பன்னிரெண்டாம் வகுப்பு வரை வீட்டில் இருந்த நாள் வரை எந்த வியாதியும் வந்ததில்லை . எப்போ வீட்டை விட்டு ஹாஸ்டல் போனேனோ அன்றில் இருந்து ஊசியும் மாத்திரைகளும் பழகிப் போய் விட்டன . வீட்டில் இருந்த நாட்களில் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவமனை சென்றாலே பெரிய விஷயம் . அந்த அளவு ஆரோக்கியமாய் வாழ வழி வகுத்தவை கிராமமும் இயற்கை காய் கறிகளும் கூடவே அம்மாவின் கை மருத்துவமும் . கூட இருந்து பார்த்தவற்றில் சில மட்டும் எனக்கு நியாபகம் இருக்கு அவையும் இல்லையென்றால் என் பாடு ரொம்பவே கஷ்டம் .
1 . சளித்தொல்லை
குளிர் காலம் வந்துவிட்டாலே எல்லோரையும் போட்டு படுத்தி எடுப்பது இந்த சளி .
* பெருதும்பை என்று கிராமங்களில் மலையோர இடங்களில் கிடைக்கும் . துளசி மாதிரியான செடி முழு பச்சை இல்லாமல் கொஞ்சம் சாம்பல் கலந்த நிறத்தில் இருக்கும் . செடி 3 -4 உயரம் வரை வளரும் அதில் பூக்களும் உண்டு . அதன் இலைகளைப் பறித்து சாம்பார் வெங்காயம் தோல் நீக்கியது ஒரு கை அளவு எடுத்து தும்பை இலையும் சேர்த்து , வேப்ப மரத்து பட்டை , வெற்றிலைக் காம்பு எல்லாம் சேர்த்து உரல் இருந்தால் அதில் போட்டு நல்லா மசித்து எடுக்கணும் . கொஞ்சம் தண்ணீர் விட்டு நல்லா சாறு வரும்வரை மசிக்க வேண்டும் . சாறை வடிகட்டி தொடர்ந்து இரண்டு நாட்கள் குடிக்க சளி போன இடம் தெரியாது .
* சின்ன வெங்காயம் சென்னை மொழியில் சாம்பார் வெங்காயம் ஒரு கை அளவு தோல் நீக்கி எடுத்து இரவு தூங்கப் போகும் முன் கொஞ்சம் உப்பு சேர்த்து கண்ணை மூடிக் கொண்டு சவைத்து முழுங்கி விட வேண்டும் . கண்ல இருந்து கண்ணீர் வரும் மூக்கில் வெங்காய நெடி ஏறும் அதையெல்லாம் பார்த்தால் நெஞ்சு வலிக்க வலிக்க இருமிக் கொண்டே இருக்க வேண்டும் .
* பச்சை வெங்காயம் சாப்பிட முடியாதோர் வெங்காயத்தை கொஞ்சம் சிறிய அளவில் நறுக்கி கொண்டு நெய்யில் உப்பு போட்டு வறுத்து ரொம்ப அல்ல வதங்கிய நிலையில் சாப்பிடலாம் . பச்சையாய் சாப்பிடுவதே உடம்புக்கு நல்லது .
*********************************************
மூக்கில் இருந்து தொடர்ந்து நீர் (Running Nose ) வந்துகொண்டே இருந்தால்
* இரவு உறங்கப் போகும் முன் இளம் சூட்டில் பால் எடுத்து அதில் மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் கொஞ்சம் சர்க்கரை கலந்து இரவு , காலை என தொடர்ந்து இரண்டு நாட்கள் குடித்து வர சரி ஆகும் . இதில் தொண்டை சளியும் குறைந்து நன்று பேசவும் முடியும் .
* நிறைய நல்மிளகு காயம் போட்டு ரசம் வைத்தும் சாப்பிடலாம் .
*********************************************
2 .வாயு மற்றும் புளிப்பு தொல்லை .
பெரியவர்களுக்கே இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றாலும் இன்றைய உணவு பழக்க வழக்கத்தினால் இளைய சமுதாயத்தினரையும் இது ஒரு கை பார்கத்தான் செய்கிறது .
சில வேளைகளில் சாப்பாடைப் பார்த்தாலே ஏதோ எதிரியைப் பார்ப்பது போல் அதன் மேல் ஒரு வெறுப்பு வரும் .அதையும் தாண்டி சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிடவும் முடியாது சில நேரங்களில் சாப்பிட்டவுடன் வாந்தி வரலாம் .இதற்க்கு ஒரே வழி இஞ்சிதான் .
* இஞ்சி அதிகம் சேர்த்தால் வாந்தி போய் பேதி வந்துவிடும் அதனால் அளவோடு சாப்பிட்டால் நல்லது.ஒரு ஆள் என்றால் நடுவிரல் நீளத்துக்கு ஒரு துண்டு இஞ்சி போதும் . இஞ்சி , காயம் , நான்கு பூண்டு பல் சேர்த்து மிச்சியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நல்லா அடிச்சு வடிகட்டி குடித்தாலே போதும் . காலையில் வயிற்றுப் பிரச்னை அவ்ளோதான் இதில் வாய்வும் நீங்கும் .
**********************************************************************************************
வெறும் வாய்வு மட்டும் இருந்து கொண்டு நெஞ்சின் கீழ் அல்லது இடுப்பின் ஒரு ஓரத்தில் பிடித்துக் கொண்டு இருந்தால்
*ஒரு சின்ன முழு பூண்டு எடுத்து தீயில் நன்கு வாட்டி அதன் தோள்கள் கருகும் நிலையில் நல்ல ஒரு வாசனை வரும் .சூட்டில் வெந்த நிலையில் இருக்கும் பூண்டு தோல் நீக்கி சாப்பிட இடுப்பு பிடிப்பு சரியாகும் .
*இரவில் அவித்த முட்டை ஓடு கழற்றி அதை சுற்றிலும் ஓட்டை போட்டு உப்பில் மூழ்க வைக்க வேண்டும் .காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த முட்டையை எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் போதும் வாய்வு தொல்லை நீங்கும் .
*********************************************
கிராமங்கள் அல்லது பச்சை பசேல் என்றிருக்கும் மலைப் பகுதிகளுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் சிறியாநங்கை ,பெரியாநங்கை என்று இரண்டு செடிகள் கிடைக்கும் . கிடைத்தால் வாங்கி வருவது நல்லது , நகர்ப் புறங்களில் தொட்டிகளில் வைத்து கூட வளர்க்கலாம் . உயரம் குறைவாக வளரக் கூடியதே . நல்ல ஒரு விஷமுறிவு மருந்து . துளசி இலை மாதிரிதான் இருக்கும் தினம் இரண்டு இலைகள் கூட சும்மா உண்டு வரலாம் என்ன தின்ன முடியாத அளவில் வேப்பிலையை விடவும் கசக்கும் . பாம்பு ,தேள் அல்லது ஏதேனும் விஷ பூச்சி கடித்தால் முதலில் இந்த இலையைத்தான் தேடுவர் . உடனே சாப்பிட விஷம் முறிந்து விடும் அல்லது நிறைய மிளகு எடுத்து வாயில் போட்டு காரம் தெரியும் வரை சாப்பிட விஷம் முறியும் .
**********************************************
வயிற்றுப் புண் இருந்து உறுதியாகும் பட்சத்தில் பூண்டு கலி செய்து தொடர்ந்து சாப்பிட வேண்டும் .
பூண்டு தோல் நீக்கி நூறு கிராம் அளவில் எடுத்து அதை தனி இஞ்சி சாறுடன் முதலில் வேக வைக்க வேண்டும் . பாத்திரம் அடி பிடிக்காமல் பாத்துக் கொள்க . பூண்டு நன்று வெந்தவுடன் பருப்பு மத்து போட்டு மசிக்கலாம் அல்லது மிச்சியிலும் போட்டு மசிக்கலாம் . துவையல் மாதிரி வந்தவுடன் வாணலியில் நிறைய நல்லெண்ணெய் இட்டு மசித்தவற்றையும் போட்டு பூண்டின் அளவுக்கேற்ப கருப்பட்டி அல்லது வெல்லம் தூள் செய்து சேர்த்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கணும் . பத்து நிமிடத்தில் அல்வா போன்று வரும் இறக்கி விடலாம் . இளஞ்சூட்டில் சாப்பிடலாம் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்கத் தோன்றும் உடனே குடிக்கக் கூடாது . ஏனென்று எனக்கும் தெரியவில்லை அம்மா தண்ணீர் தர மாட்டாங்க . கொஞ்ச நேரம் கழிச்சு குடிக்கலாம் . காது நீர் புகா பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க ஒரு வாரம் வரை கேட்டுப் போகாமல் இருக்கும் . தொடர்ந்து காலை , இரவு என ஒரு வாரம் சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும் வாய்வும் நீங்கும் .
