சார் : தண்ணிக்குள்ளே விழுந்தவங்களை கை கால் இப்படி எதை பிடிச்சும் தூக்கக் கூடாது அவங்க நம்மையும் சேர்த்து உள்ளே இழுக்க வாய்ப்பு இருக்கிறது .அவர்களின் தலை முடியை பிடிச்சுதான் தூக்கணும் .
நான் : சார் தண்ணிக்குள்ளே விழுந்தவங்க மொட்டை தலையா இருந்தா என்ன பண்ணுறது ?
மொத்த வகுப்பும் சிரிக்க ஆசிரியர் முறைக்க இன்னைக்கு வரைக்கும் அதுக்கு பதில் கிடைக்கல ஆயிஷாவின் கேள்விகளைப் போல .

போன வருடபுத்தகத் திருவிழாவில் வாங்க நினைத்து பிரதி கிடைக்காமல் இந்த வருடம் புத்தகத் திருவிழா போன அன்றே தேடி பிடித்து வாங்கிய புத்தகம் .புழுக்கத்துக்கு விசிறும் அட்டையின் அளவே உள்ள குறைந்த பக்கங்கள் .ஒரு நாள் ரயில் பயணத்தில் படிக்க எடுத்து பத்து நிமிடத்துக்கும் குறையாமல் படித்து முடித்ததும் வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தேன் .எதிரே இருந்த பெண்மணி என்னையே பார்க்க இந்த புக் கொஞ்சம் படிங்க என்று அவரிடம் கொடுத்தேன் .ரொம்ப நல்லா இருக்கு என்று திருப்பிக் கொடுத்தார் .அவரைப் போல இதை ஒரு கதையாக கடந்து போக முடியவில்லை . ஆயிசாவுக்கு ஏதோ ஆகப் போகிறது என்ற பயம் பாதியிலேயே வந்து படிக்கும் வேகத்தை அதிகப் படுத்தியது . முடிந்ததும் ஏன் ஆயிஷா இப்படி பண்ணினே என்று மனசுக்குள் எழுந்தகேள்வி திரும்ப திரும்ப காதுகளுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது .அதில் இருந்து மீண்டு வர சில நாட்கள் தேவைப்பட்டன .ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம் ஆயிஷா .
வார்த்தைகளாக படித்த போதே மனதை கணக்க செய்த கதை காட்சிகளாக பார்க்கும் அளவுக்கு திடமில்லை .படக் படக் என்று அடித்துக் கொள்ளும் சத்தம் வெகு அருகில் . மீண்டும் அதே மவுனம் எத்தனை எத்தனை ஆயிஷாக்கள் சமூகத்தால் புத்தகம் எனும் குழிக்குள் நித்தம் புதைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றனர் .
