எல்லோருமே அவர் தட்டில் பணம் போட நான் மட்டும் வெறும் தீபாராதனை மட்டும் எடுக்க கவர் கொடுக்கப் படவில்லை .அடுத்த வரிசை கவர்களும் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு கொடுக்கப் பட காத்திருந்தேன் .அப்போதாவது நான் போடுவேனா என்று பார்த்தவர் கருவறை போய் கவர் எடுத்தவர் மீண்டும் உள்ளே சென்று ஒரு முறி தேங்காயை அவருக்கான தனி இடத்தில் வைத்துவிட்டு வெறுப்புடன் கவர் தந்தார் . புதுவருடமும் அதுவுமாய் காலங்கார்த்தாலே பத்துபேர் முன்னிலையில் அர்ச்சகரை அர்ச்சனை செய்ய விரும்பவில்லை .வாய் வரை வந்த வார்த்தைகளை வெகுவாய் அடக்கிவிட்டு வெளிவந்தேன் .என் கவர் என் கை வருகையில் அவர் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட திருப்தி ,என்னை பழிவாங்கிவிட்டாராம் .அற்பப் பதறு போல் அந்த நொடியில் அவர் என் மனதில் தோன்றியது அவர் மனம் அறியாது .நினைவு தெரிந்த நாளில் மிக அமைதியாய் என்னைக் கட்டுபடுத்திக் கொண்டு வந்தது இதுவாகத்தான் இருக்கும் .
அந்த இடத்தில் அவரின் நடவடிக்கை வாசலுக்கு வெளியே ஏந்தியிருக்கும் தட்டுக்கும் கர்பகிரகத்தில் அவர் ஏந்தியிருக்கும் தட்டுக்கும் பெரிதாய் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை . தட்டுகள் இருக்கும் இடம் வேண்டுமானால் மாறி இருக்கலாம் அடிப்படையில் நோக்கம் என்னவோ ஒன்றுதான் . அவர் அர்ச்சனை செய்ய அரசாங்கம் சம்பளம் தருகிறது .நானும் அர்ச்சனை முறையாய் அர்ச்சனை சீட்டு வாங்கித்தான் செய்கிறேன் . சின்னவயதிலிருந்தே எனக்குள் இருக்கும் ஒரு குணம் கோயில்கள் போனால் நான் காணிக்கை இடுவது ஒரு ரூபாயாக இருந்தாலும் அது கோயில் உண்டியலாகத்தான் இருக்கும் .எந்த குருக்களின் தட்டிலும் நான் காணிக்கை இட்டதும் இல்லை .எவர் ஒருவர் அவர்கள் தட்டில் காணிக்கை இடுகின்றனரோ அவர்களுக்கு பிரசாதம் காகிதத்தில் மடித்துக் கொடுக்கப்படும் கூடவே விசேசித்த பூவும் ஒரு துண்டு வரும் .தீபாராதனை மட்டும் எடுப்பவர்களுக்கு பிரசாதம் கொடுக்கவோ அவர்களாகவே எடுத்துக் கொள்ளவோக் கூட அங்கே நேரம் இருக்காது .அந்த அளவுக்கு சில அர்ச்சகர்களின் மனம் பெரியது .பிரசாதம் கொடுக்கும்போதும் எங்கே நம் கை அவர்களை தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பிரசாதம் குடுக்கும் அவர்கள் கை இருக்கும் உயரம் பார்த்து பல முறை சிரித்திருக்கிறேன் .அந்த உயரத்தில் அவர்கள் தொட்டும் தொடாமலும் போடும் பிரசாதம் பல நேரங்களில் காற்றிலே போய்விடும் .
பணம் இருக்கிறது என்று இருப்பவனுக்கு செய்வதைவிடவும் ஒருவனுக்கு ஒருவேளை பசியாற கோயில் வாசலில் காத்திருப்பவனுக்கு கொடுக்கலாம் .மற்றவர்கள் முன்னிலையில் பகட்டாய் பர்ஸ் பிரித்து அலட்சியமாய் எடுத்துப் போடும் நோட்டும் அதற்கு கிடைக்கும் சிறப்பு கவனிப்பும் அவர்கள் எந்த நோக்கத்துக்காக கோயில் வந்தனரோ அது அடியோடு அழிந்து போகும் . இபப்டி கொடுத்து கொடுத்தே எல்லோரிடமும் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்களை வளர்த்து விட்டது நாம்தான் .இதுவும் ஒருவகை லஞ்சமே .இன்றைய பொழுது முழுவதும் அந்த அர்ச்சகரின் செயலுக்கு ஒரு சிறு எதிர்ப்பு கூட காட்டாமல் வந்துவிட்டோமே என்று நினைத்து மனம் கொதித்துக் கொண்டிருக்கிறேன் . இன்னொருமுறையும் அதே கோயில் செல்ல வேண்டும் அர்ச்சனையும் செய்திட வேண்டும் .அந்த அர்ச்சகரே இருக்க வேண்டும் நான் தட்டில் காணிக்கை இடப் போவதுமில்லை அவர் எனக்கு அர்ச்சனைத் தேங்காய் தரப் போவதுமில்லை அந்த நொடியில் சொல்ல வேண்டும் இந்த முறை எனக்கு நீங்கள் அரை முறி தேங்காய் கூட தர வேண்டாம் .முழுத் தேங்காயும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என் பெயரைச் சொல்லி சாப்பிடுங்கள் என்று அவர் முகத்துக்கு நேராய் சொல்லிவிட்டு வர வேண்டும் .இனி எவரிடமும் அவர் காணிக்கை எதிர்பார்த்து இறைவனுக்கு சேவகமும் செய்திடக் கூடாது .இந்த பதிவு குறிப்பிட்ட எந்த ஒரு சமுதாயத்தையும் அதைச் சார்ந்த மக்களையும் காயப் படுத்த அல்ல .பல வருடங்களாய் பார்த்து நொந்து போன நினைவுகளின் வெளிப்பாடுதான் .கறி மீன் சாப்பிட்டுக் கொண்டு ஐயனாருக்கும் சுடலை மாடனுக்கும் சூடம் காட்டும் சராசரி மனிதன் வேதங்கள் பல கற்று சாஸ்திரங்களில் மூழ்கிய பல அந்தனரகளைவிடவும் மேலானவன் . இந்த வரிகளுக்காக என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களை வரவேற்கிறேன் .
