பதிவர்கள் சொல்வதை வைத்து ஒரு படத்தை தீர்மானிக்க முடியாது என்பதை அங்காடித் தெருவிற்கு பிறகு நந்தலாலாவில் தெரிந்து கொண்டேன் . என்னவொரு ஆர்பாட்டம் இரண்டு படங்களுக்கும் அங்காடித் தெரு பற்றி ஏற்கனவே எழுதியாச்சு . நந்தலாலாவைப் பற்றி பார்க்கலாம் , எல்லோரும் நிறைய இதைப் பற்றி புல்லரிக்கச் சொல்லி முடித்தாயிற்று . பையனும் மிஷ்கினும் பேசிக்கொள்ளும் இடத்தில் உன் அம்மாவும் ஓடிப்போய்ட்டாலா என்று கேட்டு சிரிக்கும் காட்சியில் ஓடிப் போன தந்தையைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை . தந்தை ஓடிப்போவது ஒன்றும் பெரிய விசயமில்லை தாய் ஓடிப்போனால் மட்டும் தான் நாம் பெரிதாய் பேசிக் கொள்வோம் என்று நம் பாரம்பரியத்தை மீண்டும் ஒருதரம் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் இதற்க்கு ஒரு சபாஸ் போடலாம் . தாயாவது மகனுக்கு பணம் அனுப்பியாவது குறைந்தபட்சம் புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறாள் தகப்பன் ???? இது பற்றியெல்லாம் நாம் பேசக் கூடாது .
காயம் பட்ட பெண் மிஸ்கின் நெஞ்சில் செல்லமாய் ஏன் குத்திக் கொண்டு ஓடினாள்? காட்சியோடு அது ஒட்டாமல் தனியே தொங்கியது . ஒரு மசாலா படத்தில் வரும் நாயகி நாயகன் நெஞ்சில் செல்லமாய் குத்துவதே மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனமாக தெரிகையில் எதார்த்த சினிமாவில் அந்தக் காட்சி தேவைதானா ?
அடுத்து வரும் சாலையோர விபச்சாரி , காலத்தின் சூழ்ச்சியால் விபச்சாரி ஆன பின் அதிலிருந்து மீண்டு வந்த பின்பும் வயிற்று பசிக்காக மீண்டும் ரோட்டில் நின்றேன் என்று பச்சை பசேல் இடத்தில் காட்டி இருப்பது சரியா ? காய்ந்த தண்ணீரே இல்லாத ஒரு வறண்ட பூமியில் விவசாயமே பொய்த்துப் போன கதைக் களமாய் இருந்து (தாஜ்மகால் படத்தின் சூழல் )பிழைக்க வேறு வேலை இல்லாமல் வயிற்றுப் பசிக்கு ரோட்டில் நின்றேன் என்றால் ஏற்றுக் கொள்ளலாம் . அதிலும் அவரின் திருத்தப் பட்ட புருவம் ? நடை உடை பாவனைகள் மற்றும் மாற்றி விட்டால் மட்டுமே ஒரு பெண் கிராமத்து பெண்ணாக மாறி விடுவாளா ? எதார்த்த சினிமாக்களில் வரும் பெண்களின் திருத்தப் பட்ட புருவம் அப்பெண்ணை முழுவதுமாய் கதையோடு ஒன்றி பார்க்க முடிவதில்லை . அது என்னவோ கிராமத்துக் கதைகளில் வரும் நாயகன் எல்லாம் சலூன் கடையே இல்லாத ஊரில் பிறந்தவன் மாதிரி தாடியும் கண் மறைக்கும் முடியும் லுங்கியுமாகவே வருகின்றான் .ஆனால் பெண்கள் மட்டும் நேர்த்தியாய் உடுத்திக் கொண்டு திருத்தப் பட்ட (கண்டிப்பா பார்லர் இருக்கனும் ) புருவங்களுடன் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முகக் கலையோடு வருகின்றனர் .இதை எதார்த்த சினிமா இயக்குனர்கள்தான் விளக்க வேண்டும் .
மிஸ்கின் தன் வீட்டில் போய் தாயைப் பற்றி பேசும் வார்த்தைகள் அதெப்படி வார்த்தைக்கு வார்த்தை டி போட்டு பேச முடிகிறதோ தெரியவில்லை . ஒரு பெண்ணை டி போட்டு பேசும் உரிமை அவள் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நினைக்கும் எனக்கு அந்தக் காட்சியில் மிஸ்கின் மேல் வந்த ஆத்திரம் அப்பொழுதும் தந்தையைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை தாயைப் பற்றி அதற்குமேல் அசிங்கமாய் பேசிவிடவும் ஒரு வார்த்தையும் மிச்சமுமில்லை .
பையன் தன் தாயை வேறு குடும்பமாய் பார்த்தவுடன் ஸ்னிக்தாக்கு அத்தனை முத்த மழை பொழியும் அளவுக்கு அந்தப் பையனின் மனதை கொள்ளை கொள்ளும்படியாய் அவருக்கு ஒரு காட்சியும் இல்லையே கூட பயணிக்கும் சக பயணி என்ற அளவிலேயே இருந்தது . கடைசியில் ஸ்னிக்தா சிறுவனின் தாயாய் காட்டி இருப்பது போல் மிஸ்கின் அப்பெண்ணை மணந்து கூடவே சிறுவனுக்கு தந்தையாகவும் மாறி இருக்கலாம் . அது சரி பையன் தாயுக்கு மட்டுமேதானே ஏங்கினான் தந்தைக்கு இல்லியே . அதுவுமில்லாமல் விபச்சாரியை சிறுவனுக்கு தாயாக்குவது எளிது தனக்கு மனைவியாக்குவது கொஞ்சம் கஷ்டம்தான் . புரட்சி வாசலுக்கு வெளியே மட்டும்தானே தவிர வீட்டுக்குள்ளே எல்லாம் புரட்சி எடுபடாது என்று அவருக்கும் தெரிந்திருக்கும் நமது பண்பாடு என்னாகிறது . ஒருவேளை இன்னும் பல வெளிநாட்டுப் படங்கள் பார்க்க வேண்டி இருக்கும் இரண்டாவது புரட்சியை கொண்டு வர .
நல்லா இருக்கியா என்று கடைசியில் பலூன்களுடன் வந்து ஸ்னிக்தாவை தெளிவாகக் கேட்கும்போது அதுவரையிலும் ஒரு மனநிலை தவறியவராய் வந்தது ? படத்தில் வந்த அவருக்கு மனநிலை சரி இல்லையா அல்லது படம் பார்த்த நமக்குதான் சரி இல்லையா ? முதல் காட்சியிலேயே எனக்கு சரியா போச்சு ஊசி மட்டும் போட்டுட்டே இருக்கான் என்று சொல்லி அதன் தொடர்ச்சியான காட்சிகளில் இடுப்பில் நிற்கும் அளவிற்க்குக் கூட அந்த உடையை போட முடியாதவராய் காட்டி நடுவில் சிலச் சில இடங்களில் தேர்ந்த புத்தியும் உணர்ச்சியும் உள்ளவராய் காட்டி முடியல . ஏன் இந்த குழப்பம் என்றே தெரியவில்லை இதற்க்கு கண்ணுக்குள் நிலவு தேவலாம் .
இளையராஜாவின் இசையைப் பற்றி நான் பேசவில்லை என்றால் எனக்கு விமோட்சனம் கிடைக்காது . நம்மவர்கள் புகழ்ந்து தள்ளும் அளவிற்கா இதில் இசை இருக்கு கொஞ்சம் நெஞ்சை தொட்டு சொல்லுங்க மக்களே . ஒரே மாதிரியான இசை பல இடங்களில் வந்து முதலில் கேட்கும்போது இருந்த ரசனை மீண்டு மீண்டும் கேட்கையில் சலிப்புதான் வந்தது . இதை விடவும் சிறப்பாக இளையராஜா இசையில் பின்னி இருக்கிறார் . மசாலா சினிமாவில் இருந்து இது வேறு பட்ட படம் என்பதாலேயே எல்லோரும் தூக்கி வைத்து பேசினார்களோ என்றுதான் தோணுகிறது . அதுவும் படம் முழுக்கவே ஒரே சோக கீதம் அம்மாவைத் தேடிப் போகும் சிறுவனின் பயணம் சோகமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன ? கதை போகப் போக பாதியில் அந்த சோகத்தை கொண்டு வந்திருக்கலாமே . ஆரம்ப காட்சிகளிலேயே இது ஒரு சோக படம் என்பதை இசை சொல்லாமல் சொல்கிறது .
இத்தனை மைனஸ் தாண்டியும் படம் எனக்கு பிடித்திருந்ததுதான் இல்லையென்று சொல்லவில்லை தழுவலோ டவலோ கண்டிப்பாய் இது ஒரு நல்ல முயற்சி .
