"கத்தரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி இப்பவே வந்துட்டா "
இவை அவள் அம்மாவின் திருவாய் மொழிகள் ...........
பதிமூன்று வயதில் ஒரு நான்கரை அடி உயரத்தில் 30 கிலோ எடையுடன் கூடிய அவள் பெரிய மனுசியானபோது அதைக் கொண்டாடியதை விட கேலி பேசியதுதான் அதிகம் . எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்க அவளுக்கோ தேர்வு மேலேயே எண்ணம் முழுக்க இருந்தது . வகுப்பிலும் முதல் மாணவி என்பதால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்பதிலேயே அவளின் கவலை முழுவதும் குடிகொண்டிருந்தது . சகோதரன் பள்ளியில் போய் இதுவிசயமாய் கேட்க தலைமையாசிரியரும் தேர்வு கண்டிப்பாய் எழுத வேண்டும் என்று சொல்ல அவளுக்கு கேட்ட மாத்திரத்திலேயே பறப்பது போல் இருந்தது .அதுவரையிலும் கேட்ட கேலி பேச்சுக்கள் கூட அதில் காணாமல் போய்விட்டன . பெரிய மனுசியான பெண்ணுக்கு இரவில் தலைக்கு தண்ணீர் ஊற்றி புடவை உடுத்துவது வழக்கம் . அவளுக்கு எல்லாமே தலைகீழாய் நடந்தது . காலையில் தலைக்கு ஊற்றி புது சுடிதார் போட்டு உட்க்கார வைத்து சிறிது நேரத்திலேயே எக்ஸாம் எழுத பள்ளிக்கு அனுப்பப் பட்டாள் . ஒவ்வொரு பெண்ணின் உடலும் புடவை பார்ப்பது அவள் பெரிய மனுசியாய் ஆகும்போதே இவள் உடம்பு மட்டும் முதன்முதலில் புடவை சுற்றியது கல்லூரி பெண்கள் தின விழாவன்றே . இவளுக்கு எல்லாமே மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாய் நடப்பதுவே வாடிக்கையாய் போய்விட்டது .
பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரிந்த அவளை அந்தப் பதிமூன்று வயதில் அறையின் ஒரு ஓரத்தில் இருக்க வைத்திருந்த அந்நாளில் வந்து எட்டி பார்த்த சின்ன அண்ணனை பார்த்து அவள் முகத்தில் வந்த வெட்கம் அதுதான் அவளின் கடைசி வெட்கமாகக் கூட இருந்திருக்கும் .அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதைத் தொடாதே இதைத் தொடாதே அங்கே உட்காராதே என்று செய்யக் கூடாத தொடக் கூடாத பட்டியல் நீளுமேத் தவிர எதைத் தொட வேண்டும் எதைச் செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லப் பட மாட்டாது . அதைக் கேட்கும்போதெல்லாம் ஏன் பெண்ணாய்ப் பிறந்தோமென்று அவளுக்குள்ளே வரும் கேள்விகள் .தனி தட்டு , தனி டம்ளர் , பாய் என்று எல்லாமே இவளுடன் சேர்ந்து மாதம் மூன்று நாட்கள் வெளிநடப்பு செய்ய வேண்டி வரும் . அதிலும் சில பண்டிகைக் காலமானால் கேட்கவே வேண்டாம் "ஒரு நல்ல நாள் கிடையாது சரியா சாமி கும்பிட முடியுதா " .கேட்ட மாத்திரத்தில் அப்படியே தன்னுள் குறுகிப் போவாள் .
"பாதையோரத்து வயலும் வீடும் ஆகாது "
வயல் என்றால்
விளையும் பயிர் எல்லாம்
போய்வரும் பாதசாரிகள் வாயில்
வீடென்றால் நம் வீட்டு பிரச்னை
எல்லாம் நடப்போர் காதில் .
வெகு சில மாதங்களில் இதற்கு பழகிப் போன அவள் அடுத்து எந்தப் பண்டிகை வந்தாலும் அதை நினைத்து சந்தோசம் கொள்வதை விட நாள்கணக்கு எண்ணுவதிலேயே நாட்கள் போகும் . சரியாய் பண்டிகை சமயமென்றால் பண்டிகை நாள் நெருங்க நெருங்க திக் திக் கதைதான் . அவளால் அவள் வீட்டு பூஜை தடைபடுவதை அவள் விரும்பவில்லை . சுற்றம் உள்ள இவள் வயதொத்த பெண்களின் அறிவுரை "சாமியை மனசுல நினைச்சுட்டு கை அல்லது காலின் பெருவிரலில் மஞ்சள் தேய்த்து ஒரு வெள்ளை நூலைக் கட்டு நீ அதைக் கழற்றும் வரையில் நிம்மதியாய் இருக்கலாம் ". அடுத்து வந்த பண்டிகைக் காலங்கள் வெள்ளை நூலினால் காப்பற்றப் பட்டன . கால மாற்றத்தில் எல்லாவற்றிக்கும் பழகியும் போனாள் .
உங்களுக்கும் தெரியாமல் இவளைப் போல் பல அவள்கள் உங்கள் வீட்டிலும் இருக்கலாம் .அன்னையாய் , மனைவியாய் , காதலியாய் . தோழியாய் , சகோதரியாய் , உங்களை ஒரு நிமிடம் கடந்து போகும் ஒவ்வொரு பெண்ணிலும் இவளைப் போல் ஒரு அவள் ஒளிந்து கொண்டிருக்கலாம் . ஏதோ ஒரு உறவின் மூலமே அவளின் உடல்ரீதியான பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் நீங்கள் அப்படி ஒரு உறவே இல்லாத போதும் அதைப் புரிந்து கொண்டு வழிவிடலாமே. முடியா சமயத்தில் அடுப்புக்கு விடுப்பு கொடுத்து மனைவிக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் உடன் பணியாற்றும் அவளுக்கும் அவள் முகம் காண்பிக்கும் சோர்வு பார்த்து கொஞ்சம் விடுப்பு தரலாமே .

