வேதம் புதிது இந்த மாதிரியான படங்கள் பெரும்பாலும் தனியே இருந்தே பார்த்தே பழக்கம் ஏனோ இந்த முறை வேதம் புதிது நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தது சந்தோசம் குடுத்தது .இந்தப் படம் கண்டிப்பாய் அனைவரும் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய படம் . படம் முடிந்ததுமே இப்பவும் இந்த மாதிரி ஜாதி வெறி பிடிச்சு இருக்குறாங்களா எண்ண எல்லோரும் படிச்சு வராங்களே என்ற தத்துவத்தை தோழி உதிர்க்க அவளின் இயலாமையை நினைத்து என்ன சொல்ல .இந்த படம் மட்டும் அல்ல இதைப் போல் இன்னும் ஆயிரம் ஓராயிரம் படங்கள் வந்தாலும் நம் மக்கள் இப்படியேதான் இருப்பர் .ஜாதிவெறி பிடித்த மனிதர்களை தீயிலிட்டு கொளுத்தினாலும் தீராது அவர்கள் மண்ணில் மறையும் வரையிலும் இது மாறாது . படத்தின் ஒரு இடத்தில் சிறுவன் ஆற்றை கடந்ததும் சத்யராஜைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பான் "வார்த்தைக்கு வார்த்தை பாலு xxxx என்று சொல்றீங்களே பாலு என்பது உங்கள் பெயர் பின்னாடி இருப்பது என்ன நீங்க படிச்சு வாங்கிய பட்டமா ? நான் கரை ஏறிட்டேன் நீங்க எப்போ ஏறுவீங்க" இதைக் கேட்டதும் சத்யராஜ் கன்னத்தில் ஒரு கை அறைவது போல் பல முறை வரும் . சின்ன வயதில் இந்தப் படம் பார்த்திருந்தால் கூட இந்த அளவு ஒன்றிப் போய் பார்த்திருப்பேனா அல்லது காட்சிகளின் வீரியம் இப்பொழுது போல் அன்று புரிந்திருக்குமா தெரியவில்லை .
பையன் படிச்சு முடிச்சு படி தாண்டி வேலைக்கு போகும்போதே காதில் கூடவே மந்திரமும் ஓதப் படுகிறது . ராசா என்ன ஆனாலும் சரி உனக்கு நம்ம ஜாதிலதான் கல்யாணம் முடிக்கணும் தடம் மாறிப் போயிராதப்பா . மனம் விரும்பிய ஆண் பெண் வேறு ஜாதியாய் இருந்து தொலைத்தால் குடும்ப வறட்டு கவுரவுத்துக்காக அதை ஒடித்து தன் ஜாதி பெண் ஆண் எடுத்து முடிக்கும் உணர்சிகளற்ற திருமணங்களே ஏராளம் . உனக்கு என்னத் திருமணம் பிடிக்கும் காதல் திருமணமா , வீட்டில் பார்த்து முடிப்பதா என்று கல்லூரி படிக்கையிலேயே பெண்கள் ஒவ்வரிடமும் திருமணம் பற்றிய கேள்விகள் போகும் . எல்லோரும் ஏதாவது ஒன்றை சொல்ல கலப்புத்திருமணம் என்று என் வாய் சொல்லும் . எல்லோரும் ஒரு வழியில் போனால் நீ மட்டும் வேற வழியிலேயே போ என்று திட்டும் விழும் . ஒரு பாடத்துக்கு எல்லோரும் ஒரு புக் படித்தால் யாருமே படிக்காத ஒரு புக் வைத்து நான் மட்டும் படிப்பேன் . எலோரும் செய்வதையே நாமும் செய்தால் மற்றவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? . கலப்புத்திருமணம் என்று அன்றைக்கு நான் சொல்லும்போது அதில் இருக்கும் மற்ற குடும்ப விஷயங்கள் பற்றி அந்த அளவு தெரிந்திருக்கவில்லை . நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நாள் கலப்புத் திருமணம் பற்றிய விவாதம் போகும்போது அட இது நம்ம பகுதியாச்சே என்று நிகழ்ச்சி முழுக்க இருந்து பார்த்ததில்தான் தெரிந்தது கலப்புத் திருமணதிற்கு ஆண்களைவிடவும் பெண்களின் ஆதரவு அதிகம் இருந்தது . ஆண்கள் சொல்லிய காரணங்கள் ஒவ்வொன்றும் ஏட்டில் பதிக்கப்பட வேண்டியவை . குடும்பம் , சடங்கு , சம்பிரதாயம் இவற்றில் பெண்களைவிடவும் ஆண்களின் ஈடுபாடு ரொம்பவே அதிகமாய் இருப்பது தெரிந்தது . வேறு ஜாதிப் பெண் என்றால் மேற்சொன்ன சங்கதிகள் எல்லாம் மாறும் இவர்களால் புதிய சங்கதிகளுக்கு உட்படித்திக் கொள்ள முடியாதாம் பல பிரச்சனைகள் வருமாம் .வர பெண்ணுக்கும்தானே எல்லா சங்கதிகளும் புதுசு அவள் அதை ஏற்க தயாராய் இருக்கும்போது ஆண்களால் வேறு ஜாதி சங்கதிகளுக்கு பழக முடியாதாம் .இந்த இடத்தில் நளினி ஜமீலா சொன்ன ஒரு பொன்வாசகம் நினைவுக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை .
அந்தக் காலத்தில் படிப்பறிவு என்பது குறைந்தே இருந்தது அதனால் மக்கள் ஜாதிவெறி பிடித்து அலைந்தனர் இன்று எல்லோருமே ஒரே வகுப்பில் இருந்து படம் படிக்கின்றனர் ஜாதி வெறி குறைந்து இருக்கிறது என்ற கருத்து எத்தனை பேருக்கு ஏற்புடையதோ என்னால் ஏற்க முடியவில்லை .15 வயதிலேயே சக மாணவன் பஸ்ஸை கொளுத்தணும் மரத்தை வெட்டிப் போடணும் என்று சிவந்த கண்களுடன் வகுப்பில் பேசும்போது அவன் மனிதன் என்பதையும் தாண்டி நான் இன்ன ஜாதி அதற்கு நான் இப்படி பேசுவதே என் வீரம் என்ற அவன் ஜாதி வெறி அவன் கண்களில் தெரிந்தது .பள்ளியில்தான் மாணவர்கள் அப்படி இருப்பர் கல்லூரி வயது வந்த பக்குவப் பட்ட மாணவர்கள் படிக்கும் இடம் என்று நினைத்திருந்தேன் அதிலும் மண் விழுந்தது . உதவித்தொகைப் பெறும் மாணவனைப் பற்றிய இளக்காரப் பேச்சும் அவர்களின் நடவடிக்கைகளும் ஏராளம் . பாதி செய்திகள் கல்லூரி முடிந்த பின்னரே காதுக்கு வந்தன .மாணவர் விடுதியில் நடந்த பல ஜாதிச் சண்டைகளும் அவர்கள் கட்டி உருண்ட செய்திகளும் கேட்கையில் இந்த மாதிரி பிசாசுகளுடனா படித்தோம், பழகினோம் என்று அவர்களுடனான காலங்கள் நினைத்து பார்க்கவே அருவருப்பாய் இருந்தது .பெண்கள் விடுதியில் ஒரு நல்ல விஷயம் இருந்தது ஒரு பொதுவான விஷயம் எடுத்து விவாதிப்பது . இந்த நல்ல விஷயம் முடிவுக்கு வர வேண்டும் என்பதுபோலவே அன்று அந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டது . இட ஒதுக்கீடு தேவையா தேவை இல்லையா என்பது , பல கட்ட விவாதத்துக்குப் பின் அதன் பாதை மாறிப் போய் அதில் ஒரு வன்மம் தலை எடுத்தபோது அன்றோடு அந்த விவாதத்துக்கே முற்றுப் புள்ளி வைத்தனர் . நானும் முதலாம் ஆண்டு மாணவி என்பதால் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் .
பணிபுரியும் (புரிந்த ) இடத்தில் கேரளப் பெண்ணிடம் திருமணத்துக்கு கேரளப் பெண் கேட்டு அந்தப் பெண்ணும் எங்கள் ஊரில் தாழ்த்தப் பட்ட பெண்கள் பலர் இருக்கின்றனர் என்ற போது அய்யய்யோ அவர்களைக் கட்டினால் எங்க அப்பா உத்திரத்தில் கட்டித் தொங்க விடுவார் என்று பெருமையாய் பேசிச் சிரித்த படித்த பொறியாளர்களைப் பார்த்து அவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று அந்த இடத்திலும் வெறும் பார்வையாளராய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் .இந்த மாதிரியான மனிதர்களிடம் விவாதம் பண்ணுவதே வேஸ்ட் . பெயருக்குப் பின்னால் இலவச இணைப்பு மாதிரி ஜாதியையும் சேர்த்துப் போட்டு பெருமை படும் நிலை மாறி வெறும் பெயர் மட்டுமே எல்லோராலும் எழுதப் படும் காலம் என்றுதான் வருமோ .அரசாங்கம் குடுக்கும் ஒரு A4 சைஸ் பேப்பருக்கு குடுக்கும் மரியாதையை ரத்தமும் சதையும் உணர்சிகளும் நிறைந்த மனிதனுக்கு மனிதன் குடுப்பதில்லையே . அதுசரி ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி எந்த ஜாதி என்று பட்டிமன்றம் போட்டு விவாதிக்கும் சாதாரண மக்கள்தானே நாம் .
