நாற்பது வருடங்களுக்கு முன்பு அம்மா திருமணம் முடிந்து வரும்பொழுது பாட்டி சீதனமாய் அனுப்பிய குட்டி பசு அதன் சந்ததிகள் இன்று வரை எங்கள் வீட்டு தொழுவத்தில் . ஊர்பக்கம் மாடில்லா சம்சாரி வீடு வெற்று வீடு மாதிரி இருக்கும் .மாடு சினையாய் இருக்கும்பொழுதே ரொம்ப சந்தோசமா இருப்பேன் . மாட்டின் மடி இறங்க இறங்க எதிர்பார்ப்புகள் அதிகமாகும் .புதுசா வர கன்னுக்குட்டிதான் கொஞ்ச நாள் எனக்கு விளையாட்டு பொம்மை . தினமும் பள்ளி விட்டு வந்தவுடன் அதைக் கொஞ்சுவதே வேலையாய் இருக்கும் . மடிமீது அதன் தலையை வைத்து தடவிக் கொண்டே ,அதன் தலையோடு என் தலை வைத்து முட்டு பழகிக் கொடுத்து ஒரு ஆறு மாதம் அது எனக்கு ஒரு குழந்தை மாதிரி இருக்கும் . மாட்டுக்கெல்லாம் முட்டு பழகிக் கொடுத்துட்டே இரு உன்னை ஒருநாள் போட்டு வெளுக்கணும் என்று காதிலே விழும் அம்மாவின் அர்ச்சனைகள் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடப்படும் .
கண்ணு குட்டி கொஞ்சம் பெரிய சைஸ் என்பதால் கூட வைத்து தூங்க மட்டும் அனுமதி கிடையாது . ஆட்டுக் குட்டி கொஞ்ச நாள் எனக்கும் அக்காக்கும் நடுவிலே தூங்கும் .
அப்பா அண்ணா எல்லாம் மாடுகளை அடிப்பதால் அவர்கள் கையில் மட்டும் மாடு பிடிபடாது . மாட்டின் மூக்கணாங்கயிறு உயரம் கூட இல்லாத நான் அதைப் பிடிக்கையில் ஒரு அடி கூட நகராமல் நிற்கும் . அதுவரையிலும் அண்ணாவும் அப்பாவும் வைக்கபோர் சுத்தி சுத்தி கபடி விளையாடுவாங்க மாடுதான் நிற்காது . அம்மா , அக்கா , அப்புறம் குட்டி மதார் கைகளில் மட்டும் மாடுகள் பிடிபடும் . ஒருமுறை அக்கா , அம்மா இல்லாத நேரத்தில் மாடு பிடிச்சு குடுக்க சொல்லி அப்பா நான் மூன்றாம் வகுப்பு படிக்கையிலே பள்ளிக்கே வந்துட்டார் . இப்போ வரைக்கும் காளைமாடுகள் மட்டும்தான் பிடிப்பேன் பசு மாடுகள் எல்லாம் முறைக்கும் , முட்ட வரும் . (பெண்ணுக்கு பெண் எதிரி ).
புல் , வைக்கோல் வாழைப் பல தோல் வரை ,இருக்கும் அத்தனை மாடுகளுக்கும் சமமாகவே குடுப்போம் .(அம்மாவின் பகிர்ந்துண்ணல் பழக்கம் அது , ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீடுகளில் பகிர்ந்துண்ணல் மிஸ்ஸிங் )
பழத்தோல் குடுக்கும்பொழுது அதன் சொரசொர நாக்கு கைகளில் படும் . அப்படியே அது நம் கைகளில் கொழ கொழ எச்சிலுடன் நக்கிகொண்டே சாப்பிடும். அந்த நேரங்களில் அருவெறுப்பு தெரியாமல் அதன் பாசம் மட்டுமே தெரியும் . ஒருமுறை நிறைய மாடுகள் இருக்கு பார்க்க முடியவில்லை என்று சொல்லி வேறு ஊரைச் சார்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டோம் . ஒரு சோடி காளை மாடுகளும் அவர்கள் ஊர் போய் சேர்ந்தாச்சு . ஒரு வாரத்திற்குள் விற்ற மாடுகள் எங்கள் தொழுவத்தில் மற்ற மாடுகளுடன் . பார்த்த எங்களுக்கோ அதிர்ச்சி . மற்ற மாடுகள் வழக்கமாய் மேய்ச்சலுக்கு போன இடத்தில் விற்ற மாடுகளும் வந்து சேர்ந்து விட்டன . எங்களுக்கும் என்ன பண்றது என்றே தெரியவில்லை . அப்பாதான் பொருள் வித்து பணமும் வாங்கியாச்சு என்று சொல்லி மாடு வாங்கிப் போனவர்களுக்கு தகவல் சொல்லி மறுபடியும் அவர் கைகளில் பிடித்துக் கொடுக்கையில் அனைவர் கண்ணிலும் கண்ணீர் , அந்த சின்ன வயசுல அக்காவும் நானும் மாட்டின் கண்களையே பார்த்துக் கொண்டு கண்ணீரோடு நின்றோம் . அப்பா வேணாம்பா குடுக்க வேணாம்பா பணத்தை திருப்பி குடுத்துரலாம் நம்ம மாடு நம்ம கிட்டயே இருக்கட்டும் என்று எவ்வளவு சொல்லியும் அப்பா கேட்கவேயில்லை . இப்போ வரைக்கும் அந்த கருப்பு , வெள்ளை சோடி மாடுகளை மறக்க முடியல . கூட்டமா வாசலில் உக்கார்ந்து பேசும் இடத்தில் வந்து சில நேரம் மாடு நிற்கும் அதன் முகத்தைக் கொண்டு வந்து நம் மேல உரசிக் கொண்டே இருக்கும் , நாமும் புரிந்து கொண்டு அதை தடவிக் குடுக்க வேண்டும் , தடவும் வரையிலும் அந்த இடத்தை விட்டு போகாது .
அறுவடை எல்லாம் முடிந்த பின்னர் கோடை காலத்தில் மேய்ச்சலுக்கு ஒரு மூன்று மாதங்கள் எல்லா மாடுகளும் காட்டிற்கு அனுப்பப்படும் . இடையிடையே அப்பா மாடுகளைப் பார்க்க போகையில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் அப்பா நிற்கும் இடம் தேடி வந்து நிற்குமாம் .அப்பா சொல்கையில் ஆச்சர்யமாய் இருக்கும் மாடுகளுக்கு தன் வீட்டு மனிதர்களின் வாசம் , குரல் தெரியும் . உறவுக்கார அண்ணா ஒருவர் எங்கள் வீட்டை கடந்து போகையில் கட்டி போட்டிருக்கும் ஒரு பசு மாடு மட்டும் வித்தியாசமாய் சத்தம் போட்டுக் கொண்டே கையிறை அவுக்க முயற்சி பண்ணும் . அதன் வித்தியாசமான நடவடிக்கைகள் , சத்தங்கள் கேட்டாலே அந்த அண்ணா போறாங்க என்று தெரிந்து கொள்ளலாம் . "அண்ணா எங்க மாட்டை என்ன பண்ணீங்க ? உங்களைப் பார்த்தாலே அது சீறுது " என்று கேட்டால் "ஏல உங்க மாட்டை நான் ஏதும் செய்யல என்று சொல்வார் . அவர் அந்த மாட்டை மட்டும் என்ன செய்தார் என்று அதுக்கு மட்டுமே தெரியும் . இந்த மாடுங்க எல்லாம் மேயப் போகும்போது பார்க்கணுமே ஒரு மாடு மட்டும் போய் எந்த மாடுகிட்டையாவது சண்டை இழுக்கும் . அது பதிலுக்கு சண்டைக்கு வரும்பொழுது சண்டை இழுத்த மாடு மற்ற மாடுகளுடன் சேர்ந்து கொள்ளும் நான் தனி ஆள் அல்ல என்று சொல்வது மாதிரி இருக்கும் . உடனே இவங்களும் ஒரு குழுவா போய் சண்டை போடுவாங்க . ஒரு தொழுவத்து மாடுகளிடம் இருக்கும் இந்த ஒற்றுமைக் குணம் ஒரு குடும்பத்து மனிதர்களிடம் கூட பார்க்க முடியாது .
காலேஜ் ஹாஸ்டல் வரும் வரையிலும் வெளிக் கடைகளில்
பால் , டீ , காபி சாப்பிட மாட்டேன் . அப்படியே குடித்தாலும் அடுத்த நிமிடம் வாந்தி வந்திடும் . நுரை பொங்க பொங்க சூடா அம்மா சொம்பிலே கறந்து கொடுக்கும் பால் ............இப்போ நைஸ் , ஆரோக்கியா என்று பாக்கெட் பால் குடிக்கையில் எப்படி இருந்த நான் இப்படி ஆய்டேனே என்று இருக்கும் .எவ்வளவு பால் கறந்தாலும் சின்னக் குழந்தைகள் தவிர பணத்துக்கு கடைகளுக்கு இதுவரை குடுத்தது இல்லை . சென்னையில் சில நேரங்களில் ரோட்டோரம் நிற்கையில் சில மாடுகள் கடந்து போகையில் அருகில் இருப்போர் ஏதோ பாம்பை பார்த்த மாதிரி பயந்து போகையில் சாதாரணமாய் நிற்கும் என்னை ஏதோ ஜந்து மாதிரி பார்பாங்க . அவர்களுக்கு எங்கே தெரியும் நான் அதிகம் பழகியது மனிதர்களை விட மாடுகளிடம்தான் என்று .




