பகுதி 1
பகுதி 2
ஒரு நாள் இரவில் லட்சுமி வீட்டு முற்றத்தில் பெருசுகள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க கொஞ்ச தூரத்தில் இருந்த கல்லின் மேல் லட்சுமியும் மஞ்சுவும் மட்டும்
"ஏன் லட்சுமி அழுதுட்டு இருக்கே "
"இல்ல மஞ்சு என் அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டா நாளைக்கு சாயங்காலம் பூ வைக்க வராவ .இந்த கருஞ்சட்டி பயலும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கா . எனக்கு அரளி விதையை அரைச்சு குடிச்சுட்டு செத்துரலாம் போல இருக்கு "
"ஏ லட்சுமி அந்த மாதிரி ஏதும் பண்ணிக்காத " என்று அந்த நேரத்தில் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் உள்ளுக்குள் எங்கே அவள் அப்படி செஞ்சுடுவாலோ என்று பயம் மஞ்சுவுக்கு இருந்தது .
மறு நாள் காலை மஞ்சு தன் சித்தப்பா பையனிடம் இது பற்றி புலம்பிக்கொண்டு இருந்தாள்.
"பாவம் லட்சுமி இந்த சுடலை ஏன் இப்படி பண்றான் ? இவ வேற ஏதாவது செஞ்சுப்பாலோன்னு பயமா இருக்கு "
"எலேய் அப்படி எதுவும் நடக்காது பாக்கலாம் நான் அவன்கிட்ட பேசிருக்கேன் " என்றான் அண்ணன்.
பூ வைக்கும் நிகழ்ச்சிக்கு சாமான் வாங்க போன லட்சுமியின் தாய் தெருவே அலறும்படி வீட்டு வாசலில் நின்று சத்தம் போட கூட்டம் கூட ஆரம்பித்தது .
" ஏ முத்தம்மா என் மவளை பார்த்தியா ? வீட்டுல பெட்டில வச்சுருந்த நகையும் காணோம் அவளையும் காணோம் நான் எங்கேன்னு போய் தேடுவேன் பூ வைக்க வேற ஆளுங்க வருவாவளே அவியளுக்கு நான் என்ன சொல்ல" என்று அழுது கூப்பாடு போட மஞ்சுவுக்கு விளங்க ஆரம்பித்தது .
இந்த புலம்பலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு லட்சுமி வீட்டுக்கு சென்றால் மஞ்சு . அங்கே அழுதுகொண்டே தலை வாரிக் கொண்டிருந்தாள் லட்சுமி மஞ்சுவுக்கு ஏதோ கொஞ்சம் புரிய ஆரம்பித்தது . ஆனாலும் மனதுக்குள் இவ அரளி விதை குடிச்சு சாவறதுக்கு எங்கேயாவது போய் அவனோடு சந்தோசமா உயிரோடு இருந்தாலே போதும் என்று நினைத்துக் கொண்டே ஒன்றும் தெரியாதவள் போல் அவளுடன் பேசிக் கொண்டு இருந்தாள் .
எப்பொழுதும் போல ஒரு முழுக்கை ஆண்கள் சட்டை , ஒரு பாவடை உடுத்திக்கொண்டு மஞ்சு கண்முன்னாடியே வீட்டை விட்டு வடக்கு நோக்கி போனவள்தான் வீடு திரும்பவில்லை .
கூட்டத்தின் நடுவிலேயே மஞ்சுவின் சித்தப்பா பையனும் நிற்க அவனிடம் மஞ்சு மெதுவாய் கேட்க லட்சுமியும் சுடலையும் ஓடிப் போன செய்தி அவனிடமிருந்து வந்தது . எதுவும் தெரியாதது போலவே இருவரும் நின்று வேடிக்கை பார்க்க
"ஏ தாயி நம்ம அறிவு ஆசாரி மவனையும் கானோம்மாம்ல " என்று ஒன்று வெடியை கொளுத்தி போட லட்சுமியின் அம்மாவின் ஆட்டம் கலை கட்டியது .
" நா அண்ணே அண்ணேன்னு அவன் அப்பன கூப்டதுக்கு அந்த கரியன் இந்த வேலை பண்ணிட்டானே நான் என்ன செய்ய போனவ சும்மாவா போனா வீட்ல இருந்த எட்டு பவுன் நகையையும்லா எடுத்துட்டு போய்ட்டா"
ஊருக்குள் செய்தி பரவ ஆரம்பித்தது .
"நம்ம மணி தேவர் மவளும் அறிவு ஆசாரி மவனும் ஓடி போய்ட்டாவலாம்ல"
இதில் லட்சுமிக்கு வட்டம் போட்ட பல இளவட்டங்களுக்கு வயிற்றில் புகை . எப்படில அந்த கரியன்கிட்ட அவ மாட்டினா என்று அவர்களுக்குள் ஒரே சோகம் . காதலுக்கு கண்ணுண்டா என்ன நிறம் பார்க்க .
"என்ன ஒரே கூட்டமா இருக்கு "
"அறிவு ஆசாரி மவனும் மணி தேவர் மவளும் ஓடிப் போயிட்டாவ "
"அடப் பாவமே , நான் பெரிய வாய்க்கா வயல்ல வரப்பு வெட்டிட்டு இருந்தேன் அப்போ இந்த புள்ள தங்கம் வாழைக்குள்ள போனா உள்ள போனப்ப பாவாடை சட்டையோட போனவ கொஞ்ச நேரத்துல வெளிய சேலையோட வந்தா. இந்தப் பயலும் நம்ம தங்கராசா வய வரப்புல நின்னுகிட்டு இருந்தான் . அப்புறம் ரெண்டு பேரும் ஜோடி போட்டு பஸ் ஸ்டாப் ல போய் மேக்க போற திருநெல்வேலி பஸ்ல ஏறிட்டாவ .நானும் ஏதோ விள்ளங்கமால இது இருக்குன்னு என்ன ஏதுன்னு பாத்து சேதி சொல்லிட்டு போவலாம்னுலா வந்தேன் "
கொஞ்சகொஞ்சமாக எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது .
லட்சுமி முன்னேர்ப்பாடாய் சட்டைக்குள் வைத்து சேலை எடுத்து போய் வாழை தோட்டத்துக்குள் வைத்து கட்டி அவனோடு போயாச்சு
"யோவ் நல்ல ஆளுயா நீறு ரெண்டு பேரையும் போவ விட்டு வேடிக்கை பார்த்துபுட்டு ஆடி அசைஞ்சு மெதுவா இப்போ வந்தீரோ சேதி சொல்ல "
"நான் என்னயா பண்ண ? வயசு போன ஆளு அவன் இளவட்டம் அவனைப் போய் என்னை மறிக்க சொல்றீரா ? அடிச்சு தள்ளி சவுதிக்குள்ள போட்டுட்டு போனா நீறாயா வந்து பார்ப்பீறு?. தள்ளாடி விழுந்து செத்து போய்ட்டானு கிடங்குள தூக்கி பொதைச்சுட்டு உம்ம வேலை முடிஞ்சு போய்ட்டுன்னு போயிட்டே இருப்பீரு அப்புறம் என் புள்ள குட்டியள யாருவே பாக்குறது "
"சரியா விடுங்க விடுங்க அதுவ என்னவோ ஓடிபோயிருச்சுவ நடுல நீங்க வெட்டிகிட்டு கிடந்து சாவாதீய"
"சரி சரி சின்ன புள்ளைங்க ஏதோ பன்னிருசுங்க வேற என்னப்பா இப்போ பண்ண முடியும் , பேசாம கூட்டிட்டு வந்து கோயில்ல வச்சு தாலியை கட்டுங்கப்பா . என்ன தேவரே இப்படி தலைல கைய வச்சுட்டு திண்ணைல உக்காந்துட்டா மட்டும் எல்லாம் சரியா போயிருமாயா ? போய் பிள்ளைல கூட்டிட்டு வர வழியப் பாரும் .பொம்பளப் பிள்ளை ஓடிப் போச்சு வேற என்னய்யா பண்ண "
ஓடிப்போன ஜோடி நாகர்கோயில் அருகில் வாழ்க்கைப்பட்டு போன சுடலையின் பெரியப்பா மகள் வீட்டில் தஞ்சம் புக செய்தி வந்து சேர்ந்தது .
இதனிடையே வெயிலுக்கு தலையில் துண்டைப் போட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மஞ்சு அவள் அக்காவிடம மெதுவாய்
"எனக்கு முன்னாடியே தெரியும் அவ செத்து போய்ரக் கூடாதுன்னுதான் நான் வெளியே சொல்லல " என்று சொல்ல
"அடிபாவி சரி இதுக்கு மேலயும் யார்கிட்டயும் சொல்லாத அவ அம்மா அம்மா இருக்குற ஆத்துரத்துல அப்புறம் நம்ம கிட்ட சண்டைக்கு வந்திரும் ." என்றதும் அமைதியாய் வேடிக்கையை தொடர்ந்தாள் .
ஆச்சு , அவர்களின் திருமணம் கோயிலில் வைத்து இரு சாதி கலந்து இனிதே நடந்து ஆறு வருடங்கள் ஆயிற்று .இப்பொழுது மூன்று பிள்ளைகளுடன் சந்தோசமா இருக்கா . கொஞ்ச நாட்கள் இரு குடும்பங்களும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தாலும் முதல் குழந்தை பிறந்தவுடன் எல்லரும் பேசி கலந்தாச்சு . ஒரு கலப்பு திருமணம் எந்த வெட்டு குத்தலும் இல்லாமல் நடந்தேறிய கதையும் அவர்கள் ஓடிப் போன கதையும் மஞ்சுவாலும் அந்த தெரு மக்களாலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதுதான் . முற்றும் .........
டிஸ்கி : யாரும் திட்டாதீங்க இது ஒரு உண்மை சம்பவம் இதில் வந்தா மஞ்சு அடியேன்தான் .
