பள்ளி , கல்லூரி என்று படிப்பிலேயே பாதி நாட்கள் போனதால் சில நெருங்கிய உறவுகளைக் கூட பல வருடங்களாய் பார்க்க முடியாமல் போனது . ஏதோ ஒரு நல்ல நாளில் என் மாமா மகனை பார்க்க நேரிட்டது . என்ன படிக்கிறாய் என்றேன் எட்டு படிக்கிறேன் என்றான் நெளிந்துகொண்டே . எனக்கோ சிரிப்பு வருது "அம்மா நான் வளர்த்த பையன்மா எவ்ளோ பெரிய பையனா வளர்ந்துட்டான், என் மேல போட்டு தான்மா இவன தூங்க வைப்பேன் " இப்படி சொன்னதும் அந்த இடத்தை விட்டே ஓடிப் போய்ட்டான் . இந்தப் பசங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் இந்த வெட்கம் வருதோ தெரியல .
என்னுடைய ஆறாம் வகுப்பு பள்ளி இரண்டு மாத விடுமுறையில் இவன் எட்டு மாத குழந்தையாய் என் கைகளில் வந்து சேர்ந்தான் . அறுவடை நேரம் அம்மாவிற்கு வயலில் உதவியாய் அத்தை . அந்த வயதில் என்னை நம்பி ஒரு குழந்தையை நாள் முழுவதும் என்னிடம் விட்டுச் செல்ல அத்தைக்கு வந்த நம்பிக்கை என்ன ? இத்தனைக்கும் வீட்டில் கடைசி பிள்ளை நான் . எனக்கு அடுத்து வீட்டில் எந்த சின்னக் குழந்தையும் இல்லை . ஆனாலும் தினமும் அவனை குளிக்க வைத்து , சாப்பிட குடுத்து தொட்டிலில் போட்டு ஆட்டினால் தூங்க மாட்டான் என்று என் மேலே படுக்க வைத்து தட்டி கொடுத்துக் கொண்டே இருந்தால் தூங்கி விடுவான் . அதன் பின்பு அவனை தொட்டிலில் மேடு பள்ளம் பார்த்து படுக்க வைத்து ஆட்டி ........எப்படி செய்தேன் ? . எங்கள் வீட்டு பழக்கம் எலோருமே ஒரு வயது வரை அப்பா மார்பிலே படுத்துதான் உறங்குவோம் , இப்பொழுது அதே பழக்கம் என் அண்ணா குழந்தைகளிடமும் பார்க்கிறேன் . இரண்டு வயது வரை என் செல்ல குட்டிமா என் மேலே படுத்துதான் உறங்கினாள்.
என் அக்கா பிறந்த குழந்தைகளை தலை நிற்க்கும் வரை கைகளில் வாங்க மாட்டாள், மொழு மொழுவென்று எண்ணெய் தடவி வைத்திருக்கும் குழந்தைகளையும் வாங்க மாட்டாள் எங்கே கிழே விட்டுவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு . பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைகளை நான் கைகளில் எடுக்கும்பொழுது என் அக்கா விற்கு அம்மாவிடம் இருந்து திட்டு விழும் "பாரு உன்ன விட மூணு வயசு சின்னவ அவ தூக்குறா நீ பயப்படுற ".
ஒருமுறை காலேஜ் படிக்கும்பொழுது நண்பனின் வீட்டு கிரகப் பிரவேசத்தில் இருக்கும்பொழுது அவன் உறவினர் குழந்தை ஒன்று யாரிடமும் செல்லாமல் அடம் பிடிக்க என்னிடம் மட்டும் ஒட்டிக்கொண்டது பிறகு யாரிடமும் போகல அந்தக் குழந்தையின் அம்மாவிற்கே ஆச்சர்யம் , எனக்கும்தான் . கூடவே இருப்பா என் அக்கா மாசத்துக்கு ஒருமுறை போய் தலையை காட்டும் என்னிடம் அவ்வளவு ஒட்டிக்கொள்வாள் என் குட்டிமா . இது யாரு அத்தை என்று அவளிடம் என்னைக் காட்டி கேட்டால் "எங்க மந்தாத்தை " என் பெயர் அவள் வாயில் இப்படித்தான் வரும் . போன வாரம் அண்ணாவிடம் இருந்து போன் "எலேய் குட்டிமா உன்கிட்ட பேசணும்னு அலறால்ல அவகிட்ட பேசு " . ஒரு அரை மணி நேரம் அவகிட்ட பேசணும் நடுவுல யார் கிட்டயும் போன் போகாது அப்பா கிட்ட குடுமான்னு சொன்னாக் கூட "இக்கும் வேணாம் " என்றுதான் பதில் வரும் . ஒருநாள் இவ மட்டுமே பேசி இவளுக்கு மூத்த அண்ணனிடம் போன் தராமல் போக அவன் அழுதுகிட்டே தூங்க போய்ட்டான் . அடுத்த நாள் அவன்கிட்ட போன் . நானும் எப்பொழுதுமே கொஞ்சிக் கொண்டிருக்கும் அத்தை அல்ல , அடியும் அன்பும் கலந்துதான் குடுக்குறேன் இருந்தாலும் இந்தக் குழந்தைகள் என்னிடம் காட்டும் பாசம் .......என்னுடைய முதல் குழந்தை என் குட்டிமா இவளை விட்டு எப்படி நான் ..........?
பிரெண்ட்ஸ் கூட வெளில போகும்போதும் எந்தக் குழந்தையை பார்த்தாலும் ஏதாவது செய்யணும் போல இருக்கும் , எப்படியாவது பக்கத்துல போகும்பொழுது தலையில் ஒரு செல்ல தட்டு அந்தக் குழந்தையும் பார்த்து சிரிக்குமே ஐயோ ....... சில நேரம் பிரெண்ட்ஸ் திட்டுவாங்க . சிக்னல்ல பஸ்ல இருக்கும்பொழுது கிழே பைக்கில் இருக்கும் சில குழந்தைகள் பக்கத்துலையே அழகளாக பசங்க இருந்தாலும் கண்கள் என்னவோ குழந்தைகளிடமே செல்லும் . பார்த்துகிட்டே இருப்பேன் கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தையும் என்னைப் பார்க்கும் அதுக்கு எப்படி தெரிந்தது நான் பார்ப்பது ? குழந்தைக்கு மட்டும்தான் குழந்தை மனது புரியுமோ ?
என் நண்பன் சொல்லுவான் என் சிக்கலான நேரங்களில் நீ எனக்கு சிறந்த வழிகாட்டியாய் இருப்பாய் .அப்படி இருக்கும் நீ சில நேரங்களில் குழந்தை மாதிரி பேசுவ எப்படி இப்படி ? எனக்கும் புரியல . இப்படி பண்ணக் கூடாது , இப்படி பேசக் கூடாது நாம வளர்ந்துட்டோம் என்று என்னதான் கடிவாளம் போட்டாலும் சின்ன பிள்ளைத் தனமா இருக்குறது மட்டும் மாத்தவே முடியல . " நீ குழந்தை வளர்ந்த குழந்தை " இப்படி சமீபத்தில் நண்பனிடமிருந்து கேட்ட பொழுது என்ன சொல்வது ? உன்கிட்ட மட்டும் அல்ல நெருக்கமானவர்களிடம் நான் இப்படித்தான் இருக்கிறேன் என்று எப்படி சொல்லி புரிய வைப்பது ?
வளர்ந்தவர்களுக்கு எல்லாம் ஒரு முன்கோபியாய் , முரட்டுப் பெண்ணாய் தெரியும் நான் குழந்தைகளுக்கு மட்டும் குழந்தையாய் தெரிவதேன் ? குழந்தைகளுக்கு மட்டும் எனனை பிடிப்பதேன் ?
