வேலையை விட்டு சொந்த ஊர் போனது எவ்வளவு சுகமா சாப்பிட்டு நிம்மதியா உறங்கி எழ முடிஞ்சது . இந்த சென்னை காத்து இல்லாமல் மனசு ரொம்ப அமைதியா இருந்தது , கோவம் எல்லாம் சுத்தமா மனசுல உணரப் படவே இல்லை . உண்மையில் நாம் கோவப்படுவது நமக்கும் நம்மைச் சுற்றி நடப்பவைகளையும் கண்கள் பார்த்து ஆள் மனதில் படிந்து ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அது நம் கட்டுப்பாடையும் மீறி வெளி வருது . என்னுடைய அதிகப் படியான கோவம் கூட குறைந்து அண்ணா பையனுடன் ரொம்ப நேரம் சுட்டி டிவி பார்த்து மனசு விட்டு சிரிக்க முடிஞ்சது .சென்னை வந்து ஒரு வாரத்தில் மீண்டும் வேலை கிடைத்ததும் அந்த பரபரப்பான சூழலில் மீண்டும் மாட்டிக்கொண்டதும் மறுபடியும் எனக்குள் இருக்கும் கோவம் அடி மனதில் சேர ஆரம்பித்தது .
நேற்று வழக்கம் போல் 7 மணிக்கு வைத்திருந்த அலாரம் எனக்கே தெரியாம அணைத்து வைத்து ஏதோ ஒரு உள்ளுணர்வில் கண்முழிக்க மணி 7 .50 . வேளையில் சேர்ந்த மூன்று நாட்களுமே பத்து நிமிட தாமதம் . இன்றும் லேட் ஆக போகுதே என்று அரக்க பறக்க கிளம்பி(நல்ல வேலை ஆபீஸ் மெஸ் புண்ணியத்தில் காலைச் சமையலில் இருந்து விடுதலை ) பத்து நிமிட நடைக்கு பின் பேருந்து நிறுத்தம் மற்ற நாள் விட அரை மணி நேரம் முன்னதாகவே போய்ச் சேர்ந்தேன் , பஸ் மட்டும் வரல . அது என்னவோ நாம லேட்டா போனா உடனே பஸ் வரும் . சீக்கிரம் போனா பஸ் லேட்டா வரும் . ஒரு வழியா பஸ் வந்து சேர்ந்தது . சென்னையின் ஹய்டெக் இடி என்றால் அது டீலக்ஸ் பஸ் இடிதான் . வேகமா போகுமே என்று அதிக விலை கொடுத்து அதிக இடி வாங்குவதும் இங்கதான் .
பஸ் உள்ளே லேடீஸ் சீட்ல இரண்டு ஆண்கள் இருக்க , நானும் டிக்கெட் வாங்கி சரி வழக்கம் போல இன்னைக்கும் நிக்க வேண்டிதான் என்று மனசுக்குள் நினைக்க , என்னருகில் உக்கார்ந்து இருந்த IT பெண் லேடீஸ் சீட் அவங்களை எழுந்திருக்க சொல்லுங்க என்று என்னிடம் சொல்ல , நாம என்னங்க சொல்றது அவங்களே எழுந்தா நல்லா இருக்கும் இல்ல நடத்துனர் சொல்லணும் என்று சொல்லி நிற்க அடுத்த நிறுத்தத்தில் ஒருவர் இறங்கிட்டார் . சரி இப்போவாவது உக்காரலாம் என்று நினைத்து முடிப்பதற்குள் இன்னொரு ஆண்மகன் உக்கார அந்த பெண் என்னை பார்க்க இரண்டு பேருக்குமே சிரிப்பு வந்திருச்சு . இதுல என்ன ஒரு விஷயம் என்றால் பெண்கள் பகுதியில் நான் மட்டும்தான் நின்னுட்டு வரேன் எங்க அவங்க என்னைப் பார்த்தா நான் எழுந்திருக்க சொல்வேனோ என்று இருவருமே ஜன்னல் வெளியவே பார்வையை வச்சுருக்காங்க .
அடுத்த நிறுத்தம் ஒரு பெண் ஏறி என் பக்கத்தில் வந்து நின்று கொண்டே லேடீஸ் சீட்டில் இருக்கும் ஆண்களையும் அவர்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் என்னையும் பார்த்து அவரும் என்னை பார்த்து சிரிக்க சரி நிக்குறதுக்கு துணைக்கு ஒரு ஆள் என்று நினைச்சுகிட்டேன். அதற்குமேலும் பொறுமை தாங்கமுடியாமல் அந்த IT பெண் திரும்பி இது லேடீஸ் சீட் எழுந்திருங்க என்று சொல்ல ஸ்டார்ட் மியூசிக் . இரண்டு பேரும் அப்படி பேசுறாங்க "அதைச் சொல்ல நீ யாரு , எங்களை எழுந்திருக்க சொல்லி இவங்க சொல்லட்டும் நாங்க எழும்புறோம் உன் வேலை எதுவோ அதைப் பாரு " என்று அந்த பெண்ணைத் திட்ட அந்த பெண்ணும் என்னருகில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் "உங்களுக்காகத்தானே பேசுறேன் நீங்க பேச மாட்டீங்களா" என்று சொல்ல இதுக்கு மேலையும் நாம பேசாம இருந்தா நமக்காக பேசின அந்த பொண்ணு என்ன நினைக்கும் என்று நானும் கலத்தில் இறங்கிட்டேன் . அநேகமாய் நானும் , அந்த IT பெண்ணும் சம வயதாய் இருப்போம் . என்னருகில் நின்று கொண்டிருந்தவர் திருமணமானவர் , நான் எழுந்திருக்க சொல்ல சங்கடமாய் உணர்வேன் என்று அவராவது எழுந்திருக்க சொல்வார் என்று அந்த பெண் நினைத்து அவரிடம் சொல்ல அந்த பொண்ணும் சிரிக்க மட்டும் செய்யுது .
இரண்டு ஆண்களும் ரொம்ப நல்லவங்க மாதிரி IT பொண்ண திட்டுறாங்க . நானும் "சார் ரொம்ப பேசாதீங்க , நீங்க எங்க எழுந்திருக்க சொல்வோமொன்னு வெளியவே பார்த்துட்டு வந்தீங்க நீங்க எங்களை பார்க்காமல் நாங்க எப்படி சொல்ல முடியும் உங்களை தொட்டு கூப்பிட்டு எழுந்திருக்க சொல்லனுமா " என்றேன் . படித்தவர் அலுவலகத்தில் பணி புரிபவர் சொல்றார் "எவளோ (ஐ .டி .பொண்ணு )இவங்களுக்காக பேசுவாளாம் உடனே இவங்களும் (நாங்க )பேசுவாங்கலாம் " என்று சொல்ல சரி கோவம் வந்திடுச்சு . ஹலோ சும்மா அவ இவன்லாம் மரியாதை இல்லாம பேசாதீங்க , நாங்க சொல்லித்தான் நீங்க எழுந்திருக்கணும் என்று இல்ல , லேடீஸ் நிக்குறோம் அதைப் பார்த்து நீங்களே எழுந்திருந்தா அது நல்ல மனுஷத்தனம் அதை விட்டுட்டு அதிகம் பேசாதீங்க என்று நானும் பதிலுக்கு கத்திட்டேன் . எனக்குள்ள அவ்ளோ டென்சன் அடுத்து ஒரு ட்ரெயின் வேற பிடிச்சு போகணும் , அதன் பிறகும் லேட் ஆனா ஒரு ஆட்டோ அதுக்கு ஒரு இருபது தெண்டம் அழணும் இந்த டென்சன்ல மனுஷிக்கு அவங்களை எழுந்திருக்க சொல்லி உக்கார தோணல.(இதுவரைக்கும் நான் பெண்கள் சீட் பக்கம் உக்கார்ந்திருக்கும் ஆண்களை எழுப்பியதில்லை . அவங்களாவே எழுந்தா மட்டும் உக்காருவேன் இல்லைனா பேசாம நின்னுட்டே போய்டுவேன் . சில பெண்கள் ஏறியதும் இது லேடீஸ் சீட் என்று அவங்க சொத்து மாதிரி அதிகாரம் பண்ணும்போது அந்த பெண்கள் மேல்தான் கோவம் வரும் , ஒருமுறை புழுக்கம் தாங்காமல் ஜன்னலோரம் இருக்க விரும்பி லேடீஸ் சைடு நிரம்பிருக்கவே ஆண்கள் பக்கம் உக்கார ஒரு ஆண்மகன் வந்து இது ஆண்கள் சைடு நீங்க லாஸ்ட் சீட் போங்க என்று எனை எழுப்பிவிட்டு அவர் மட்டும் அவர் பெண் மனைவியுடன் அங்கு உக்கார எனக்கு சிரிப்புதான் வந்தது ).
என்னருகில் நின்றுகொண்டிருந்த பெண்ணுக்கு அப்போதான் ரோசம் வருது "சரிங்க இப்போ நாங்க சொல்றோம் எழுந்திருங்க " என்று சொல்ல அதன் பிறகுதான் எழுந்திருக்காங்க . அப்படியும் அவர் பேசிட்டே இருக்கார் . நாங்களும் பதிலுக்கு பேச ஒரு கட்டத்தில் எங்களுக்கும் பேச தெரியும் பேசாம போங்க என்று சொல்றேன் அவரும் அப்படியா வா பேசி பாக்கலாம் என்று வம்பிழுக்க , என்னங்க ஏதோ போட்டு பார்ப்போம் வா என்று சொல்ற மாதிரி சொல்றீங்க எழுந்துடீங்க இதுக்கு மேல அதிகமா பேசிட்டு இருக்காதீங்க என்று நான் முற்றுப்புள்ளி வச்சுட்டேன் . அந்த ஆள் பேசிட்டே இருக்கார். இதுக்கு மேலையும் பேசக் கூடாதுன்னு அமைதி ஆய்ட்டேன் . எந்த லூசும் தன்னை லூசுன்னு ஒத்துக்காது அது மாதிரிதான் தப்பு செஞ்சவங்க தான் தன்னை நிரபராதி என்று காட்டிக்கொள்ள வாதிட்டுக்கொண்டே இருப்பாங்க . அந்த ஆளும் அதைத்தான் செய்தார் . அப்போதான் புரிஞ்சது பெண்கள் லேடீஸ் சீட்டில் இருக்கும் ஆண்களை எழுந்திருக்க சொல்வதில் தப்பே இல்லையென்று. இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு பொது இடத்தில் அவ்வளவு சத்தமா நான் பேசியதே இல்லை , முடிஞ்ச வரைக்கும் அமைதியாய் போய்டுவேன் . ஆனால் எங்களுக்காக பரிந்து பேசிய அப்பெண்ணை அவர் அவமானப் படுத்தி பேசவே அதற்க்கு மேலும் நான் பேசாம இருந்தால் அது அந்த பெண்ணை நான் அசிங்கபடுத்துற மாதிரி இருந்திருக்கும் .

