று அவர்களுக்கு சாப்பாடு போட்டுத் தருவது நானாகத்தான் இருக்கும் . பாட்டி சாப்பாடு வைக்கும்போதே தண்ணியும் சேர்த்து வை என்று நச்சரிக்கும் . நானோ விளையாடப் போகும் அவசரத்தில் பாட்டியை முறைத்துக் கொண்டே தண்ணீர் வைப்பேன் . நாளடைவில் சாப்பாடோடு தண்ணீர் வைக்கும் பழக்கம் எனக்கும் வந்தது, அது இப்போ வரைக்கும் தொடருது . தண்ணீர் பக்கத்தில் இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது அந்தளவுக்கு பாட்டியின் பழக்கம் என்னையும் மாற்றிவிட்டது . தொடக்கத்தில் பாட்டியை திட்டியவள் இப்போ தண்ணீர் எடுக்கும்போதெல்லாம் பாட்டி நினைவு வரும் . அப்பப்போ வந்துட்டு போன பாட்டியால் நான் கற்றுக் கொண்டவை ஏராளம் சேர்ந்தே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் . கிராமங்களிலேயே இப்பொழுது உறவுகளின் வரத்து தொலைந்து போகின்றது நகர்ப் புறங்களில் சொல்லவும் வேண்டுமா ? இன்றைய தலைமுறையினரின் இழப்புகள் ஏராளம் ............பிறந்ததிலிருந்தே அம்மாவின் கைக்குள் வளரும் பெரிய அண்ணாவின் குழந்தைகள் வருடத்துக்கு ஒருமுறை ஒரு நாள் என்று தாத்தா பாட்டிகளைப் பார்க்கும் சின்ன அண்ணா குழந்தைகள் . இவர்களினுடனான போன தலைமுறையினரின் உறவுகளை அவர்கள் பிறந்ததில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன் . தாத்தா பாட்டிகளுக்கு எல்லா குழந்தைகளுமே பேரன் பேத்திகள்தான். ஆனால் நகர்ப் புறங்களில் வாழும் குழந்தைகளுக்கு அந்த உறவுகளின் ஆழத்தை உணர்த்துவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன . நல்லா இருக்கேன் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க என்று அண்ணி சொல்லிக் குடுத்து பாட்டியிடம் பேசும் பேத்தியும் அம்மாவைக் காணாமல் அழும் அங்கிருக்கும் பேத்தியும் அந்த நிமிடத்தில் ஒப்பீடு செய்யாமல் இருக்க முடியவில்லை .
திருமணத்துக்குப் பின் பணத்துக்காகவும் , சொகுசு வாழ்கைக்காகவும் பந்த பாசங்களையும் உறவுகளையும் இழந்து வாழும் வாழ்க்கையை அப்படி ஒரு உறவுக்குள் போகாமலே சுற்றத்தாரின் வாழ்கை மூலமாகவே ஏராளமாய் கற்றுக் கொண்டேன் . வீட்டில் கடைசிப் பிள்ளையாய் பிறந்ததாலே சின்ன வயதிலிருந்தே என் மூத்தோரின் சரி தவறுகளின் மூலமே நான் வளர்க்கப் பட்டேன் . அவன் அப்படிச் செய்தான் அவள் அப்படி செய்தால் நீயும் அப்படித்தானே செய்வாய் என்று அவர்களுக்காவது ஒரு தவறு செய்ய வாய்ப்பு இருந்தது எனக்கு அதுவும் இல்லை . பாதி சொல்லியும் மீதி சொல்லாமலும் அவர்களின் தவறினால் பெற்றோர் படும் வேதனை பார்த்தே நான் பாதி தவறுகள் செய்யாமலே இருப்பேன் . பேரக் குழந்தைகளின் முகம் பார்க்க ஏங்கும் அவர்களின் ஏக்கம் "அவளுக்கு எக்ஸாம் இருக்கு அத்தே இப்போ வர முடியாது " என்ற அண்ணியின் மறுப்பும் "ஆமா பிள்ளை கலெக்டர்க்கு படிக்குது " என்ற அம்மாவின் புலம்பலிலும் தெரியும் . ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் மூத்தோர் மூன்று பேரைப் பற்றியும் புலம்ப அம்மாவுக்கு கிடைத்த பெரிய மனுசி நான் . பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க ஏன் நீ இவ்ளோ சின்ன வயசிலேயே பாட்டி மாதிரி பேசுறே என்று . அவர்களுக்கும் எனக்குமான ஒரே ஒரு வித்தியாசம் குடும்பத்தில் ஒரு ஆளாய் அவர்கள் வளர்ந்தனர் குடும்ப பாரம் முழுவதும் இறக்கி வைக்கும் ஒரு கருவியாய் நான் வளர்ந்தேன் . நான் அனுபவித்த என் மருமக்கள் இழக்கும் பாட்டி தாத்தா உறவையும் மண் வாசனையையும் என் குழந்தைகள் இழக்க நான் விரும்பவில்லை .
