பங்குனி உத்திர திருவிழா பற்றியும் சாஸ்தா கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் பற்றியும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே . எங்க ஊர்லயும் ஒரு சாஸ்தா கோவில் இருக்கு . கோவில் பற்றிய சிறப்புகள் பற்றி நான் சொல்லபோவதில்லை அக்கோவிலை வைத்து நடக்கும் உள்ளூர் கோஷ்டி சண்டைக்கு ஒரு முடிவு கட்டணும்.
மற்ற சாஸ்தா கோவில்கள் போல் இல்லாமல் இங்கே வருடம் முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பாங்க . நாகர்கோவில் , சென்னை , மதுரை , கோவை போன்ற தொலைவிடங்களில் இருந்து கூட இங்கு வரும் பக்தர்கள் அதிகம் . அருகிலேயே வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் ஏரி, பசுமையான வயல் வெளிகள் ,சுற்றிலும் மரங்கள் , தங்கி ஓய்வெடுக்க அறைகள் என்று அமைதியாய் மக்கள் ஓய்வு நேரங்களில் வந்து செல்ல ஒரு நல்ல இடம் . நான் ஓடிபிடித்து விளையாண்ட காலங்களில் வெறும் மண்தரையாய் இருந்த இடம் இப்பொழுது கான்கிரீட் ,tile என்று கோவிலே ஆடம்பரமாய் உருமாறி நிற்கிறது .கோவிலுக்கு வரும் நன்கொடையில் இவையெல்லாம் செய்திருப்பரோ என்ற என் எண்ணத்தில் மண் விழுந்தது . அனைத்து கட்டிடங்களும் , சின்ன சின்ன வேலைகளும் தனிப்பட்ட நபர்களால் கோவிலுக்கு அன்பளிப்பாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளன என்பது அதில் உள்ள கல்வெட்டு சொல்கிறது .
கோவிலை சுற்றி வரும்பொழுது ஒரு சுவர் முழுவதும் நன்கொடை பற்றிய கல்வெட்டு இருக்கு . அதிலும் 2008 ஆம் ஆண்டு நடந்த கும்பாவிஷேகதிர்க்கு வந்த நன்கொடையில் லட்சத்தில் ஆரம்பித்து 30000 வரையான தகவல் மட்டும் உள்ளது அது மட்டுமே 7 லட்சம் . இதுபோக இதற்கும் குறைவாய் வந்த நன்கொடைகள் , உண்டியல் பணம் இவற்றின் கதி ? திருநெல்வேலியைச் சார்ந்த ஒருவர் இதன் கணக்கு வழக்குகளைப் பார்க்க இதற்க்கு கமிட்டி என்ற பெயரில் சிலர் இருக்க அவரவர் கையில் கிடைக்கும் பணம் குதிரை வாயிலே போன கொள்ளுமாதிரிதான் . கமிட்டியைச் சார்ந்த உள்ளூர் நபர் ஒருவர் 2 வருடங்களாய் கோவிலின் கணக்குகளை நிர்வகிக்க ஏற்கனவே இவருக்கும் இன்னொருவருக்கும் வேறொரு விசயத்தில் இருந்த தகராறு வளர்ந்து வளர்ந்து இக்கோவிலின் நிர்வாகத்தில் வந்து நிற்கிறது . போன வருட உத்திர திருவிழாவில் கைகலப்பு வந்து இனி நிர்வாகம் எங்கள் வசமே என்று எதிர்கமிட்டி இவரிடமிருந்து பையை பிடுங்கி விட்டனர் . அவரும் பிரச்னை வளர்ந்து வர இருப்பிடத்தையே மாற்றி விட்டார் , இருந்தும் இக்கோவிலின் கமிட்டியாய் இனி நானும் என்னை சேர்ந்த சிலரும் மட்டுமே இருப்போம் என்று மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர என் அண்ணா கூறியவரை இன்னும் இரண்டு மாதங்களில் யாராவது ஒரு கமிட்டிக்கு சாதகமாய் தீர்ப்பு வரும் என்று சொல்கிறார் . கோர்ட் வரை இந்த பிரச்னை போயாச்சு அப்படினா கோவில் அரசாங்கம் கிட்ட போய்டும்தானே என்பது என்னுடைய சந்தேகம் .அண்ணா சொல்றார் கோவிலுக்கு இவ்வளவு வருமானம் வரும் செய்தி கோர்ட்க்கு தெரியபடுத்த மாட்டாங்க அதனால இது மறுபடியும் ஏதாவது ஒரு கமிட்டிக்கே வரும் .இக்கோவிலில் 4 பூசாரிகள் இருக்காங்க இவர்களுக்கு சம்பளம் கூட இந்த பணத்தில் குடுப்பது இல்லை . கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவர்களின் தட்டில் இடுவது மட்டுமே இவர்களுக்கு .
வீட்டு பக்கத்திலே 1 Km தொலைவில் கோவில் இருந்தும் சென்று பல வருடங்களாகிறது . இரண்டு நாள் முன்னம் சென்ற பொழுதே கோவிலின் பிரச்னைகள் அனைத்தும் அம்மா , அண்ணாவால் சொல்ல பட்டன . இப்பொழுது நிர்வாகத்தில் இருக்கும் நபர்களுக்கு உள்ளூர் காவல்துறையும் கைக்குள் . கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பணத்தை யார் அமுக்குவது என்று தான் இப்போ பெரிய பிரச்னையாய் இருக்கு . இதுவரை காவல்துறை கால் படாத எங்கள் ஊரில் இப்பொழுது இந்த உட்பூசலால் காவல்துறை துணையில்லாமல் எந்த ஒரு பொது காரியமும் நடத்த முடியவில்லை . இதுவரைக்கும் வாய்த்தகராறில் இருந்த இப்பிரச்னை இன்று கைகலப்பில் வந்து முடிந்திருக்கிறது . இது மேலும் முன்னேறி அடுத்த கட்டமான வெட்டு , குத்து , ரத்தம் பார்பதற்குள் இக்கோவில் அரசு கைவசம் சென்றால் நன்றாய் இருக்கும் . யார்மேல அடிவிழுந்தாலும் , யார் ரத்தம் சிந்தினாலும் இரண்டு பக்கமும் இருப்பது என் சொந்தங்களே . இதுவரை ஆடு , கோழி ரத்தம் மட்டுமே பார்த்த அக்கோவில் மண் எங்கே மனித ரத்தமும் பார்த்துடுமோனு பயமா இருக்கு . எங்க ஊர்ல கொலை மட்டும்தான் இன்னும் நடக்கல எங்கே இந்த பணத்தாசையில அதுவும் நடந்துடுமோனு இருக்கு . இதற்க்கு ஒரே முடிவு இக்கோவில் இந்து அறநிலையத்துறை வசம் போகணும் . தீர்ப்பு எந்த கமிட்டிக்கு போனாலும் பிரச்னைதான் , இரண்டு பேருமே பணத்தாசை பிடிச்சவங்க . மக்களின் நன்கொடை பணம் யாருக்கோ செல்வதைவிட அது அரசு கைக்கு போய் வர போற பிரசனைகளை தடுக்கலாம் . இரண்டு பேருமே கோவிலுக்கு ஏதும் செய்யப்போறதில்லை . இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது ? இந்து அறநிலையத்துறை பார்வைக்கு இதை எப்படி கொண்டுபோய் சேர்ப்பது ? எத்தனையோ பிரச்னைகளுக்கு தீர்வு சொன்ன இப்பதிவுலகம் எங்க ஊர் கோஷ்டி மோதலுக்கும் அக்கோவில் பிரச்னைக்கும் தீர்வு சொல்லுமா ? உங்களை மட்டுமே நம்பி இதை உங்கள் முன் நல்லதொரு முடிவை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் வைக்கிறேன் .
