பகுதி 1
மஞ்சு , லட்சுமி வீடுகள் அருகருகே இருந்ததாலும் ,லட்சுமி மஞ்சுவைவிட ஒரு வயதே பெரியவளாய் இருந்ததாலும் இருவரும் அவ்வளவு நெருக்கம் . தினமும் மஞ்சு பள்ளியில் இருந்து வந்ததும் லட்சுமி வீடு போய் அவர்கள் வீட்டு திண்ணையில் இருந்து கொண்டே கதையடிப்பது வழக்கம் . லட்சுமி மழைக்கு கூட பள்ளி பக்கம் போகாததால் மஞ்சுவுக்கு அவளுக்கு எப்படியாவது எழுத படிக்க கற்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் . லட்சுமியின் அதிக பட்ச ஒத்துழைப்பால் அவளை கை நாட்டிலிளுருந்து கையெழுத்து போடும் அளவுக்கே மஞ்சுவால் செய்ய முடிந்தது .
ஆண் பெண் பேதமில்லாமல் இருந்த தெரு விளையாட்டு ஒரு காலத்தில் அடியோடு நின்று போய்விட்டது . எல்லோரும் வளர்ந்துட்டாங்க ஒரு வயதுக்கு வந்தாச்சு .
குழந்தையிலிருந்து பெரிய மனுசிகளாய் ஆன பின் மஞ்சுவும் படிப்பில் கவனம் செலுத்த லட்சுமியின் பழக்கம் மட்டும் அப்படியே இருந்தது .
இடையில் அரசல் புரசலாக செய்தி வந்தது மஞ்சுவின் அக்கா மூலம் .
"மஞ்சு நம்ம லட்சுமியும் கருஞ்சட்டி தலையனும் (செல்ல பெயர் ) பேசிக்கிறாங்களாம் ஒன்னும் புரியல "
கருஞ்சட்டி தலையன் என்று எல்லோராலும் செல்லமாய் அழைக்கப்படும் சுடலை எப்போதும் ஒரு வேட்டை நாயுடன் பவனி வருவான் .அவன் மேல்சட்டை அணிந்து யாரும் பார்த்துருக்க மாட்டாங்க .
"என்ன ஆசாரி மடை மடையா வாய்க்கால்ல தண்ணி போனாலும் உம்ம மவனுக்கும் மட்டும் குளிக்க தண்ணி இருககாது போல " என்று சொல்லாத ஆள் இல்லை .
நாயை சோப்பு போட்டு குளிப்பாட்டும் அவன் உடம்பு சோப்பு பார்த்ததுண்டா என்று தெரியாது . கருகருவென்று கோயில் சிலை மாதிரி இருப்பான் .
லட்சுமி சும்மா குஸ்பு மாதிரி இருக்குற பொண்ணு அவ கலருக்கும் அழகுக்கும் பலர் அவளுக்கு வட்டம் போட அவள் கண்கள் பார்த்தது என்னவோ சுடலையை மட்டும் . இவள் வீட்டு வாசலில் இருந்து அவனை பார்க்க அவன் வீட்டு வாசலில் இருந்து இவளை பார்க்க என்று ஒரு பாரதிராஜா படம் அங்கு ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது .
"ஏ தாயி உன் மவ இறக்கடி பைப்புல அறிவு ஆசாரி பையன் கூட பேசிட்டு இருக்கா கொஞ்சம் பார்த்து கண்டிச்சு வை தாயி "
ஒரு பெருசு போற போக்கில் வத்தி வைக்க லட்சுமிக்கு மெதுவாய் ஆப்பு ரெடி ஆனது .
