ஒரு தினசரி பத்திரிகையின் முதல் பக்க தலைப்பு செய்தி " மலைக்கு மாலை போடும் பக்தர்களால் டாஸ்மாக் விற்பனை சரிவு " என்னவொரு வருத்தமான விஷயம் முதல் பக்கத்தில் வரவேண்டிய செய்திதான் . வெள்ள செய்திகூட இரண்டாம் பக்கத்தில் வரும் இந்த தண்ணீ செய்தி மட்டும் முதல் பக்கத்தில் காலக் கொடுமைடா சாமி வேற என்ன சொல்ல . ஆமா இப்போ மாலை போடும் சீசன் நல்லாவே களை கட்டிருக்கு . ஆமா எதுக்கு மாலை போடுறாங்க ? ஐம்புலனும் அடக்கதானே ? கழுத்தில் மாலையும் நெத்தியில் சந்தனமுமாய் வரும்போதே எதிரே வரும் பெண்ணின் மேல் கண்கள் அலைபாய்வதேன் ? மாலை போடுவதற்கு முன்பு நல்லா ஒரு வெட்டு வெட்டுவாங்க அடுத்து மலைக்கு போயிட்டு வந்த பின்னரும் விரதம் இருந்த நாட்களுக்கும் சேர்த்து வைத்து ஒரு வெட்டு . அப்புறம் எதுக்கு மாலை போடணும் ?
சைதாபேட்டையில் இருந்த காலத்தில் வேலைக்கு போயிட்டு நடந்து வரும் வழியில் சுரங்கபாதை அருகில் நானும் என் ப்ரெண்டும் நடந்து வந்து கொண்டிருக்க 15 வயதுக்குள் இருக்கும் ஒரு மாலை போட்ட பொடியன் எங்களை பார்த்து வரியா என்று கேட்க வந்த கோவத்தில் காது மடல்கள் வரை சூடேற இவன்லாம் என்ன ம .............க்கு மாலை போடுறான் என்று திட்டிக் கொண்டே வந்தேன் . வந்த ஆத்திரத்துக்கு அவனை பிடிச்சு கன்னத்துல ஒன்னு பளார் என்று விடனும் போல இருந்தது நம்மால என்ன செய்ய முடியும் நமக்குள்ளேயே திட்டுவதைத் தவிர . அவன் காதுல விழுற மாதிரி ஒரு வார்த்தை சொல்லி திட்டினாலும் அவன் ஊருக்கே கேட்குற மாதிரி ஒரு பத்து வார்த்தை நாராசமா போடுவான் . ஆனா அந்த நேரத்தில் அவனை அந்த வார்த்தை சொல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்லை . அவன் மாலை போட்டிருக்கும் சாஸ்தாவின் மேல் அவனுக்கு இருக்கும் பக்தியை விட எனக்கு அதிகம் பக்தி இருக்கிறது .
அக்டோபர் வந்துவிட்டாலே மாலை போடுவது ஒரு பாஷன் மாதிரி ஆய்டுச்சு . மாலை போட்டால் வீட்டில் நல்லா மரியாதை கிடைக்கும் வேலைக்கு சுடச்சுட சாப்பாடு கிடைக்கும் . மலைக்கு ஒரு பிக்னிக் மாதிரி போயிட்டு வரலாம் அப்படியே வரும் வழியில் குற்றாலத்தில் ஒரு குளுகுளு குளியல் திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு பயணம் கூடவே ஒரு வெதுவெது குளியல் இப்படித்தான் நிறைய நடக்கிறது . ஏன் இந்த பொய்யான பக்தி வேஷம் ? இதில் நிஜமாவே முழு பக்தியோடு மாலை போடுவோரை நான் ஏதும் தப்பு சொல்லவில்லை . திடிரென்று என் நண்பனிடமிருந்து போன் .
"மதார் உன்கிட்ட பணம் இருக்கா "
"கம்மியாதான் இருக்கு என்ன சொல்லு "
"நம்ம பசங்க மாலை போட்டு இருக்கானுங்க மாசக் கடைசி எவன் கையிலும் பணம் இல்லை சரியா சாப்டாம பட்டினி கிடக்குரானுங்க அதான் . தற்செயலா சென்னை வந்தேன் உன்கிட்ட இருந்தா குடு சம்பளம் வந்ததும் தரேன் "
"சரி வந்து வாங்கிட்டு போ ........."
வேற என்ன செய்ய இதே அவன் ஊர் சுத்தவோ தம் தண்ணீ அடிக்கவோ கேட்டுருந்தா பத்து பைசா கூட குடுத்திருக்க மாட்டேன் . காலேஜ் இல் தம் அடிக்க ஒருத்தன் என்கிட்ட மல்லு கட்டுவான் ஒரு ஐஞ்சு ருபாய் குடு கான்டீன் போக வேண்டுமென்று . நீ சாப்பிடனுமா கேளு தரேன் தம் அடிக்க எல்லாம் காசு கேட்டே மவனே நீ செத்தே ..........வடை வாங்கத்தான் கேக்குறேன் என்று அடுத்த பொய் வரும் . அப்படியா சரி வா நானும் வரேன் வாங்கி தரேன் நீ சாப்பிடு என்றால் திருட்டு முழி முழிப்பான் .
வாங்கினபடியே திருப்பி குடுத்துட்டான் . அடுத்த வருடம் அவனே நானும் .........யும் மாலை போட்ருக்கோம் என்று அவன் சொல்லுகையில் எனக்கோ அதிர்ச்சி . எந்த மரத்தடியில் உக்கார்ந்தே திடீர் ஞானோதயம் வந்திருக்கு என்று கேட்டால் மாலை போட்டு இருக்கும் நாள் வரையில் தண்ணீ தம் தொடாமல் இருப்போமே அதுக்குதான் என்று விளக்கம் வேறு . ஆமா அவன் ஒரு சிறந்த குடிமகன் பேசிக்கா ரொம்ப நல்லவன் . திடிரென்று போன் வரும் .
"மதார் எங்கே இருக்கே "
"என்னப்பா சென்னை வந்துட்டியா " என்பேன் அவன் தொழில் விசயமாய் அடிக்கடி சென்னை வருவதுண்டு .
"ஆமா எப்படி கண்டு பிடிச்சே "
"கழுதை கெட்டா குட்டி சுவரு .............உன் தண்ணீ அடிக்குற கோட்டா வந்திருக்கும் சென்னை வந்திருப்பே "
ஒரு பத்து பேர் ஒண்ணா சேர்ந்து ரூம் எடுத்து இருக்காங்க சென்னைக்கு யார் வந்தாலும் அவர்கள் ரூமிலேதான் அடைக்கலம் . அப்படியே தாராளமாய் தண்ணீரும் . இவன்கிட்டையும் எத்தனையோ முறை எல்லாம் விட்டுவிடு என்று சொல்லி என் தொண்டை தண்ணீ வத்திப் போனதுதான் மிச்சம் . அதன் பிறகு சொல்வதே இல்லை .
அவன் மலைக்கு மாலை போடுவதை சொன்னதும் அதற்கு குடுத்த விளக்கமும்
"அப்போ சாமிக்காக எல்லாம் விடுவீங்க அதுவே உன் உடம்புக்கு நல்லது அப்படியே விட்டுடு என்று சொன்னா கேட்க மாட்டே அப்படித்தானே ?"
"சரி சரி விடு விடு "
"கேக்குரவனா இருந்தா சொல்லலாம் உங்களுக்கெல்லாம் ஒருத்தி வந்து பூரிகட்டையால அடிச்சாதான் புத்தி வரும் "
அதுக்குமேல என்ன பேசினாலும் அவர்கள் காதில் விழாது என்பதால் இப்போ எல்லாம் அறிவுரையே சொல்வது கிடையாது .
இந்த மாலை போடும் விஷயம்
எங்க ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க . இரண்டு நண்பர்கள் சுவாமி தரிசனம் பண்ண பொடிநடையா நடந்து திருச்செந்தூர் போனார்களாம் .போகும்வழியில் பல குளம் குட்டைகள் உண்டு அதிலே ஒரு குட்டையில் நிறைய மீன் இருக்க இருவரும் இறங்கி மீன் பிடித்தார்கள் . அதிலொருவன் நான் இந்த மீன் எல்லாம் எடுத்துட்டு போய் சமைச்சு சாப்பிட போறேன் என்று சொல்லி வீடு திரும்பினான் . ஒருவன் எனக்கு முருகன்தான் முக்கியம் என்று சொல்லி கோவில் போய் சேர்ந்தான் . வீடு திரும்பியவன் சமைத்து சாப்பிடும் போது ச்சே இப்படி அற்ப மீனுக்கு ஆசைப்பட்டு திரும்பி வந்துட்டோமே அவன் நல்லா தரிசனம் பண்ணுவானே என்று தனியே நொந்து கொண்டான் . அங்கே கோயிலில் முருகன் முன்னிலையில் மற்றொருவன் அவன் இப்போ நல்லா மீன் சாப்பிட்டு இருப்பான் என்று மனதினுள் நினைத்தான் . இதில் யார் பக்தியில் சிறந்தவன் என்று பெரியோர் எங்களிடம் கேள்வி கேட்பர் வேறு யாரு மீன் தின்றவன்தான். மீன் சாப்பிடும் வேளையிலும் அவன் பக்தியில் மேலோங்கி நின்றான் . முருகன் முன்னிலையிலும் அடுத்தவனுக்கு மீன் மேலேயே எண்ணம் இருந்தது .
இப்படி எந்த புலனுமே அடக்க மாட்டாதவனுக்கு எதற்கு மாலையும் பக்தியும் ? அதற்கு மூன்று வேலையும் மூக்கு பிடிக்க மனம் விரும்பியதை சாப்பிட்டு மனதளவில் தூய்மையாய் இருந்து அந்த இறைவனை வழிபடலாம் அவர் ஒன்றும் கோவித்துக் கொள்ள மாட்டார் . யாரோ எக்காலத்திலோ ஏற்படுத்தி வைத்து விட்ட பழக்கங்களை பொய்யாய் கடைபிடிப்பதைவிட எப்போதும் போல் இருந்து கொண்டே ஆண்டவனை தரிசிக்கலாம் .
